ஏலக்காய் முதல் கந்தகம் வரை!! (மகளிர் பக்கம்)
பள்ளிக் காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் என்னென்ன அளவில் கொடுக்க வேண்டும் என்னும் பட்டியல் தயாராகிவிடும். மேல் வேலைகள் என்று சொல்லப்படும் அடுப்பு வேலை தவிர்த்த இதர வேலைகளில் எல்லாருக்கும் பங்கு உண்டு. பெரியவர்கள் நான்கைந்து பேர் சிறுசுகள் ஏழெட்டுப் பேர் என்று ஒரு பெரிய குடும்பத்தின் பல கண்ணிகளும் சேர்ந்து ஓரிடத்தில் பலகாரம் செய்யக் கூடுவதில் தீபாவளிக் களை வரும்.ஏலக்காய் பொடிக்கும் வாசத்துடன் தொடங்கும் அன்றைய தீபாவளி. எரிவாயு அடுப்பு இவ்வளவுக்கும் தாங்காது.
அதனால் மண்ணெண்ணெய் அடுப்பைத் தயார் செய்து கொஞ்சம் விசாலமான இடத்தில் வைத்து, (இவ்வளவு பேரும் புழங்க வேண்டுமே) வேலை தொடங்கும். மண்ணெண்ணெய் அடுப்பு எரியும் வாசம் அடுத்தது. அந்த அடுப்புடன் இரண்டு விரற்கடை அளவு நீளத்தில் ‘பின்’ என்று ஒன்று வைத்திருப்பார்கள். தரையில் அமர்ந்து குனிந்து அந்தப் பின் வைத்து அடுப்பைத் தூண்டுகையில் எழும் வாசம் தனித்தது.இனிப்புக்குத் தனியாகவும் காரத்துக்குத் தனியாகவும் வாணலிகளில் எண்ணெய் காயும். காய்ந்த வாடை வந்துவிட்டதா என்று உறுதி செய்த பின்னர்தான் பலகாரங்களைப் பொரிக்கத் தொடங்குவார்கள். தேங்காய் வதங்குவதும், நெய் சேர்ப்பதும், ரவை வறுபடுவதும், காரப் பலகாரங்களுக்காக வேர்க்கடலை வறுப்பதும், சுக்கு இடித்து வைப்பதும், தண்ணீரில் ஓமம் கரைத்து வைப்பதும், சர்க்கரைப் பாகும் வெல்லப் பாகும் தயாராவதுமாக வாசங்களால் நிரம்பியிருக்கும் தீபாவளிக்கு முந்தைய வாரம்.
ஒரு பக்கம் மழையற்ற வெயில் காயும் நேரமாகப் பார்த்துப் பழைய பட்டாசுகளைக் காயவைத்து எடுக்கும் மொட்டைமாடி வைபவம் நடைபெறும். அதற்கு முந்தைய சில நாட்களில் நிச்சயம் மழை பெய்திருக்கும். காய்ந்த தரையில் பட்டாசுகளைப் பரத்துகையில் சுற்றிலும் ஈரம் காயாத இடங்களிலிருந்து எழும் வாசம் அலாதியானது. அதிகாலை பூஜை முதல் வெடிகள் வெடிக்கத் தொடங்கும்வரை சாமந்தியும் கதம்பமுமாகப் பூச்சரங்கள் மணக்கும். ஐப்பசியில் பூக்கள் குறைந்துவிடும், மீண்டும் தையில்தான் கிடைக்கும். ஆனாலும் அடைமழை மாதத்துக்கென்று பூக்கும் பூக்களைக் கொண்டு கதம்பம் தொடுத்திருப்போம்.
தீபாவளிக்கு முதல் நாளிரவும் தீபாவளி அன்றைக்கும் மட்டுமே வீட்டுக்கு வெளியில் காற்றில் கந்தக வாசம் சுழலும். அதிலும் பட்டிமன்ற ஒளிபரப்பின் போது யார் வீட்டிலும் சரம் வெடிப்பதில்லை என்று ஏறக்குறைய பல்நோக்கு ஒப்பந்தமே தயாராகும். எல்லாருமே அதிகாலை எழுந்திருப்பார்கள் என்பதால் மதிய ஓய்வு நேரத்திலும் எங்கும் வெடிச் சத்தம் இராது.மாலை மீண்டும் தொடங்கும் கொண்டாட்டங்கள் கார்த்திகைக்கென்று கொஞ்சம் பட்டாசை மிச்சப்படுத்துவதுடன் ஓயும். மத்தாப்புக் கம்பிகள், வெடிக்காத பட்டாசுகள் மீதெல்லாம் தண்ணீர் தெளித்து, ஒரு பக்கமாக ஒதுக்கிக் குவித்து விழாவை நிறைவு செய்வோம்.
இன்றைய தீபாவளிக்கு வண்ணங் களும் வேறு, வாசங்களும் வேறு. சொல்லப்போனால், சத்தங்கள் கூட வேறுபட்டுவிட்டன. காலத்துக்கேற்ப தன்னைத்தானே நவீனப்படுத்திக் கொண்டுவிட்டது தீபாவளி. அட்டைப் பெட்டி இனிப்புகளும் மணக்கவே செய்கின்றன. பட்டாசுகளில் எத்தனை ரகங்கள். அதிலும் வாணவேடிக்கைப் பட்டாசுகள் தீபாவளியின் இரவு வானை அப்படி அலங்கரிக்கின்றன. எளிமைக்கு ஏங்கியபடி பிரம்மாண்டத்தை ரசிக்க வைக்கிறது இன்றைய தீபாவளி.
கொஞ்சம் இடம் கொடுத்தாலும் பின்னோக்கி ஓடிவிடுகிற மனசை இழுத்துப் பிடித்தபடி பயணித்தாலும் இன்றைய தீபாவளியின் கொண்டாட்டங்கள் வேறு விதமான அழகு. அடிக்கடி பேசிக் கொள்ள இயலாத தொலைவில் இருப்போரையும் அருகில் அழைத்து வந்து வாழ்த்திக் கொள்ள வழி செய்கிறது இணையவெளி. மனங்கள் வாசம் மாறாதிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சியுடனும், குறைவற்ற வாசங்களுடனும், நல்லதொரு கொண்டாட்டமாய் அமைய இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள். வாழ்தல் இனிது.
Average Rating