ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
சற்றே, 70 ஆண்டுகள் பின்நோக்கின், பிரித்தானியரின் அடக்கு முறையிலிருந்து முழு இலங்கையும் விடுபட்டு (1948), சுதந்திரக் காற்றை சுவாசித்த அதேநேரம், பெரும்பான்மை இனத்தவரின் அடக்கு முறைக்குள் தமிழினம் சிக்கிக் கொண்டது.
அடுத்த ஆண்டே (1949) கிழக்கு மாகாணம் அம்பாறையில், ‘கல்லாறு’, ‘கல்லோயா’ எனப் பெயர் மாறி, உருமாறியது. தொடர்ந்து, அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், வடக்கு, கிழக்கில் முழு வீச்சாக முன்னெடுக்கப்பட்டன; முன்னெடுக்கப்படுகின்றன.
அடுத்து, சிங்கள மொழி மட்டும் சட்டம் (1956), கல்வியில் தரப்படுத்தல் (1972), தமிழ் மக்களின் கல்விப் பொக்கிஷம் எரிப்பு (1981) என, அடக்கு முறைகள் உச்சம் தொட்டன.
இலங்கையில் தமிழ் மக்கள், காலங்காலமாகத் தேசிய இனமாகத் தன்னகத்தே, தனித்துவமான பண்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தேசமாக வாழ்ந்து வருகின்றனர்.
நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் ஆகிய அடிப்படைப் பண்புகளே ஓர் இனத்தினது இருப்பைத் தாங்கும் பிரதான நான்கு தூண்களாக விளங்குகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், தமிழினத்தின் தனித்துவமான நிலையை, முழுமையாகத் தகர்த்து, இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களப் பௌத்த தேசமாக்கும் நீண்ட கால நிகழ்ச்சித் திட்டத்தை, சூட்சுமமாகத் தயாரித்தது பேரினவாதம்.
தமிழ் இனம், இந்தத் பேராபத்திலிருந்து தனது இருப்பைப் பேண அல்லது தக்கவைத்துக் கொள்ள, அன்றைய தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், ஜனநாயக ரீதியில் பல்வேறு அஹிம்சைப் போராட்டங்களை நடத்தினார்கள்.
ஆனால், ஆட்சியாளர்களோ, தமிழ்த் தலைவர்களது ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு, எக்காலத்திலும் ஜனநாயக ரீதியில் பதில்களை வழங்கவில்லை. தமிழ் மக்களது, 30 ஆண்டு கால ஜனநாயகப் போராட்டங்களுக்குச் சற்றும் மதிப்பளிக்காத பேரினவாதம், மூர்க்கத்தனமாக மேலும் மேலும் கொடுமைப்படுத்தியது. இவ்வாறான நிலையில், சமாதானத்துக்கான அறப்போர் பயணிப்பதற்கு வேறு வழியின்றி, இறுதித் தெரிவாக, வலிகள் நிறைந்தது என நன்கு தெரிந்தும் ஆயுதப்போர் ஆரம்பமானது.
இவ்வாறாக ஆரம்பித்த போராட்டமே, உள்நாட்டுக்குள் இருந்த சிங்கள, தமிழ் இனப்பிணக்கை, சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்றது. ஆயுதப் போராட்டத்தின் வலுவே, புலிகளைத் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்ற உயர்நிலைக்கு இட்டுச் சென்றது; இலங்கை அரசாங்கத்தைப் பேச்சு மேசைக்கு கட்டாயத்தின் நிமித்தம் அழைத்து வந்தது.
ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தின் வீழ்ச்சி (2000), இலங்கையில் மரபு வழியில் சண்டையிடக் கூடிய இரு சமவலுவான படைகள் உள்ளன என, உலகுக்குப் பறை சாற்றியது. 2002ஆம் ஆண்டில், தாய்லாந்து தொடக்கம் 2006ஆம் ஆண்டில் ஜெனீவா வரை, வெளிநாட்டு மத்தியஸ்தர்களுக்கு மத்தியில், இரு தரப்பும் சம தரப்பாகப் பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேச வழி வகுத்தது.
இது இவ்வாறிருக்க, ஆயுதப் போராட்டத்தின் மௌனத்தோடு, 2010களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாகத் தமிழ் மக்களது தேசிய அரசியலுக்குள் காலடி வைத்தார்.
இவ்வாறாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளோ, அரசியல் பிரச்சினைகளோ மீண்டும் தொடக்கப் புள்ளியிலேயே உள்ளன. ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் இனப்பிணக்கு, அப்படியே துடிப்புடனேயே உள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி அல்லது பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத் தரப்பு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை ஆகியோரைக் கொண்ட அணியோடு, எப்போதாவது சமதரப்பாகப் பேச்சுவார்த்தை நடத்த, உளப்பூர்வமாக விரும்பினார்களா? அவ்வாறான தேவைகள் ஏதேனும் அவர்களுக்குத் தற்போது உண்டா?
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் பல நூறு நாள்களாகத் தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வீதியில் உண்டும் உறங்கியும் ஆன தமிழ் மக்களது விதியை, ஜனநாயகப் போராட்டங்களால் தீர்க்க முடிந்ததா?
புலிகளாகச் செயற்பட்டவர்கள் எனச் சில ஆயிரம் போராளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புலிகள் என்றும் புலிகள் எனச் சந்தேகத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில நூறு அப்பாவிகளை விடுவிக்க, ஜனநாயகப் போராட்டங்கள் துணை புரிந்தனவா?
திருகோணமலை திருகோணேஸ்வரம், நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் போன்ற பல ஆலயங்களது திருத்த வேலைகளுக்குக் குறுக்கே தொல்பொருள் திணைக்களம் நிற்கின்றது. இதற்கு ஜனநாயகப் போராட்டங்கள் விடை தந்தனவா?
எமது நாட்டின் பொருளாதார விருத்திக்காகத் தங்களது குருதியை அட்டைக்குக் கொடுத்து உழைக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு, வெறும் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள ஜனநாயகப் போராட்டங்களால் முடிந்ததா?
இன்று, “ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றோம்; பாதுகாத்தோம்” என வீர வசனம் பேசுகின்றவர்கள், நம்நாட்டில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை அட(ழி)க்கும் நோக்கோடு, 1979இல் ஐக்கிய தேசியக் கட்சியால் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது, போர் இல்லை; பயங்கரவாதம் இல்லை. அப்படியாயின், ஏன் பயங்கரவாதச் சட்டம்? யாருக்கு எதிராக அது பாய்கின்றது? போர் மௌனித்த பத்து ஆண்டு காலங்களில், நீதிமன்றம் சென்று ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்களால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்ததா?
இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தை கூட, அழுகை எனும் புரட்சி ஊடாகவே, தனது இருப்பை உறுதி செய்கின்றது; இதுவே யதார்த்தம். இந்நிலையில், 2002இல் ஆயுதப்புரட்சி மூலம், வலுவான நிலையைத் தமிழர் தரப்பு அடைந்த வேளையில், 2004இல் பொதுத் தேர்தல் ஊடாக, ஜனநாயகப் புரட்சி மூலம், வலுவான நிலையை எட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறப்புக்கும் வழி வகுத்தது.
இது இவ்வாறிருக்க, ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்வுடன் ஓய்ந்திருந்த புதிய அரசமைப்பு முயற்சி தொடர்பான கதைகள், தற்போது மீண்டும் கூட்டமைப்பால், தூசு தட்டப்பட்டு வருகின்றது.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த சம்பந்தன், புதிய அரசமைப்பு மூலமாக, ‘ஒருமித்த நாடு’ வரும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால், புதிய அரசமைப்புப் பணிக்கு, புத்துயிர் என சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதே நம்பிக்கைகளை, 2015 ஜனவரி தொடக்கம் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வெளியிட்டு வருகின்றனர். “இரு கட்சிகள் இணைந்துள்ளன; தீர்வு வந்து கொண்டிருக்கின்றது” என்றார்கள்.
ஆனால், உண்மையான களநிலைவரமாக, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் உறுதியாக இருக்கின்றார்; இருப்பார். ஒக்டோபர் 26 வரை, புதிய அரசமைப்புத் தொடர்பில், ஜனாதிபதி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை; அலட்டிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது ரணில் எவ்வகையான தீர்வைக் கொண்டு வந்தாலும் நிச்சயமாக, மறைமுகமாகவேனும் தடைகளை மைத்திரி போடுவார். இதற்கு மஹிந்தவும் வலுச் சேர்ப்பார். அத்துடன் மஹிந்த அணியின் அங்கத்தவர்கள், வெளிப்படையாகவே அரசமைப்புப் பணிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
“கைக்கு எப்போதும் அகப்படாத நிலாவை பிடித்துத் தருவதாகக் கூறி, அம்மா, குழந்தைக்கு அமுது ஊட்டுவதற்கு ஒப்பானதே, புதிய அரசமைப்பின் ஊடாகத் தமிழ் மக்களுக்குத் தீர்வு வரப்போகின்றது என்ற, எமது தலைவர்களின் கதையுமாகும்.
நாட்டின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் புலிகள் தடையாக உள்ளனர் என, 30 ஆண்டுகளுக்கு மேலாகக் கூக்குரல் இட்ட பேரினவாதம், புலிகள் இல்லாத கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தது?
ஜனநாயக அரசியலுக்குப் புலிகள் தடையாக இருந்தனர் எனக் கூறுவோரால், புலிகள் இல்லாத கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்ய முடிந்தது?
Average Rating