இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்? ( கட்டுரை)
புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கூட்டணியும் பா.ஜ.கவுக்குப் பிடிக்காத சில கட்சிகள் ஒருங்கிணைந்து தனிக் கூட்டணியும் (உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஒரிசாவில் நவீன் பட்நாயக்) அமைவதற்கான சாத்தியக்கூறுகளைப் புதுவருடம் உருவாக்கும் என்றால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், மும்முனைப் போட்டியாக மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது.
காங்கிரஸ் தலைமையில் ஓரணியும் காங்கிரஸும் பா.ஜ.கவும் இல்லாததோர் அணியும் பா.ஜ.க தலைமையில் இன்னோர் அணியுமாக மூன்று அணிகள் களத்தில் நின்றால், பா.ஜ.க தலைமையிலான அணி தவிர, காங்கிரஸ் தலைமையிலான அணியும் மற்றோர் அணியும் தேர்தலுக்குப் பின்னர், ஓரணியாக இணையும் வாய்ப்புகளும் உண்டு. அதை மறுத்து விட முடியாது.
ஆகவே, “நிலையான ஆட்சியை மத்தியில் கொடுக்க, நிலையில்லாத கூட்டணிகள்” உருவாகி விடுமோ என்ற அச்சம், பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாகவே இப்போதைய அரசியல் நிலைமைகள் காணப்படுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு, சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கிறார். காங்கிரஸூம் பா.ஜ.கவும் இல்லாத ‘பெடரல் முன்னணி’க்கு தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சி செய்கிறார். ஆனால் இருவரும் ஜென்ம எதிரிகளாக, பக்கத்து பக்கத்து மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள்.
கர்நாடக மாநில முதலமைச்சராக இருக்கும் குமாரசாமியும் காங்கிரஸ் – பா.ஜ.க அல்லாத மாநிலக் கட்சிகள், கூட்டணிக்குத் தயார் என்பது போல், சில சமிஞ்ஞைகளைச் செய்து கொண்டிருக்கிறார். டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த குமாரசாமி, “எங்களுக்கும் காங்கிரஸுக்கும் தொகுதிப் பங்கீடு எதுவும் நடக்கவில்லை”என்று கூறியிருக்கிறார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் தனக்கு, காங்கிரஸ் கொடுக்கும் தொல்லைகளில் மிரண்டு போயிருக்கிறார் என்பதையே இந்தப் பேட்டி காட்டுகிறது. இப்படிச் சொல்வதன் மூலம், “என் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை” என்ற செய்தியை வெளியில் விட்டிருக்கிறார்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.கவின் தயவில்தான் சந்திரசேகர் ராவின் வெற்றி தங்கியுள்ளது என்பதில்லை. ஆகவே, அவர் இரு கட்சிகளையும் உதறித் தள்ளி விட்டு, மாநிலக் கட்சிகளை அரவணைத்துக் கூட்டணி வைக்க முடியும்.
குமாரசாமிக்கும் அவ்வாறே நிலை. அவர், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியில் இருக்கிறார். ஆனால், அவர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும், அவர்களின் ஆசியால் ஆட்சியில் தொடரவும் முடியும்; நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் முடியும்.
ஆகவே, குமாரசாமியின் பேட்டியும் சந்திரசேகர் ராவின் ‘பெடரல் முன்னணி’யும் ஒரே திசையில் பயணிக்கின்றன. இது புத்தாண்டில் இன்னும் வலுப்பெறுமா அல்லது வலுவிழக்குமா என்பது பா.ஜ.கவுக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தது.
ஏறக்குறைய ஒரிசா முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக் நிலையும் அதுதான். அவருக்கு, காங்கிரஸும் தேவையில்லை; பா.ஜ.க.வும் தேவையில்லை. தனியாகவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடியும் என்று நம்புகிறார். ஆகவே, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், நவீன் பட்நாயக் ஆகிய மும்மூர்த்திகள் இப்போதைக்குத் தேசிய அரசியலில் எந்தக் கட்சியின் தலைமையில், யார் தலைமையில் அணி அமையும் என்பதை முடிவு செய்ய முயற்சிக்கும் மாநிலத் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுடன் காங்கிரஸும் பா.ஜ.கவும் தேவையில்லை என்று கருதும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கை கோர்ப்பாரா என்பதுதான் புத்தாண்டில் அமையப் போகும் ‘மூன்றாவது அணி’, அதாவது காங்கிரஸ், பா.ஜ.க இல்லாத மாநிலக் கட்சிகளின் தலைமையிலான அணி என்பதை முடிவு செய்யும்.
வருகிற புத்தாண்டின் பயணம் இப்படியொன்றால், போகிற ஆண்டான 2018 எப்படியிருந்தது? காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் “ராகுல் பிரதமர்” என்ற முழக்கத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.
அக்கட்சியின் சார்பில், அவர் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய ஆவேச உரை, நரேந்திரமோடியைப் பார்த்து ‘பிரியா வாரியர்’ பாணியில் கண் அடித்தது, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் மதச்சார்பற்ற ஆட்சி அமைத்தது, ‘ரபேல்’ விமானம் வாங்குவதில் ஊழல் என்று நாட்டு மக்கள் மத்தியில் பா.ஜ.க அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, எதிர்க்கட்சிகளை ஓருங்கிணைக்க பெங்களூரிலும், டெல்லியிலும் கூட்டம் நடத்தி, விவாதித்தது போன்றவைகளைப் பட்டியலிடலாம்.
குறிப்பாக, “காங்கிரஸ் ஆட்சிக்கு வராது” என்ற பிரசாரத்தையும் “ராகுல் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறாது”என்ற பிரசாரத்தையும் முறியடித்து, மீண்டும் ஆட்சிக்கு வரும் கட்சியாக, அப்படியொரு செல்வாக்கை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்ட கட்சியாக, காங்கிரஸும் ராகுல் காந்தியும் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு இருந்த, நற்பெயர் என்ற டயரில் ஓட்டையை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி என்றே சொல்ல வேண்டும். ஆகவே அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கு மகிழ்ச்சியுடன் பிரியாவிடை சொல்லி, 2019ஆம் ஆண்டைப் புதிய தென்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கத் தயாராகி விட்டார் ராகுல் காந்தி.
ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், ‘இன்னொரு முறையும் பிரதமர் மோடி தான் பிரதமராவார்’ என்றிருந்த செல்வாக்கை 2014 இலிருந்து 2017 வரை நிலையாகக் கொண்டு சென்றாலும், 2018ஆம் ஆண்டு, அக்கட்சிக்குச் சோதனைகள் மிகுந்த ஆண்டாகவே கழிந்து செல்கிறது.
‘ரபேல்’ விமான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சான்றிதழ் அளித்திருந்தாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு, உண்மையாகி விட்டது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற முழக்கத்துக்கு மிகப்பெரிய சோதனை வந்து விட்டது; கர்நாடக மாநிலத்தில் நூலிழையில் ஆட்சியமைக்கத் தவறி விட்டது; மத்திய பிரதேச மாநிலத்திலும் அவ்வாறே மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையைத் தவற விட்டு விட்டது. சத்திஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ‘மோடி-அமித்ஷா’ கூட்டணி, தீவிர பிரசாரம் செய்தும் வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை.
ராகுல் தலைமையிலான காங்கிரஸிடம், முதன் முறையாக 2018இல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தோற்று நிற்கிறது. ‘பிரசார கதாநாயகனாக’த் தங்கள் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருந்த நரேந்திர மோடியை, மக்கள் இறக்கி வைக்க விரும்புகிறார்களோ என்ற சந்தேகத்தை, விதைத்த ஆண்டாக 2018ஆம் ஆண்டு மாறியது, பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.
“தலைவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம்; ஆனால், ‘ஈகோ’ இருக்கக்கூடாது; எம்.பி, எம்.எல்.ஏக்கள் தோற்றால், தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர்களில் மிக முக்கியமானவரான நிதின் கட்கரி பேசியிருப்பது, பா.ஜ.கவுக்குள் 2014இல் பிரதமர் மோடி மீதிருந்த நம்பிக்கை, 2018இல் தளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
‘வெற்றி பெறும் தலைவர் ராகுல்’ என்றும், ‘தோல்வி அடையும் தலைமை, மோடி-அமித்ஷா கூட்டணி’ என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளே நினைக்கத் தொடங்கி விட்டன என்பது, பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய இழப்பு.
ஆகவே, சாதனைச் சரித்திரத்தைச் சொல்லி, மீண்டும் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையை, 2018ஆம் ஆண்டு பா.ஜ.கவுக்குக் கொடுக்காமலேயே விடைபெற்றுச் செல்கிறது. அதனால் பா.ஜ.கவுக்கு 2018ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கக் கூடியதாகவும் இல்லை; பிறக்கப் போகின்ற 2019 புத்தாண்டையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நிலைமையிலும் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
இந்த இரு கட்சிகளும்தான், தேசிய அளவில் 2019இல் யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பதை நிரூபிக்கும் என்ற நிலை மாறி, மாநிலக் கட்சிகளின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்ற காட்சி தோன்றியுள்ளதால், மாநிலக் கட்சிகளைப் பொறுத்தமட்டில், 2019ஆம் ஆண்டை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கக் கூடிய வருடமாகவே இருக்கும்.
ஆகவேதான், அந்தக் கட்சிகள் எல்லாம் நம்பிக்கையுடன், மோடி எதிர்ப்பையும் எதிர்பார்ப்புடன் ராகுல் ஆதரவையும் முன்னெடுத்துச் செல்கின்றன. அதே சமயத்தில், 1999இல் இருந்து பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் நிலையான ஆட்சியைப் பார்த்து விட்ட இந்திய வாக்காளர்களுக்கு, 2019 நிலையான ஆட்சியைத் தரும் மகிழ்ச்சிக்குரிய புத்தாண்டாக இருக்குமா, நிலையற்ற தன்மையின் மொத்த உருவமாக, மத்தியில் ஓராட்சி அமையுமா என்ற குழப்பத்தைக் கொடுத்து விட்டு, 2018ஆம் ஆண்டு விடை பெறுகிறது.
Average Rating