கிச்சன் டைரீஸ் !!(மகளிர் பக்கம்)
இண்டர்மிட்டன்ட் என்ற சொல்லுக்கு சீரற்ற இடைவேளை என்று தோராயமாக பொருள் சொல்லலாம். பொதுவாக, நாம் எல்லா டயட்களிலும் குறிப்பிட்ட உணவு இடைவேளைக்கு ஒருமுறை தவறாமல் உண்போம். ஆனால், இண்டர்மிட்டன்ட் டயட்டில் ஒரு உணவு இடைவேளைக்கும் இன்னொரு உணவு இடைவேளைக்கும் இடையே ஒரே சீரான கால வித்தியாசம் இருக்காது. அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. மேலும், இண்டர்மிட்டன்ட் டயட் என்பது தனித்துவமான உணவுகளைக் கொண்ட டயட் முறை அல்ல.
நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் எதனையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். மாறாக, அவற்றைச் சாப்பிடும் கால இடைவேளையை மட்டும் மாற்றிக்கொண்டால் போதும். யெஸ், நீங்கள் நினைத்தது சரிதான். சென்ற இதழில் நாம் பார்த்த வாரியர் டயட் என்பதுமே ஒருவகை இண்டர்மிட்டன்ட் டயட்தான். நம் உடலின் செயல்பாட்டை உணவு நேரம், விரத நேரம் என இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் இதன் நிபுணர்கள். ஆங்கிலத்தில் இதை Fed state, Fasting state என்கிறார்கள்.
உணவு நேரம் என்பது ஓர் உணவை நாம் உண்ணத்தொடங்கும் விநாடியில் தொடங்கி அந்த உணவு முழுதாய் செரிமானம் ஆகும் நான்கைந்து மணி நேரம் வரை நீடிக்கும் காலம். அதன் பிறகு விரத நேரம் தொடங்குகிறது. அப்போது முதல் சுமார் எட்டு மணி நேரம் வரை விரத நேரம் நீடிக்கும். உணவு நேரத்தில் நம் உடல் கொழுப்பை எரிக்க மிகவும் சிரமப்படும். ஏனெனில் அப்போது உடலில் இன்சுலின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். விரத நேரத்தில் உடலுக்கு செரிமான வேலை கிடையாது என்பதால் அப்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்கத் தொடங்கும்.
ஒரு நாளில் உணவு நேரத்தைக் குறைத்து விரத நேரத்தை அதிகரிக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் கழிவுகளும் கரையத் தொடங்குகின்றன என்பதுதான் இந்த டயட்டின் லாஜிக். காலங்காலமாய் எல்லா சமூகங்களிலும் மதச் சடங்குகளாக இருந்துவரும் டயட் முறையேதான் இது. பட்டினி கிடக்கும்போது நம் உடலின் என்சைம்கள் சீராக வேலை செய்யத் தொடங்குகின்றன. இந்த டயட்டால் உடல் எடை குறையும், புற்றுநோய் வராது, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அல்சர், குடல் நோய்கள், செரிமானக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த டயட்டை மேற்கொள்ள வேண்டாம்.
கண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா?
நம் வீட்டில் பாட்டி, தாத்தாக்கள் வெற்றிலை பாக்கு போடுவதைப் பார்த்திருப்போம். பல் போன காலத்திலும் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்து நுணுக்கி மெல்லுவார்கள். எப்போதோ சிறு வயதில் தொற்றிய பழக்கம் முதுமையானால் விடாது தொடர்ந்திருக்கும். தற்போது உள்ள தலைமுறைக்கு வெற்றிலை பாக்கு எனும் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் பெரும்பாலும் கிடையாது. அரிதாய் சிலர் எப்போதாவது மெல்லுகிறார்கள். மறுபக்கம், சிலர் கண்ட கண்ட குட்காவையும் போட்டு உடலை அழித்துக்கொள்கிறார்கள். அளவாய் வெற்றிலை பாக்கு தரிப்பது உடலுக்கு கெடுதல் இல்லாத பழக்கம்தான்.
ஆனால், புகையிலையுடன் சேர்த்து மெல்வது ஆரோக்கியமற்றது. புகையிலை எந்த வடிவிலும் உடலுக்கு உகந்தது அல்ல. சரி இந்த வெற்றிலை பாக்கு மெல்லும் வழக்கம் எப்போது வந்தது. இதன் வேர்களைத் தேடிச் சென்றால் அது கிட்டதட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நீள்கிறது. சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி கோவலனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக்கொடுத்த செய்தி ஒன்று வருகிறது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரகத்சம்ஹிதை என்ற நூலில் வெற்றிலையின் மகிமை பற்றிய பாடல்கள் உள்ளன.
‘தாம்பூலம் காம உணர்வைத் தூண்டும், உடலின் எழிலை அதிகரிக்கும், புஷ்டி தரும், நட்பை கொண்டுவரும், களைப்பை நீக்கும்’ என்கிறது அந்நூல். வெற்றிலை, அடக்காய் எனும் பாக்கு, தக்கோலம், லவங்கம், ஜாதிக்காய் ஆகிய அடங்கிய தாம்பூலத்தை மெல்வதால் இன்ப நுகர்ச்சி அதிகரிக்குமாம். தென்னிந்தியாவில்தான் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. நாகர்ஜுனகொண்டா சிற்பங்களிலேயே வெற்றிலை பாக்கு போன்ற நகாசுகள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவைதான் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டு வரும் பிரதான பொருட்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் வெற்றிலைக்கொடி, பாக்கு மரம் இரண்டுமே நம் நாட்டு தாவரங்கள் அல்ல. ஆசியாவின் பிற நாடுகளிலும் தாம்பூலப் பழக்கம் இருந்திருக்கிறது. பசிப்பிக் தீவு மக்களுக்கு வெற்றிலை தரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹெரடோடஸ் என்ற கிரேக்க ஞானிக்கு பாக்கு அறிமுகமாகியுள்ளது. அதேபோல் சீனாவுக்கு கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே மலேயாவிலிருந்து சென்றுள்ளது.
நம்முடைய சேர நாட்டுக் கடற்கரைகள் வழியாகவே தென்னிந்தியாவுக்கு எங்கிருந்தோ வெற்றிலை பாக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா வந்தபோது கள்ளிக்கோட்டையில் வந்திறங்கி அரசரை சந்திக்கிறார். இதை, ‘அரசர் வெற்று உடம்பில் பட்டு அங்கவஸ்திரம் அணிந்தபடி, தன் அரியணையில் அமர்ந்து மூலிகை இலைகளை மென்று ‘புளிச் புளிச்’ என பக்கத்தில் இருந்த கலையத்தில் துப்பிக்கொண்டிருந்தார்’ என்று தன் குறிப்பில் எழுதிவைத்திருக்கிறார். அவர் மூலிகை இலை என்று சொல்வது வெற்றிலையைத்தான்.
(புரட்டுவோம்!)
உணவு விதி : 10
எல்லா மொழியிலும் ஒரே சொல்லில் விளிக்கப்பட்டால் அந்த உணவைத் தவிர்த்திடுங்கள். உணவு என்பது பண்பாட்டோடு தொடர்பு உடையது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் ஒரு மொழி இருக்கும்போது ஓர் உணவுப் பொருள் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் எல்லா மொழியிலும் ஒரே சொல்லில் ஒரு உணவு இருந்தால் அது மிக சமீபத்தில் சந்தைக்கு வந்தது அல்லது பரவியது என்று பொருள். எனவே, அப்படியான உணவை இயன்றவரை தவிர்த்திடுங்கள். இப்படிச் சொல்வதன் பொருள் வேறொரு பண்பாட்டின் பாரம்பரிய உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது அல்ல.
மிளகாய்த்தூள் கலப்படம்
மிளகாய்த் தூளை அடர் சிவப்பு நிறத்துக்கு மாற்ற சூடான் டை என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை உருவாக்கும் தன்மையுடையது இது. தற்போது மிளகாய்த் தூள்களை முற்றிலுமாகவே செயற்கையாக உருவாக்க முடியும். அதாவது, சிவப்பு நிறம் வர வைக்க ஒரு வேதிப்பொருள், காரத்துக்கும் மணத்துக்கும் தனித் தனி வேதிப்பொருள் என மிளகாயையே பயன்படுத்தாமல் மிளகாய்த் தூளை உருவாக்க முடியும். அந்தவகை மிளகாய்த் தூள்களும் சந்தையில் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை பரிசோதனைக் கூடங்களில் கொடுத்துதான் கண்டுபிடிக்கவே இயலும். மிளகாய்த் தூளை நீரில் போடும் போது மேலே சிவப்பு நிறம் மிதந்து வந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட மிளகாய்த்தூள் என்று அறியலாம்.
எக்ஸ்பர்ட் விசிட்
எண் சாண் உடலுக்கு வயிறுதான் பிரதானம் என்று சொல்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் அஞ்சு வெங்கட். ’‘வயிற்று உபாதை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. முறையற்ற வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவுகள்தான் இதற்கு முக்கியக் காரணம்’ என்று சொல்லும் அஞ்சு வெங்கட், ‘உணவுப் பொருட்கள் பொதுவாகவே அல்கலைன் தன்மை அதிகம் கொண்டவை.
நாம் ஓர் உணவை நறுக்குவது, வேகவைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று ப்ராசஸ் செய்யும்போது அதன் அல்கலைன் தன்மை மாறி சில சமயங்களில் ஆசிட் தன்மையை அடைந்துவிடுகிறது. இப்படியான உணவுகளை அதிகம் உண்ணும் போது வயிற்று உபாதை வருவதைத் தடுக்கவே முடியாது. எனவே, என்ன உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் எவ்வளவு கால இடைவெளியில் எத்தனை சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாய் இருங்கள்’ என்கிறார் இவர்.
Average Rating