பிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்…!!(மகளிர் பக்கம்)
பெண்ணின் வலிமையை அவள் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பொறுப்புக்களை வைத்துப் புரிந்து கொள்ளலாம். பெண் என்பதாலேயே வளரும் வயதிலேயே அவள் பொறுப்போடு வளர்க்கப்படுகிறாள். வயதுக்கு ஏற்ப அவளுக்கான வேலைகள் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் குடும்ப நிர்வாகம் சார்ந்த பணிகளை பெண்ணே பொறுப்பேற்று நடத்துகிறாள். இந்த மாதத்துக்கான பட்ஜெட் துவங்கி இந்த வருஷத்துக்கான மளிகைப் பொருள், பத்து வருஷம் கழித்து அந்த வீட்டில் நடக்க உள்ள சுப நிகழ்ச்சிக்கான நிதித்திட்டமிடல் வரை அவள் மனம் சுமக்கும் விஷயங்கள் எடைக்கற்களுக்கும் அடங்காதவை.
இன்றைய பெண்ணுக்கு இரட்டைத் தோளிலும் சுமைகள். படிக்கும் காலத்தில் இருந்த கூடுதல் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். பரபரப்பு வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுகின்றனர். வேலை, குடும்பம் என்று பொறுப்புக்களை அள்ளிக் கொள்கின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அவளின் வேகத்தைக் கூட்டியுள்ளது. இயந்திரத்தனமாகிவிட்ட பெண்ணின் வாழ்க்கை அவளின் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் எவ்விதம் பாதிக்கிறது என்று பார்ப்போம்.
தொடர் வேலைச்சுமைகள் பெண்ணுடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா செந்தில்குமார். ‘‘வேலை வேலை என்று ஓடும் பெண்களால் ஒரு வேலையை ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. ஒரு வேலையை முடிக்கும் முன்பாக இன்னொரு வேலையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு வேலையில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் அடுத்தடுத்த வேலைகள் பற்றி யோசிப்பதால் மூளைச் செல்களில் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகிறது. சின்ன வயதில் இது பெரிய பிரச்னையாகாமல் இருக்கலாம். ஆனால் 40 வயதுக்கு மேல் அவர்களின் மூளை சிந்திக்கும் வேகத்துக்கு உடல் வேலை செய்யாது. அவர்களின் சிந்தனை வேகத்துக்கு தசைகள் செயல்படுவதில்லை. இதனால் செய்யும் வேலையை திரும்பத் திரும்பச் செய்யும் படியாகிறது. வேலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
பெண்களுக்கு 25 வயதில் இருந்து 45 வயது வரை அதில் பெரிய பிரச்னை இருப்பதில்லை. வயதாகும் போது தொடர் வேலைகளால் பெண்களால் அந்த வேலையை முழுமையாகச் செய்ய முடிவதில்லை. மூளைச் செயல்பாட்டினை விட தசைச் செயல்பாடு பின்தங்குகிறது. இத்துடன் தொடர்ந்து வேகமாகவே வேலைகளைச் செய்வதால் பெண்களுக்கு தலைசுற்றல் வரலாம். நீண்ட நேரம் சமையலறையில் வேலைகளை நின்று கொண்டே செய்வதால் குதிகால் வலி, முதுகுவலி ஏற்படும். இதனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் முதுகுவலியால் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே அவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கும் போது பரபரப்பாக வேலை செய்து விட்டு ஓய்வாக அமரும் போது அவர்களின் ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வருவதே சிரமம் ஆகிறது. இது அவர்களின் ரத்த நாளங்களை பாதிக்கிறது. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இப்படிப் பரபரப்பாக இருப்பதே காரணம் ஆகிறது. பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்யும் போது முதலில் ஒருவிதமான மனநிறைவைத்தரும். ஆனால் தொடர்ந்து செய்யும் போது எல்லா வேலைகளையும் நான் மட்டுமேதான் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு ஏற்படும். எல்லாரும் தானே சாப்பிடுகிறார்கள் வீட்டில் உள்ள அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம் கோபமாகவும், எரிச்சலாகவும் மாறும். வேலைச்சுமையால் தான் பெண்கள் பல வீடுகளில் கத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றவர்களை வேலை வாங்குவதற்காகக் கத்த வேண்டியுள்ளது.
இது அந்தப் பெண்ணை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளுகின்றது. அந்தப் பெண்ணைச் சண்டைக்கோழி மாதிரிப் பார்க்கின்றனர். பெண்கள் ஒரு சுய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மனைவி ஸ்தானத்தில் உள்ள பெண்களை ஹைப்பிச்சில் பேசுகிற பிசாசு என்ற நிலைக்கு ஆளாக்குகின்றனர். பெண்ணே தன்னை தகுதிக் குறைவாக நினைக்கும் நிலைக்கு இந்த வேலைச்சுமை பெண்களைத் தள்ளுகிறது. இது பெண்களுக்கு மிகவும் மோசமான நிலை. பெண்கள் தனக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. மகிழ்ச்சியான நேரங்கள் என்பது அவர்களுக்கு அரிதாகிப் போகிறது. இதை மாற்றுவதற்கு பெண்கள் தனக்குப் பிடித்த வேலைக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். அதை வழக்கமான வீட்டுச் சூழலில் இருந்து வெளியில் வந்து செய்ய வேண்டும். அது கோவிலுக்குப் போவதோ, பாட்டு கிளாஸ், ஜிம் என்று எதுவாகவும் இருக்கலாம். பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்.
அது அவர்களுக்கான நேரமாக இருக்க வேண்டும். ஒரு நாளில் தனக்காக அரைமணி நேரமாவது ஒதுக்கும் பெண்தான் ஆரோக்கியமாகவும், ரிலாக்ஸ்சாகவும் இருக்க முடியும். இதற்கான நேரத்தை பெண்கள் கட்டாயம் ஒதுக்க முடியும்” என்றார். வேலைகள் பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் விதம் குறித்து விளக்குகிறார் சேலம் மனநல மருத்துவர் பாபு. ‘‘பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியவர்கள். ஆனால் வேலைச்சுமை என்பது அவர்களுக்கு அதிகமே. தன் சுமையோடு பிறரது வேலைகள், உறவுகள் என அவர்கள் மனம் தன்னோடு தொடர்பில் உள்ள பலரைப் பற்றியும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. நீண்ட வேலை நேரம், ஓய்வின்மை, உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்கள், பாலியல் சார்ந்த பார்வைகள், பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், வரம்பு மீறல் எனப் பலவிதமான சிரமங்களை தனது வேலைச் சூழலில் சந்திக்கின்றனர். இது பெண்களுக்கு டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தையும் கொடுக்கிறது.
பெண்களின் வேலைச் சூழலில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண் செய்யும் வேலையில் அவளுக்கான தனித்த அடையாளம் வேண்டும். அவளது ஆசைகளை வெளிப்படுத்த அதில் இடமிருக்க வேண்டும். பொழுது போக்கு, ஃபேஷன் இவற்றுக்கான நேரமும், பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். குடும்பச்சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் பெண்களை வேலை மட்டுமே செய்பவர்களாகத் தள்ளுகிறது. இதுவும் அவர்களுக்கு வேலை சார்ந்த டென்ஷனை அதிகப்படுத்துகிறது. பெண் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள தனது விருப்பம், பலம், பலவீனம் இவைகளை வைத்துத் திட்டமிட வேண்டும். அறிவு ரீதியான தேடல், உணர்வு ரீதியான தேடல் என்று இரண்டு விதமாக தனது விருப்பங்களின் அடிப்படையில் தன் வேலையை திட்டமிட வேண்டும். வேலையினால் ஏற்படும் டென்ஷனை இதன் மூலம் தவிர்க்கலாம்.
வேலைச்சுமையை குறைத்துக் கொள்ள தனக்கு உதவும் குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனது உணர்வுகளை வெளிப்படுத்தவும், பரபரப்பில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும் வேலைகளை பலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். பெண் தனக்கான நேரம், தன் பொழுது போக்கு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் குழுக்களைப் பெண்கள் உருவாக்கிக் கொண்டு வழக்கமான டென்சனில் இருந்து வெளியில் வர வேண்டும். எந்த விஷயத்தையும் உணர்வுப் பூர்வமாக மட்டும் பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையுடனும் அணுக வேண்டும். இவையெல்லாம் வேலைச்சுமையால் பெண்ணுக்கு மன உளைச்சல் மற்றும் உடல் நலப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கும்” என்கிறார் பாபு.
Average Rating