தர்மபுரி சம்பவம்…!!(மகளிர் பக்கம்)
கதறும் சுற்றுலாவாய் மாறிய ஒரு கல்விச் சுற்றுலா. அது நிகழ்ந்தது 2000ம் ஆண்டு. பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள். பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து அக்கட்சியினர் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்த நிலையில், ஆங்காங்கே சாலை மறியலும் செய்தார்கள். அன்றை தினம் கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 46 பேர் பேராசிரியர்களுடன் இணைந்து இரு பேருந்துகளில் கல்விச் சுற்றுலாவிற்காகக் கிளம்பியுள்ளனர். கிருஷ்ணகிரியில் தங்கள் சுற்றுப் பயணத்தை முடித்து அங்கிருந்து ஒகேனக்கல் செல்லக் கிளம்பியவர்கள், போராட்டத்தை அறிந்து சுற்றுலாவை பாதியில் நிறுத்திவிட்டு கோவைக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது தர்மபுரி-சேலம் சாலையில் பேருந்தை நிறுத்தி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகே உள்ள ஊர்களில் மிகப் பெரும் கலவரம் நடப்பதாகத் தெரியவர, பாதுகாப்பான இடத்தில் தங்கிக்கொள்ள முடிவு செய்து சேலம் கலெக்டர் அலுவலகம் நோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளனர். மாணவர்கள் பயணித்த பேருந்து தொடர்ந்து பின்னால் வந்த நிலையில், முதலில் பெண்கள் இருந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. இடையில் பாரதிபுரம் என்ற இடத்தில் வாகனங்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரிக்க, ஒரு பர்லாங்கு தொலைவில் இலக்கியம்பட்டி என்ற இடத்தில் சாலை மறியல் நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் பஸ்ஸை நிறுத்திவிட்டு அங்கேயே காத்திருந்திருக்கின்றனர்.
அப்போது எதிர் திசையில் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கின்றனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர பின்னால் இருந்த இருவர் கைகளிலும் பெட்ரோல் நிரம்பிய பிளாஸ்டிக் கேன்கள் இருந்திருக்கின்றன. மாணவிகள் இருந்த பஸ்ஸை நெருங்கிய மூவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்து அருகில் வந்து பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றி இருக்கிறார்கள். உள்ளே இருந்த பேராசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் இறங்கி வந்து கையெடுத்துக் கும்பிட்டு, அனைவரும் மாணவிகளாக இருக்கிறார்கள், ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் அனைவரும் இறங்கிக் கொள்கிறோம், அதன் பிறகு நீங்கள் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டும், அவர்கள் மூவரும் விடாமல், இவர்களைத் தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று கூறியதன் பேரில், மூவரில் ஒருவர் பேருந்தின் படிக்கட்டுகளில் பெட்ரோலை ஊற்றி முன் பக்கக் கதவை இழுத்து சாத்தி மூடிய நிலையில், தீயைப் பொருத்தி உள்ளே போட, கன நேரத்தில் பேருந்தில் நெருப்பு பற்றிக் கொண்டது.
மாணவிகள் அலறிக் கூச்சலிட்டவாறு, இறங்கியுள்ளனர். பெரும்பாலானோர் தீக்காயங்களோடு இறங்கிய நிலையில், முன் பகுதி எஞ்சினோடு சேர்ந்து பெரும் பகுதிதீப்பிடித்து விட்டதால், பேருந்து முழுவதும் புகை மண்டலமாக, சிலர் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னாள் பேருந்தில் வந்த மாணவர்கள் இறங்கி ஓடி வந்து, பேருந்தின் ஜன்னல் வழியாக சில மாணவிகளை வெளியில் இழுத்துள்ளனர். அதிலும் 18 பெண்கள் காயங்களோடு காப்பாற்றப்பட்டுள்ளனர். பஸ் முழுவதும் தீப்பற்றிக்கொள்ள, கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற முதலாமாண்டு படித்து வந்த மூன்று மாணவிகளும் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு படையினர் வந்து, தீயை அணைத்து கதவைத் திறந்து பார்த்தபோது மூன்று மாணவிகள் கரிக்கட்டையாக பஸ்ஸின் பின்பக்க கதவிடையே படிக்கட்டுகளில் கிடந்துள்ளனர். எரிந்த மூவரது உடலும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிடைத்த ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், சாட்சி அளித்தவர்களின் கூற்றுப்படி குற்றவாளிகள் மூவரும் கொடூரமான முறையில் செயல்பட்டுள்ளனர். பேராசிரியர்களும், பேருந்து ஓட்டுநரும் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டும், அதில் இருந்த ஒருவர் “இவர்களை விட்டுவிடாதே தீயிட்டுக் கொளுத்து” எனச் சொல்லியபடியே அவரும் அவரோடு வந்த இருவரும், பெட்ரோலை படிகளில் ஊற்றி திறந்திருந்த கதவை மூடிய பிறகு தீ வைத்துள்ளனர். எனக் குறிப்பிட்டார் வழக்கை நடத்திச் சென்றவர்களில் ஒருவரான சேலம் வழக்கறிஞர் ஆர். சீனிவாசன்.இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில், 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில் 28 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு, முக்கியக் குற்றவாளிகளான ஆளும் கட்சியைச் சேர்ந்த முனியப்பன், மாது(எ)ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகிய மூவருக்கும் சேலம் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
குற்றவாளிகள் தரப்பு மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட, இதை எதிர்த்து 2010-ல், உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ய மூவரின் தூக்கு தண்டனை உறுதியானது. தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி குற்றவாளிகள் தரப்பு, சீராய்வு மனு தாக்கல் செய்தனர். 2016-ல் விசாரணைக்கு வந்த மேல் முறையீட்டில் மூவரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டு வேலூர் சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி நீண்டகாலம் சிறையிலிருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தர்மபுரி பேருந்து எரிப்புக் குற்றவாளிகளும் இருந்தனர். இவர்கள் விடுதலைக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மூவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆளுநரின் ஒப்புதலின் பேரில் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.பட்டப் பகலில்… பலர் முன்னிலையில்… துடிக்கத் துடிக்க மூன்று உயிர்களை நெருப்பிற்கு இறையாக்கிய துயரச் சம்பவத்தை கடப்பது அத்தனை எளிதில் இயலாத காரியம்தான்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் குடும்பத்தாரோடு பேசியபோது…
கோகிலவாணி குடும்பம், நாமக்கல்
கோகிலவாணியின் இறப்பிற்கு பின், உடல் நிலையும், மனநிலையும் பாதித்த நிலையில் அவரின் அம்மா நோயாளியாய் இருக்க, உலகமே தெரிகிற மாதிரி சிறப்பாக வருவேன் என்ற மகள்.. உலகம் அறிய விட்டுச் சென்ற நாளை கண்ணீரோடு நினைவுகூர்ந்தார் அவரின் தந்தை வீராச்சாமி.தங்கள் பரம்பரைக்கே ஒரே பெண்ணாகப் படிப்பிலும் படு சுட்டியாக இருந்துள்ளார் கோகிலா. தங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வர வேண்டிய மகளை நெருப்பிற்கு இறையாக்கியதை நினைத்துக் கதறியவர், தன் மகள் பள்ளியில் முதல் மாணவியாக வந்ததே வேளாண் கல்லூரிவரை மகளை அனுப்பி படிக்க வைக்க முதல் காரணம் என்றார்.
ஆங்கில வழியில் கோகிலா படித்திருந்ததால், தமிழ் வழியில் படித்துவிட்டு வேளாண்மைக் கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு புரியாத பாடங்களை, விடுதி அறையில் வைத்து தினமும் இரவு ஒரு மணி நேரம் வகுப்பெடுத்ததாகவும் தெரிவித்தவர், டாக்ரேட் பட்டம் வாங்குவதே தங்கள் மகளின் லட்சியமாக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.மேலும் தீர்ப்பு குறித்து பேசியவர், நாட்டில் நீதி, நேர்மை கெட்டுப் போய்விட்டது. ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படியென்றால், முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா? மூவரையும் விடுவித்து ஆளுநர் உத்தரவு அளித்தது வேதனை அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
காயத்ரி குடும்பம், கடலூர்
2ம் தேதி வந்துருவேன்மா, இரண்டு நாளாவது ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா எம்பொண்ணு… ஒரேயடியா ஓய்வு வாங்கீட்டா. கரிக்கட்டையா பொட்டலமா என் மகளைக் கொடுத்தாங்க. நல்லா படிப்பாம்மா. +2ல் நிறைய மார்க் வாங்குனா. எந்தப் பிள்ளைய யார் பிள்ளைய பார்த்தாலும் என் பிள்ளை ஞாபகம்தான் வருது. பாதி எரிந்த அவ உடையை அவ சதையோட சேர்த்துக் காட்டுனாங்க. எங்களுக்கு பார்க்கவே முடியலை என விசும்பிய பெற்றோர்.. விடுதியில் தன் மகள் காயத்ரி வைத்திருந்த அவளின் உடமைகள் அடங்கிய பெட்டிக்குள் மகளின் மூச்சுக் காற்று இன்னும் இருப்பதாகவும், திறக்க மனமின்றி பொக்கிஷமாய் அவரின் நினைவுகளை பாதுகாப்பதாகவும் புலம்பினர்.பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன், தீர்ப்பு குறித்து பேசியபோது, நீதி மறித்துப் போனது. எரித்துக் கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளின் மரணம் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. நீதி தேவதை தலை கவிழ்ந்து கண்ணீர் மல்க அழுவதாகத்தான் கருதுகிறேன். அவர்கள் நாசமாகப் போகட்டும். வேறு என்ன சொல்வது என்றார் வேதனையுடன்.
ஹேமலதாவின் குடும்பம், சென்னை
சிறந்த கராத்தே வீராங்கனை. நல்லா ஓவியம் வரைவா. விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று டெல்லிவரை சென்று கால் பதித்து வந்ததாகத் தன் மகளைப் பற்றி நினைவுப்படுத்திக் கொண்டார் ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற அவரின் தாயார் காசியம்மாள். வேளாண்மை படிப்பிற்காக டெல்லி சென்று நுழைவுத் தேர்வெழுதி வென்றவள். ஆங்கிலம், ஹிந்தி இரண்டிலும் சரளமாக பேசுவாள்.இத்தனை சிறப்பாய் தலையெடுத்த தன் மகள் இன்றில்லையே என விசும்பியவர், பேருந்தின் பின்பக்க கதவுகள் மூடப்பட்டு, கம்பியால் முடுக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் உள்ளிருந்த சக மாணவிகளை, பேருந்து ஜன்னல் வழியாக பின்னாளில் இருந்து தூக்கி தூக்கி விட்டிருக்கிறார்.
கடைசியாக ஹேமா வெளியில் வர முயன்றபோது, வர முடியாத அளவிற்கு நெருப்பில் மாட்டி, கைகள் கொப்பளித்த நிலையில், புகையில் சிக்குண்டு இறையாகி இருக்கிறார். அவரோடு உடன் நின்ற கோகிலவாணியும், காயத்ரியும் அதே நிலையில் மரணித்துள்ளனர்.. மூவரும் ஒருவர் மீது ஒருவர் படிக்கட்டின் மீது கருகிக் கிடந்தனர். போஸ்மார்டம் அறிக்கை நுரையீரல், சுவாசக் குழாய் என உள்உறுப்புகள் புகையால் தாக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தது என முடித்தார்.தீர்ப்பு குறித்து பேசியவர், நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். என் கணவரும் இறந்துவிட்டார். எனது சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதுபற்றி இனிமேல் பேசி என்ன நடக்கப் போகிறது என வேதனையுடன் முடித்தார்.
Average Rating