பப்பி பிரியரா நீங்கள்?! (மருத்துவம்)
நன்றியுணர்வில் நாய்களுக்கு ஈடு, இணை எந்த உயிரினமும் கிடையாது. ஆனால், மனிதனின் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, நாய் வளர்ப்பின் பராமரிப்பு முறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நாய்களின் உடலில் காணப்படுகிற அலர்ஜிக்குக் காரணமான சாதாரண உண்ணி தொடங்கி, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரேபீஸ் வைரஸ்தான் இதற்கு காரணமாக அமைகிறது.
மனிதனின் செல்லப்பிராணிகள் பட்டியலில் நன்றி மறவாத நாய்க்கு என்றைக்குமே முதலிடம்தான். மேலும், அவனுடைய உற்ற நண்பனாக திகழ்வதும் இந்த நான்கு கால் பிராணிதான். அதாவது, மனிதனுக்கு, இந்த உயிரினத்தால் அலர்ஜி எதுவும் வராத வரைக்கும்தான் இந்த நிலை. நாய்-மனிதன் இடையிலான இந்த அன்பான உறவு, நாயின் உடலில் காணப்படுகிற உண்ணி(Dander) மற்றும் எச்சில், சிறுநீர் போன்றவற்றோடு
முடிவுக்கு வந்து விடுகிறது.
நாயின் முடியால் மனிதனுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுவது இல்லையென்றாலும், தூசு, உண்ணி(ஒவ்வாமையை ஏற்படுத்துகிற ஒருவகை பூச்சி) ஆகியவை இம்முடியினுள் மறைந்து கிடக்கின்றன. அலர்ஜி காரணமாக, பலவிதமான விளைவுகள் உண்டாகும்போது, உணர்ச்சிகளுக்கு எளிதாக ஆட்படும் பலவீனமான மனிதனின் நோய் எதிர்ப்பு திறன் எந்தவிதமான பிரச்னைகளையும் ஏற்படுத்தாத புரதத்தில் இயல்புக்கு மாறாக செயல்படத் தொடங்குகிறது.
பல்வேறுவிதமான நாய் இனங்கள், வெவ்வேறு வகையான உண்ணிகளை உற்பத்தி செய்கின்றன. எனவே, மற்ற விலங்கினங்களுடன் ஒப்பிடுகையில், ஒவ்வாமை ஏற்படுவதற்கு உரிய காரண, காரியங்கள் நாயிடம் அதிகம் உள்ளது. இந்தக் காரண, காரியங்களில், தரை விரிப்புகள், ஆடைகள், சுவர்கள், சோஃபா மற்றும் படுக்கைகளில் காணப்படுகிற இதனுடைய ரோமம்தான் இறுதியான காரணமாக இடம் பெறுகிறது. ஒவ்வாமைக்குக் காரணமான நாயினுடைய முடி, காற்றில் நீண்ட நேரம் பரவி காணப்படும்.
பூனை, நாய் முதலான வளர்ப்பு பிராணிகளால் ஏற்படுகிற அலர்ஜியின் தாக்கம் வீடு மட்டுமில்லாது வெளியிடங்களில் காணப்படும். வீடுகளில் பராமரிக்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டும் இதற்கு காரணம் அல்ல. ஏனென்றால், மக்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் மூலம், ஒவ்வாமையைப் பல்வேறு இடங்களுக்குப் பரவச் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல், விலங்குகளைத் தடவிக் கொடுப்பதன் மூலமாகவும், அலர்ஜியை ஏற்படுத்துகிற மாசு காற்றில் கலக்கிறது. மேலும், வீட்டினுள் மேற்கொள்ளப்படும் தூசு அகற்றல், வெற்றிடத்தைச் சுத்தம் செய்தல் முதலான வீட்டுப் பராமரிப்பு பணிகளாலும் இந்த மாசு காற்றுடன் கலக்கிறது.
பெரும்பான்மையான வீடுகளில், முக்கிய செல்லப்பிராணியாக திகழும் நாயால் மனிதனுக்கு ஏற்படுகிற அலர்ஜியை, மிதமான அலர்ஜி, கடுமையான அலர்ஜி என இருவகையாகப் பிரித்து கொள்ளலாம். இவற்றில், வளர்ப்பு பிராணிகளால், நமது உடலில் ஏற்படுகிற வீக்கம், மூக்கின் உட்பகுதிகளில் அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு, தோல் சிவந்து காணப்படுதல்(நாய் நக்குவதால் ஏற்படுதல்), இருமல், மூச்சுத்திணறல், முகம், கழுத்து மற்றும் மார்பு ஆகிய இடங்களில் தடித்தல்(Rashes), கடுமையான ஆஸ்துமா பாதிப்பு(எளிதாக ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள்) போன்ற ஒவ்வாமையைச் சில அறிகுறிகளால் தெரிந்து கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தினரைப் பொறுத்தவரை சிரங்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம். அது மட்டுமில்லாமல், மேலே சொல்லப்பட்ட அலர்ஜிகளும் வரும் வளர்ப்பு பிராணிகளுடன் குழந்தைகளை நெருக்கமாகப் பழக விடுவதால், எண்ணற்ற அலர்ஜியால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுவது ஒருபுறம் இருந்தாலும், நாய் முதலான செல்லங்களுடன் குழந்தைகள் நெருக்கமாகப் பழகுவதால், வருங்காலத்தில் அலர்ஜியின்
தாக்கங்கள் அதிகரிக்கலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், ஒவ்வாமையைத் தடுத்து, அவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வது அவசியம்.
*வளர்ப்பு பிராணிகளைத் தேர்வு செய்யும் முன், குடும்பத்தினரிடம்ஆலோசனை கேட்டல்.
*படுக்கை அறை போன்ற இடங்களில் Dog Free Zone என்று சொல்லப் படுகிற நாய் உலா வராமல் பார்த்து கொள்ளல்.
*செல்லப் பிராணிகளின் சருமத்தைப் பாதிக்காத வகையில், தரம் நிறைந்த, இதமான சோப், ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்துதல்.
*உண்ணிகளின் புகலிடமாக திகழ்கிற கார்பெட், ஸ்க்ரீன், மெத்தை போன்றவற்றை வாரத்துக்கு ஒருமுறை அகற்றி, சுத்தம் செய்தல்.
*காற்று மூலம் பரவும் ஒவ்வாமையைத் தடுத்திட, சக்தி வாய்ந்த உபகரணங்களைப் பயன்படுத்துதல்.
*வாக்யூம் கிளீனரை நன்றாக மூடி வைத்தல்.
*வளர்ப்பு பிராணிகளுடன் வாக்கிங் போதல், விளையாடுதல் என பல மணிநேரம் செலவழித்தபின்னர், மறக்காமல் ஆடைகளை மாற்றல்.
*அலர்ஜி மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மருத்துவரிடம் பேசுதல்.
*வளர்ப்பு பிராணிகளால் ஏற்படுகிற அரிப்பு, தடிப்பு முதலான ஒவ்வாமையின் தாக்கத்தை அறிந்துகொள்ள, முறையான பரிசோதனைகள் மேற்கொள்வதன்மூலம், தேவையான சிகிச்சை முறைகளை அறிதல்.
*அலோபதி சிகிச்சை முறைகள் மட்டுமில்லாமல், நாய் முதலான ‘செல்லங்கள்’ ஏற்படுத்துகிற அலர்ஜியைக் குணமாக்க, உப்பு நீர் கரைசல் போன்ற இயற்கை வைத்திய முறைகளும் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளல்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வந்தாலே, செல்லப் பிராணிகளும் நலம் பெறும். வளர்ப்போரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால், செல்லப் பிராணியின், ‘செல்லமாக’ நீங்கள் இருக்க விரும்பினால், அதனுடன், நீண்ட வாக்கிங் அவசியம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்!
Average Rating