‘வன் செவியோ நின் செவி’!! ( கட்டுரை)
கொடூரப் போரின் கோரத் தாண்டவம், இலங்கைத் தீவில் முற்றுப் பெற்று (2009 மே 2019) ஒரு தசாப்தம் நிறைவு பெறப் போகின்றது. ஆயினும், போரின் வடுக்கள், எம் கண் முன்னே நிற்கின்றன; நிழல்களாகப் முன்னும் பின்னும் தொடர்கின்றன.
பொதுவாக, ஆயுதப் போரொன்றில் சிறுவர்கள், பெண்கள், முதியோர் போன்ற பகுதியினரே, பெரும் சேதங்களைப் சுமப்பவர்கள் ஆவர். ஆனால், இவர்களுக்கு அப்பால், ‘முன்னாள் போராளிகள்’ என ஒரு வகுதியினர், இன்று எமது சமூகத்தில் கடும் உடல், உள, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆயுதப் போரின் முடிவின் பின்னர், இலங்கை அரசாங்கத்தால் அண்ணளவாக 12,000 முன்னாள் போராளிகள் படிப்படியாக, சமூகத்துடன் மீளவும் இணைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் பெரும் பகுதியினர், தங்களைச் சமூகத்தில் மீள நிலைநிறுத்திக் கொள்ளப் பெரும் சிரமப்படுகின்றனர். பொருளாதார ரீதியாகவும் சமூக அந்தஸ்து ரீதியாகவும் தமது அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல் எனப் பற்பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றர்.
இவர்கள், அன்று போராளிகளாக மிளிர்ந்த போது, வீரமாகத் தலை நிமிர்ந்து, எம்மத்தியில் வலம் வந்தார்கள்; இன்று, முன்னாள் போராளிகளாக, வீதி ஓரங்களில் தலை குனிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு நிலைகளும் இவர்களுக்கு ஏற்பட, தமிழ் மக்களே காரணமாணவர்கள் என்பது, விவாதத்துக்குரிய விடயம் அல்ல.
இந்த முன்னாள் போராளிகள், மே மாதம் 2009க்கு முன்னர் மரணமடைந்திருந்தால் வீரகாவியமான (மா)வீரர்கள் என பூஜிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இன்று இவர்கள் உயிருடன் இருக்கும் போது, அதே தமிழ் மக்களால் நேசிக்கப்பட பின்னடிக்கப்படுகிறார்கள்; ஆதரிக்கவும் சாட்டுப்போக்குச் சொல்லி தூரவிலத்திச் செல்கிறார்கள். இதனால் அவர்கள், யாசகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல முன்னாள் பெண் போராளிகள், உடல், உளப் பிரச்சினைகள் காரணமாகத் திருமணமாகாது உள்ளனர்; பலர் திருமணமாகியும் கணவனால் கைவிடப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். தங்களையும் தங்களது தியாகங்களையும் வெளிப்படுத்த, வெட்கப்பட்டும் அச்சப்பட்டும் துக்கப்பட்டும் ஒளிந்து ஒ(ப)துங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இடுப்புக்கு கீழே உணர்வுகள் அற்ற, பல முன்னாள் போராளிகள், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவிக்கிறார்கள். இயற்கைக் கடன் கழிக்கக் கூட, அடுத்தவரின் தயவு தேவைப்படுகின்றது.
சிறிய காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, மூன்று தினங்கள் வீட்டுக்குள் முடங்கவே, எம்மால் முடியாமல் உள்ளது. இந்நிலையில், தமது வாழ்வை, எமக்காக அர்ப்பணித்து, அதன் பாதகமான விளைவால், இன்று வாழ் நாள் பூராகவும் முடங்கியிருக்கும் உணர்வுகளை, ஏக்கங்களை என்னவென்று கூறுவது, யாரிடம் உரைப்பது?
அந்தக் காலச் சூழ்நிலை காரணமாக, விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் எமக்காக (தமிழ் மக்கள்) போராட்டத்துக்குள் ஈர்க்கப்பட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக இந்தக் காலத்தில் (நிகழ்காலம்) நாம் என்ன செய்கின்றோம், வருங்காலத்தில் என்ன செய்யப் போகின்றோம்?
மாவீரர் தினத்தைப் பல கெடுபிடிகளுக்கு மத்தியில், ஆண்டு தோறும் நவம்பர் 27இல் சவாலாகக் கடைப்பிடிக்கின்றோம். துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்ற, எமது அரசியல்வாதிகள் எனப்படுவோர் முண்டியடிக்கின்றனர்.
இதேவேளை, நாளாந்தம் புலனாய்வுப் பிரகிருதிகளின் கெடுபிடிக்குள், வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவியாக என்ன செய்கின்றோம்? உண்மையில், அவநம்பிக்கையால் தினசரி செத்துப் பிழைக்கும் முன்னாள் போராளிகள் மனம்மகிழ, நாம் மனமகிழ்ந்து செய்யும் கைமாறு கண்டு, மாவீரர்கள் கூட மனம் மகிழ்வர்.
இதேபோல, மறுமுனையில் போரில் மாற்றுத்திறனாளிகளானப் படையினருக்கு ஏராளமான சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உள்ளன. அவர்களை பாதுகாப்பாகப் பராமரிக்கவென, பல இல்லங்களும் நிதியங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களை உடல், உள ரீதியாகச் சிறப்பாக வைத்திருக்க, பல சிகிச்சைகள் எனக் கவனிப்புகள் என நீள்கின்றன. இது வரவேற்றப்பட வேண்டியது.
ஆனால், முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கையேந்தும் நிலையைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கலாமா? இவர்களுக்கு இந்த நிலை ஏன் வந்தது? அவர்களது நலனில் எமக்குப் பங்கு இல்லையா?
அடுத்து, வடக்கு மாகாணத்தில் வாழும் விதவைகள், வறுமை காரணமாகத் தமது சிறுநீரகங்களை விற்பனை செய்யும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் செப்டெம்பர் மாத, இலங்கை தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விதவைகள் என அழைப்பதால், அவர்களது மனம் வேதனைப்படும் என்பதற்காக, ‘பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்’ என்ற சொல், பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறாக வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன.
இதைவிட, சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு வறுமை மட்டுமா காரணம், அல்லது வேறு ஏதேனும் காரணங்களும் திரைமறைவில் உள்ளனவா என்பது பற்றியும் கண்டறியப்பட வேண்டும்.
மேலும், வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், உடற்குறைபாடுகளுடன் சிசுக்கள் பிறக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளதாக, செயற்கை அவயவங்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெயப்பூர் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கணவன், மனைவி இருவரும் உழைத்தால் கூட, இன்றைய பொருளாதாரச் சுமை, கனதியாக உள்ளது. இவ்வாறான சூழலில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் போன்றோரது நிலை என்னவாக இருக்கும்?
உழைப்பு இல்லை, சேமிப்பு இல்லை, பணம் இல்லை; வறுமை மட்டுமே உள்ள நிலையே அவர்கள் வாழ்வில் தொடர்கின்றது. இது பொருளாதார நிலைமையை மய்யப்படுத்தியது. ஆனால், நிம்மதி இல்லை, மகிழ்ச்சி இல்லை, கௌரவம் இல்லை; கவலை மட்டுமே உள்ள நிலைமையே அகம் சார்ந்த நிலைவரமாக உள்ளது. இவர்கள், தங்கள் வாழ்நாள் பூராவும் இப்படியே இருந்து விடுவோமோ என, அச்சம் கொள்கின்றார்கள். இவர்களது அச்சம், துடைத்து எறியப்பட வேண்டும். இவர்கள், தங்கள் வசம் ஆயிரக் கணக்கான சோகக் கதைகளை சுமந்து திரிகின்றார்கள். துயரக் கதைகளை வௌியில் சொல்லாமல், மனதுக்குள் பூட்டி வைத்துள்ள நிலையே, துயரத்திலும் துயரமாகும்.
பனையால் வீழ்ந்தவனை, மாடு ஏறி மிதித்தது போல, போரால் அசுரத்தனமாக மிதிக்கப்பட்டவர்களை, தற்போது இயற்கையும் ஏறி மிதிக்கின்றது. சற்றுத் தலை நிமிரலாமா என எட்டிப் பார்க்க, இயற்கை எட்டி உதைத்து விட்டிருக்கின்றது.
அன்று, செயற்கையாக உருவாக்கப்பட்ட போரால், பெரும் அழிவுகளைக் கண்ட வன்னிப் பிரதேசத்தை, இன்று இயற்கை துவம்சம் செய்து விட்டிருக்கின்றது.
அன்று, முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளின் மூச்சு அடங்கும் போது, மூச்சுக் காட்ட முடியாதவாறு, எம் கைகளுக்கு கைவிலங்குகள் இடப்பட்டிருந்தன. மனிதத்தை இழந்த யுத்தத்துக்கு ‘மனிதாபிமானப் போர்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பூவும் பிஞ்சுமாக காயும் கனியுமாக உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இன்று, இயற்கை இவர்களைச் சீண்டி உள்ளது. பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. மொத்த இழப்புகள் 30 பில்லியன் ரூபாயைத் தாண்டி விட்டது.
இவ்வாறான இயற்கை இடர், இன்று தெற்கில் ஏற்பட்டிருந்தால், முழு நாடுமே அவர்களை நோக்கி ஓடியிருக்கும்; உதவிகள் கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும்; அமைச்சர்கள் படை எடுத்திருப்பார்கள். நிவாரணங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கும்.
போர் ஓய்ந்த பத்து ஆண்டுகளில், வன்னி மாவட்டங்களும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டமும் தொடர்ந்து வறுமையில் தத்தளிக்கின்றது. இந்த மக்களைப் பொருளாதார ரீதியாகத் தரம் உயர்த்த, எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமனதுடன் ஆரம்பிக்கவில்லை.
இவ்வாறாக உடல் ரீதியாக, உளரீதியாக பொருளதார ரீதியாக இயலாமையில் உள்ளவர்களை, இடர் மேலும் இடறி வீழ்த்தி விட்டது. ஆனாலும், இவர்களது கண்களில் கண்ணீர் வர, நாம் அனுமதிக்க முடியாது. எம்மால் முடியும் என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை; நம்பினால் தானே வாழ்க்கை.
ஆகவே, இன்று பிறந்துள்ள புதிய ஆண்டில், இவர்களது புதிய வாழ்வுக்காக, எமது வேறுபாடுகளைக் களைந்து, புதிய உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பிப்போம்.
இன்று பிறந்துள்ள புதிய ஆண்டு, முற்றிலும் குருதியால் நனைந்த வடக்கு, கிழக்கு மண்ணில், புது வசந்தங்களைக் கொண்டு வரவேண்டும்; 70 ஆண்டுகளுக்கு மேலான, எமது மக்களின் அவல வாழ்வுக்கு வெளிச்சத்தை வழங்க வேண்டும் என, எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.
Average Rating