நம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை!! (மகளிர் பக்கம்)
நடிகை, மாடலிங் என இரண்டு துறையிலும் தனக்கான ஓர் இடத்தை பிடித்தவர் லிசா ரே. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், சில காலம் லைம்லைட்டில் இருந்து மறைந்திருந்தார். அந்த ராட்சஷனை எதிர்த்து போராடி வாழ்க்கையை முழுமையாக எவ்வாறு வாழலாம் என்று மனம் திறக்கிறார்.
2009ல் உங்களுக்கு மல்டிபிள் மைலோமா (வெள்ளை ரத்த அணுக்களில் ஏற்படும் புற்றுநோய்) இருப்பது கண்டறியப்பட்டது. அதை எதிர்த்து போராட பலம் எப்படி வந்தது?
புற்றுநோய் என்று தெரிந்ததும், ஒரு நிமிஷம் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. நான் எனக்குள் முதலில் யோசிக்க ஆரம்பிச்சேன். இந்த பாதிப்பால் ஏற்படும் பின்னடைவு மற்றும் நோக்கத்தை முதலில் தெரிந்து கொண்டேன். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தான் எனக்கு முழு ஆறுதலாக இருந்தாங்க. நான் திரையில் தோன்றவில்லை என்றாலும் பிளாக் (blog) மூலமா வெளியுலகத்துடன் தொடர்பில் இருந்தேன். டோரொன்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் எனக்கு ஏற்பட்ட பாதிப்பை பற்றி வெளிப்படையா சொன்னேன். அதன் பிறகு தான் உலகளவில் எனக்கான அன்பு மற்றும் ஆதரவு பெருக ஆரம்பிச்சது.
உங்களை நாங்க மறுபடியும் வெள்ளித்திரையில் பார்க்க முடியுமா?
‘4 மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’ என்ற பெயரில் வெளியாகும் சின்னத்திரை தொடரில் நடிக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ‘99 சாங்கஸ்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.
உங்களின் பிட்னெஸ் ரகசியம்?
என்ன சாப்பிடணும் என்பதில் ரொம்பவே கவனமா இருக்கேன். 80 – 20 திட்டத்தை ஃபாலோ செய்றேன். (சுத்தமான சத்துள்ள, ரசாயனமற்ற உணவை சாப்பிடுவது 80%, மற்ற விஷயங்களுக்கு 20%) உடற்பயிற்சி தவறுவதில்லை. பல வருஷமா யோகா செய்திட்டு இருக்கேன். டென்னிஸ் மற்றும் நடைப்பயிற்சியும் செய்வேன். என் உடல் சின்னதா ஒரு சிக்னல் காண்பிச்சா போதும் உடனே டாக்டரை போய் பார்த்திடுவேன். பிட்னெஸ் உடலை தாண்டிய விஷயம் தான். அதனால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பின்னடைவுகளை சமாளிக்க பழகிக்கொண்டேன்.
பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது?
ஒவ்வொரு பெண்ணும் தன்னை பார்த்துக் கொள்வது அவசியம். ஆனா அவங்க மற்ற விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுப்பதில்லை. என்னோட அறிவுரை எல்லா விஷயத்திலும் அவர்களை முதலில் கவனித்துக் கொள்ளணும். சரியான உணவை சாப்பிடணும், நன்றா தூங்கணும், உடற்பயிற்சி செய்யணும், தியானம் கூட செய்யலாம், கடைசியாக ஆனால் முக்கியமானது ரெகுலர் செக்கப் செய்துக்கணும். தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது சுயநலமில்லை.
புது திட்டம்?
எச்.டி.எஃப்.சி லைப், புற்றுநோய் குறித்த திட்டத்தில் என்னை தொடர்பு படுத்தி இருக்கேன். ஒருவருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் எவ்வளவு அவசியம் என்று இந்த திட்டம் மூலம் பிரச்சாரம் செய்றேன். மேடைப் பேச்சாளராவும் செயல்படறேன். எனக்கு ஏற்பட்ட புற்றுநோய் குறித்து புத்தகம் எழுதி வருகிறேன். எனக்கு இரட்டை குழந்தைகள், தாய்மையை ரசித்து வாழ்கிறேன். அந்த அனுபவத்தை பற்றியும் கூடிய விரைவில் எழுதுவேன்.
Average Rating