சூப்பர் பக்ஸ் பராக்…!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 15 Second

பலரும் அறியாத, அறிந்துகொள்ள வேண்டிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது Super Bugs. ‘சூப்பர்’ என்ற பெயரைப் பார்த்து நல்ல விஷயமாக இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், பேரில்தான் சூப்பர், விஷயத்தில் டேஞ்சர் என்றே சொல்லலாம். இது குறித்து விவரிக்கிறார் பொதுநல மருத்துவர் ஜென்னி பிரபாகர்.

‘‘பாக்டீரியாவின் மாறுபட்ட ஒரு வகைதான் சூப்பர் பக்ஸ் (Super bugs). இதனை New Strain Bacteria என்று மருத்துவ உலகில் குறிப்பிடுகிறார்கள். வழக்கமான பாக்டீரியாக்களை அழிப்பது போல, இந்த சூப்பர் பக்ஸ்களை அழிப்பது எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால், இவை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அனைத்துவிதமான ஆன்டி பயாடிக்குகளுக்கும் கட்டுப்படாதவை. ஆன்டிபயாடிக்குகளிடமிருந்து அழிந்துவிடாமல் தங்களைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை. ஆங்கிலத்தில் இதனை Resistant to commonly used antibiotics என்கிறோம்.

அபாயகரமான இந்த உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் நமது உடலுக்குள் சென்று முதலில் நுரையீரலைப் பாதிக்கின்றன. நமது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை நுரையீரல்தான் தொடர்ந்து கொடுக்கிறது என்பதை அறிவோம். சூப்பர் பக்ஸினால் நுரையீரல் பாதிப்பு அடையும்போது, ரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லாமல் போகும். அதன் விளைவாக எல்லா அணுக்களும், உடல் உறுப்புகளும் பாதிப்பு அடையும்.

இது மட்டுமில்லாமல் சூப்பர் பக்ஸ் சிறுநீர் குழாயில் தொற்றினை(Urinary Tract Infection) ஏற்படுத்தும் குணமும் கொண்டது. சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய தொற்று பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால் சிறுநீரகம் பாதிப்பு அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது’’ என்பவர், யார் யாருக்கு சூப்பர் பக்ஸ் ஏற்படும் சாத்தியம் உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார்.

‘‘பொதுவாக நம்முடைய தோல் மற்றும் மென்மையான திசுக்களில் சூப்பர் பக்ஸ் மூலமாக தொற்று ஏற்படும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் சூப்பர் பக்ஸினால் அதிகளவில் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக இவர்களுக்குப் பாதத்தில் வருகிற தொற்று, கால் முழுவதும் பரவ நேரிடும் வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே சொன்னது போல சூப்பர் பக்ஸ் தொற்று, உடலின் மற்ற உறுப்புகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு (Antibiotic Resistance) இந்தக் கிருமி கட்டுப்படாமல் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

எனவே, கட்டுப்படுத்த முடியாத தொற்று ரத்தத்தில் மெல்லமெல்ல கலந்து Sepsis என்ற நோயாக மாறுகிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிற்கும் தொற்று பரவி உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.’’
சூப்பர் பக்ஸ் பிரச்னை ஏற்படுவது ஏன்?

‘‘ஒருவருக்கு ‘சூப்பர் பக்ஸ்’ வருவதற்குப் பலவிதமான காரணங்கள் மருத்துவர்களால் சொல்லப்பட்டாலும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தவறான வழியில் உபயோகப்படுத்துவதுதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சூப்பர் பக்ஸ் பிரச்னையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் எளிதான வழிமுறைகள் உள்ளன.

மருத்துவர் ஆலோசனைப்படிதான், Anti-biotic மாத்திரைகளை உபயோகப்படுத்த வேண்டும். அடிக்கடி இரண்டு கைகளையும் சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். டாக்டர் பரிந்துரை செய்த ஆன்டிபயாடிக் கால அளவை முழுவதுமாக நிறைவு செய்ய வேண்டும். மருந்து, மாத்திரைகளை மற்றவர்களுடன் எந்தக் காரணத்துக்காகவும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. மருத்துவர்கள் சொல்கிற தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.’’

உடல்நலக் குறைபாடுகளைச் சரி செய்வதற்காக எடுத்துக் கொள்கிற ஆன்டிபயாடிக் ஒரு கட்டம் வரைக்கும்தான் செயலாற்றும் தன்மை கொண்டுள்ளன. ஹை டோஸேஜ் ஆன்டிபயாடிக்கோ அல்லது சரியான முறையில், சேர்த்து கொள்ளாத ஆன்டிபயாடிக்கோ எதுவாக இருந்தாலும், உயிரிழப்பை அதிகளவில் ஏற்படுத்துகின்றன என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் The organization for economic co-operation and development (OECD) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவில், 2050-ம் ஆண்டுக்குள் 2.4 மில்லியன் மக்கள் சூப்பர் பக்ஸ் பிரச்னையால் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்? (அவ்வப்போது கிளாமர்)
Next post கிச்சன் டைரீஸ்!!(மகளிர் பக்கம்)