IVF சிகிச்சையில் லேட்டஸ்ட்!! (மருத்துவம்)
ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்ள யாருக்குத்தான் ஆசையிருக்காது. குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கு இருக்கும் புதிய சிகிச்சையான ‘முன் கருப்பதியம் மரபணு ஆய்வு’ முறை குறித்து பேசுகிறார் சிறப்பு மருத்துவர் அருண் முத்துவேல்.
‘‘கருவுறும் திறன் மற்றும் குழந்தையின்மை பிரச்னைகளைக் கொண்டுள்ள தம்பதியர் ஐ.வி.எஃப் மூலம் குழந்தை பெறும் திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த சோதனை முறையே Preimplantation Genetic Screening (PGS) என்கிறோம்.
முன் கருப்பதியம் மரபணு என்று தமிழில் சொல்லப்படும் இந்த முறையில் ஐ.வி.எஃப் கருக்களின் மரபு தகுதி நிலையினை சிகிச்சைக்கு முன்பாக உறுதி செய்யும் எளிய வழிமுறையாகும். மேலும் இந்த ஆய்வின் மூலம் கருக்களின் மரபணு நிலையினை மதிப்பீடு செய்து ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம்’’ என்றவரிடம் அதற்கான தம்பதியரின் உடல் தகுதிகள் என்னவென்று
கேட்டோம்…
‘‘தாய்மை அடையும் வயதைக் கடந்தவர்கள் (குறிப்பாக 35 வயதைக் கடந்தவர்களாக இருக்கலாம்), தொடர் கருச்சிதைவுகள், ஐ,வி,எஃப் தோல்விகள், குறைந்த மற்றும் தகுதியில்லா விந்தணுக்களைக் கொண்டவர்களுக்கு இந்த முன்கருப்பதிய மரபணு ஆய்வு சரியானதாக இருக்கும்.
கரு முட்டைகளை மாற்றுவதற்கு முன்னதாக இந்த ஆய்வு நடக்கிறது. இதனால் Aneuploidies எனும் அசாதாரண மரபு திரி(Chromosome) எண்ணிக்கை கொண்ட கருக்களைத் தவிர்த்து சிறந்தவற்றைக் கண்டறிந்து அவற்றை கருத்தரிப்புக்குப் பயன்படுத்த உதவுகிறது. இந்த முறையில் கருத்தரித்தல் விகிதம் அதிகமாவதுடன் கருத்தரித்தலுக்கான நேரமும் குறைகிறது.
ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கருத்தரித்தலை மேம்படுத்திக் கருச்சிதைவுகளைக் குறைக்கிறது. இதேபோல் Preimplantation genetic diagnosis for treatment கரு முட்டைகளுக்கான அடிப்படை மரபு சோதனையாகும். ஐ.வி.எஃப். அல்லது ஐ.சி.எஸ், சிகிச்சைகள் மூலமாக மட்டுமே PGS சிகிச்சைக்கான கரு முட்டைகளை உருவாக்க முடியும்.
ஒரு விந்தணுவும், ஒரு முட்டையும் தலா 23 மரபுதிரிகள் கொண்டுள்ளது. ஒரு கருவுற்ற முட்டையில் பாதி தாயின் டி.என்.ஏ., மீதி தந்தையின் டி.என்.ஏ.,வும் உள்ளது. கருத்தரித்தலுக்குப் பின்னர் 46 மரபுத்திரிகளைக் கொண்ட ஆரோக்கியமான முட்டை வளரத் தொடங்குகிறது. இது போன்ற உருவாக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபுத்திரிகள் விடுபட்டுப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது கருச்சிதைவு அல்லது பிறவிக் குறைபாட்டினை உண்டாக்குகிறது. 40 முதல் 50 சதவீதம் இளம் மற்றும் வயதான தம்பதியருக்கு இது போன்ற பிறழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஐ.வி.எஃப் முறையில் பலமுறை கருத்தரித்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் அதிக மன அழுத்தம் மற்றும் செலவுகள் ஏற்படும். கருவுற்றலுக்காக பல முறை கரு முட்டைகளை மாற்றும்போது இரட்டையர் மற்றும் மூன்று குழந்தைகள்
உருவாகவும் வாய்ப்புள்ளது.
PGS மூலம் கருப்பதியம் மற்றும் குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும். ஐ.வி.எஃப் சுழற்சிகளுக்கு இடையிலான நேரம் குறைகிறது. கருச்சிதைவு மற்றும் குறைப் பிரசவங்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மன நலிவு போன்ற மரபு நோய்களைத் தவிர்க்க முடியும். இரட்டை மற்றும் பன்முறை கர்ப்பத்திற்கான காரணம் மற்றும் ஆபத்துக்களைக் குறைக்கும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருவுரும் வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.’’இந்த பரிசோதனை எவ்விதம் செய்யப்படுகிறது?
‘‘ஒரு கருத்தரித்தல் முட்டை 2, 4, 8 என பிரியும். ஐந்தாம் நாளன்று 128 உயிரணுக்களாக உருவாகும். ஒரு திரள் உயிரணுக்கள் கருகுழவாகவும், கரு குடையாகவும் உருவாகிறது. இந்த செயல்முறையில் கருவியலாளர் ஒரு மயிரிழையின் 120-க்கு விட்டம் கொண்ட சிறு கருவியைக் கொண்டு கருகுழவு உருவாக்க சில உயிரணுக்களை திரள் உயிரணுக்களிலிருந்து எடுத்துவிடுவார். பின் மரபு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பான அணுக்கள் கொண்டு டி.என்.ஏ. மாதிரிகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரணுவில் இருந்து எடுக்கப்படும் மரபணுக்கள் கணக்கிடப்படுகின்றன. ஆய்வுத்தகவல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உரிய மருத்துவரின் தகவல்கள் அடிப்படையில் தம்பதியருக்கு சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான கருமுட்டை மாற்றுதல் பற்றிய அறிவுரை வழங்கப்படுகிறது.
இதன் பின்னரே கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் உண்டாகிறது. பின்னர் கரு முட்டைகள் எதிர்கால பயன்பாட்டிற்காக உறைய வைக்கப்படுகிறது. தம்பதியர் மரபியல் ஆலோசகரைச் சந்தித்து இந்த சிகிச்சை முறைகள் குறித்த முழு விவரங்களையும் பெற்று ஆரோக்கியமான குழந்தைப் பேற்றுக்கு தயாராகலாம்’’ என்கிறார் மருத்துவர் அருண் முத்துவேல்.
Average Rating