ஆட்டுவித்தல்!! ( கட்டுரை )

Read Time:18 Minute, 57 Second

இனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.

கடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும்.

அதாவது, இன்றைய காலப் பகுதியில், கடும்போக்கு மற்றும் இனவாத சக்திகளுக்கு, எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளிடத்திலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிடைக்கின்ற போதிலும், ஓர் எல்லைக்கு அப்பால், இனவாத சக்திகளை நூறு சதவீதம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, அச்சக்திகள் வளர்ந்து விட்டிருக்கின்றன.

இன்றைய சூழலில், வீடுகளில் தற்பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பொல்லுகளைப் போல, எந்தப் பெரும்பான்மையினக் கட்சிக்கும் தேவை என்று வருகின்ற போது, பயன்படுத்திக் கொள்ளத்தக்க விதத்தில், இனவாத அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை என்பது பல்லின – பல்கலாசாரப் பிரிவுகளைச் சேர்ந்த, மக்கள் வாழும் ஒரு தீவு என்பதை, எப்போதும் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவரும் நினைவில் வைத்திருப்பது நல்லது.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டே, அண்மையில் கண்டிக்கு மேற்காக, கேகாலை மாவட்டம், மாவனல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சிலை உடைப்புச் சம்பவங்களையும் அதனது பின்னணிகள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

பள்ளிவாசலை உடைப்பதும், கோவில்களைச் சேதப்படுத்துவதும் விகாரைகளையோ புத்தர் சிலைகளையோ நாசமாக்குவதும் பொதுவில் ஒரே வகையான குற்றங்கள்தான்.

தலதா மாளிகைக்கு குண்டுவைத்தமையும் பல பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமையும் இப்போது சில பௌத்த சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமையும் அளவுகளிலும் பரிமாணங்களிலும் வேறுபட்டாலும் அவை யாவும் ஒரேவகையான நாச வேலைகள்தான்.

இந்த அடிப்படையிலேயே, மாவனல்லைச் சம்பவங்களை (அதனை யார் செய்திருந்தாலும்) நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், முதலில் முஸ்லிம் இளைஞர் ஒருவர், பெரும்பான்மையின மக்களால் பிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர், ஏழு முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு, நேற்று முன்தினம் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, 14 நாள்கள் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

மாவனல்லைக்கு அருகிலுள்ள பெரும்பான்மையினக் கிராமங்களில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலைகள், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், இது முற்றுமுழுதாக இனவாதக் குழுக்களின், அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அனுமானமே இருந்தது. ஆனால், பின்னர் இதுபற்றிய அபிப்பிராயங்கள் மாற்றமடைந்து இருக்கின்றன.

மாவனல்லைச் சம்பவங்கள் தொடர்பில், இப்போது முஸ்லிம்கள் மீதே விரல் நீட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் அவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களும் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியாத ஒரு சிக்கலுக்குள், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தள்ளியிருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்குள் வெளிநாட்டு பின்னணியைக் கொண்ட, தீவிரபோக்குடைய அமைப்புகள் ஊடுருவி இருக்கின்றன என்று, நீண்டகாலமாகக் கடும்போக்காளர்கள் முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் உண்மையென நிரூபணம் செய்யப் பார்க்கின்றனர்.

எனவே, இதனை யார் யார் செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற விடயத்தை உற்றுநோக்க வேண்டியிருக்கின்றது.

நாட்டில் நடக்கின்ற பெரும்பாலான நகர்வுகளுக்குப் பின்னால், அரசியல் காரணங்களும் நிகழ்ச்சி நிரல்களும் ஒளிந்துகொண்டிருக்கின்றன என்ற விடயத்தை, உன்னிப்பாக நோக்குவோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக, இனங்களுக்கு இடையில் அல்லது தேசிய மட்டத்தில் நடக்கின்ற முக்கியமான சம்பவங்களில், எதிர்பாராமல் தற்செயலாக இடம்பெறுபவை மிகச் சொற்பமானவையே ஆகும். மற்றெல்லா முன்னெடுப்புகளும் யாரோ ஒருவரின் தேவைக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பது, அடிப்படையற்ற விடயமல்ல.

இந்த அடிப்படையில் நோக்கினால், நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சி பலிக்கவில்லை. தன்பாட்டில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி காட்டி மறைக்கப்பட்டிருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட, உறுதிமிக்கதோர் ஆட்சியை நிறுவியிருப்பதாகச் சொல்ல முடியாது. எந்த நிலையிலும் களநிலை மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அடுத்தடுத்துத் தேர்தல்கள் நடைபெறப் போகின்ற இப்புதுவருடத்தில், எதையாவது மேற்கொண்டு, அதில் அரசியல் இலாபம் தேடுவதற்கான நிர்ப்பந்தங்கள் மேற்குறிப்பிட்ட, குறிப்பிடப்படாத எல்லா தரப்பினருக்கும் இருக்கின்றது.

முஸ்லிம்கள் விடயத்தில், யாரும் புனிதமானவர்கள் இல்லை என்பதையும் அரசியலுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதையும் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இத்தரப்புகளில் இவ்வாறான கைங்கரியங்களை மேற்கொள்ளும் ஆற்றலை அதிகளவுக்கு எந்தத் தரப்பு கொண்டிருக்கின்றது என்பதுவும் பரம இரகசியமல்ல.

அந்த வகையில், தம்புள்ளை, அளுத்கமை, கண்டிக் கலவரங்கள், எப்படிப் பயன்களைப் பெற்றுத் தந்தனவோ, அதேபாணியில் அரசியல் இலாபம் தேடும் நோக்கிலோ, ஆட்சிக் கனவை நிறைவேற்றுவதற்காகவோ, அன்றேல் சந்தேகிக்கப்படுவது போல, யாராவது அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனோ இந்தச் சிலை உடைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

முஸ்லிம்களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவி இருக்கின்றது என்றும் முஸ்லிம் தீவிரவாதமும் அடிப்படைவாதமும் குடிகொண்டிருக்கின்றது என்றும் பொது பலசேனா போன்ற கடும்போக்கு அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், இலங்கையில் வெளிநாட்டு ஆயுதக்குழுக்கள் எதுவும் இயங்கவில்லை என்றும் முஸ்லிம்களிடையே ஒரு கட்டமைப்பு இல்லை என்றும் பாதுகாப்புத் தரப்பு, கூறி வந்தது.

இந்நிலையில், தாம் சொன்ன விடயம் உண்மை என்று நிரூபணம் செய்வதற்கும், அதை வைத்து, எதிர்காலத்தில் முஸ்லிம்களைப் பழிவாங்குவதற்கும், படுபாதகச் செயல்களைச் செய்து விட்டு, அதற்கான பழிகளை முஸ்லிம்கள் மீது போடுவதற்கான ஒரு முயற்சியாகவும் மாவனல்லைச் சம்பவங்கள் இருக்கக் கூடும்.

அத்துடன், இலங்கையில் அரசியல், இராணுவ நலன்களுக்காக இனமுரண்பாடுகளை ஏற்படுத்த நினைக்கின்ற வெளிநாட்டுச் சக்திகள், ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்களுக்குள் ஊடுருவ நினைக்கின்ற, முஸ்லிம் பெயர்தாங்கிய கடும்போக்கு அமைப்புகள், அக்கருத்தியலோடு உடன்படுகின்ற நபர்கள் இருப்பின் அந்தத் தரப்பால் ‘ஊக்கமருந்து’ அளிக்கப்பட்ட நாசவேலையாகக் கூட இது இருக்க முடியும்.

ஞானசார தேரர் போன்றவர்களுடனேயே சமரசத்துக்குப் போக வேண்டும் என நியாயம் கற்பிக்கின்ற ஆள்கள் மற்றும் அதனூடாகக் கடும்போக்காக சிந்திக்கின்ற சிங்கள மக்களைத் தம்வசப்படுத்தி, அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்குகளை அள்ளுவதற்கு மனக்கணக்குப் போடுகின்ற யாராவது இருப்பாராயின், அவர்களுக்கும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது

எனவே, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களோ அல்லது உண்மையாக சிலைகளை உடைத்த நபர்கள் வேறு தரப்பினராயின், அவர்களோ சுயமான நோக்கங்களின் அடிப்படையில் சிலை உடைப்பை மேற்கொண்டிருக்கலாம். அன்றேல், பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ள மேற்குறிப்பிட்ட தரப்பினர்களால் அவர்கள் ஆட்டுவிக்கப்பட்டிருக்கவோ வழிகெடுக்கப்பட்டிருக்கவோ வாய்ப்பிருக்கின்றது. ஆகவே சுருங்கக் கூறின்,

01. சந்தேகிக்கப்படும் நபர்களே, தமது அகத் தூண்டுதல், மதத்தீவிரப் போக்குக் காரணமாக இச்சிலையுடைப்பை மேற்கொண்டிருக்கலாம்.

02. இவர்களை வெளிநாட்டு தீவிரபோக்குச் சக்திகள் கையாண்டிருக்கலாம்.

03. இக் குழுவினரை ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி பிழையாகப் பயன்படுத்தி இருக்க முடியும்.

04. கடும்போக்கு மக்களின் வாக்குகளும் வேண்டும் சிறையில் இருக்கின்ற ஞானசாரர் விடுவிக்கப்படவும் வேண்டும் என்று நினைப்போருக்கும் சிலைகளை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கலாம்.

05. இனவாத சக்திகளே இதைச் செய்திருக்கலாம்.

ஆனால், இதை யார் செய்திருந்தாலும் இதனால் பாதிக்கப்படப் போவது சிங்கள – முஸ்லிம் உறவு என்பதும், பின்விளைவுகளை எதிர்கொள்ளப் போவது முஸ்லிம் சமூகம் என்பதுமே கவலைக்கும் கவனிப்புக்கும் உரிய விடயமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் இப்பேர்ப்பட்ட இனவாத சக்திகளின் நெருக்குவாரங்களை 103 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்கொண்டு வருகின்றனர். இதை இன்றைய இளைஞர்கள் அறியாதிருக்கலாம். 1915 சிங்கள – முஸ்லிம் கலவரம், ஊவா – வெல்லஸ்ஸ பகுதிகளின் இடம்பெற்ற வன்முறைகள், 1970களில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், ஏன் தமிழ் ஆயுதக் குழுக்களின் அடக்குமுறைகள் கூட, ஒருவிதத்தில் இனத்துவ நெருக்குவாரங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவையே.

ஆனால், ஒரு பௌத்த பிக்கு அண்மையில் பகிரங்கமாக குறிப்பிட்டதைப் போல, “இலங்கையில் சிங்கள இளைஞர்களும் தமிழர்களும் ஆயுதமேந்திப் போராடிய போதும், இத்தனை நெருக்குவாரங்களைச் சந்தித்த முஸ்லிம் இளைஞர்கள், இன்னும் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அத்துடன், மிகுந்த பொறுமையுடனும் விவேகத்துடனும் ஏனைய சமூகங்களோடு நெருக்கமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இதைக் கெடுப்பதற்காக, கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவுக்கு பயனைத் தந்திருக்கின்றமையால், இப்போது புதிய புதிய வடிவங்களில் குட்டையைக் குழப்புவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல், இனவாத, மதவாத சக்திகள், பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. மதம் என்ற பெயரில் ஒரு சில இளைஞர்களும் மூளைச்சலவை செய்யப்படுகின்றனரா என்ற சந்தேகத்தை அண்மைய சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன”

இலங்கை என்பது முஸ்லிம்களுக்கு உரிய நாடு என்றால், இங்குதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத, மதவாத, அரசியல் நெருக்கடிகளை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஆனால், துணிவு என்பது சட்ட விரோதமானதாகவும் அப்பாவி சிங்கள, தமிழ் மக்களுக்கும் அவர்களது மத நம்பிக்கைகளுக்கும் எதிரானதாகவும் இருக்க முடியாது. ஒரு தவறைத் திருத்துவதற்கு இன்னுமொரு தவறை ஆயுதமாகக் கையில் எடுக்க முடியாது. அது பாரிய சிக்கல்களைக் கொண்டுவரும்.

மிக முக்கியமாக, உலகெங்கும் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான நிகழ்ச்சி நிரல் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். எந்த அரபு நாடும் அதற்காகக் குரல்கொடுக்கவில்லை. எனவே, முஸ்லிம்கள் தரப்பில் இருந்து யாராவது என்ன காரணத்துக்காக ஒரு தவறைச் செய்தாலும், இதோ முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் இருக்கின்றது என்று சொல்வார்கள்.

அவர்களே, செய்யக் கூடாதவற்றைச் செய்து விட்டு, அப்பழியை முஸ்லிம்கள் மீது போடுவார்கள். நீண்டகாலத்தில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கும். நினைக்காததெல்லாம் நடக்கும் அபாயமிருக்கின்றது.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் மீது இனவாதம் பிரயோகிக்கப்படுகின்ற சூழலில், அதற்கெதிராகப் போராடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதேபோன்று, சிலை உடைப்பிலோ, வேறு சம்வங்களிலோ முஸ்லிம்கள் பக்கத்தில் நியாயம் இருந்தால், அதற்காக நீதியைப் பெற்றுக் கொள்ளும் உரித்தும் இருக்கின்றது.

ஆனால், முஸ்லிம்களோ, வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களோ, வேறு யாருடையதோ நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, ஆட்டுவிக்கப்படக் கூடாது. தங்களை அதிமேதாவிகள் என்று நினைக்கும் யாரும், இலங்கையில் வாழ்கின்ற இருபது இலட்சம் முஸ்லிம்களின் தலையெழுத்தைப் பிழையாக எழுத, இடமளிக்க முடியாது. அது அரசியல்வாதிகள் என்றாலும், சரி சமயவாதிகள் என்றாலும் சரியே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!!(அவ்வப்போது கிளாமர்)
Next post டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!! (மருத்துவம்)