நோய் தீர்க்கும் மல்லி விதை!! (மருத்துவம்)
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. தனியாவுடைய பயன்பாடு ஆசியா கண்டம் முழுவதும் பரவி காணப்படுகிறது. இது தொன்று தொட்டு காலம் முதலேயே நல்ல மருந்தாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் கூட வீட்டில் யாருக்காவது ஜலதோஷம், சளி, இருமல் இருந்தால் தனியா கலந்த தேநீர் தயாரித்து அருந்துகிறார்கள். மேலும் பால், டீ, காஃபி பயன்பாட்டுக்கு முன்பே கொத்தமல்லி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.
சமையலைப் பொருத்தவரை மசாலாவுக்கு சேர்மான பொருளாக மட்டும் பயன்டுத்தும் பழக்கம் இருக்கிறது. ஆனால், தனியாவை நாம் தனியாகவே பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தி அதன் முழுமையான பயன்களை பெறலாம்’’ என்கிறார் டயட்டீஷியன் உத்ரா. கொத்தமல்லி விதையின் சத்துக்களையும், அதன் பலன்களையும் நம்மிடம் விரிவாகவே பேசுகிறார்.
தனியாவில் உள்ள சத்துக்கள்
100 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது. இதில் குறைந்த அளவு கொழுப்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டும் அடங்கியுள்ளது. 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்சியம் ஆகியவையும் அடங்கியுள்ளது.
அதேபோல உடலில் புரதச்சத்தையும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்தையும் உடலுக்கு மற்ற உணவுகள் மூலம் கிடைக்கும்போது அதை நம் உடலுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க தனியா உதவுகிறது. நோய்த்தொற்றை உண்டாக்கும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும்.
மல்லியில் Phytonutrient குணங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் அடங்கியிருக்கிறது. இதுவே நமக்கு மருத்துவரீதியான பலனைக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும் திறனையும் கொடுக்கிறது. மல்லியில் Linalool மற்றும் Geranyl acetate ஆகிய மணமூட்டிக் கூறுகள் உள்ளது. இவையும் மல்லியின் மருத்துவ தனித்துவத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. உடல் செல்களைப் பாதுகாக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மை இந்த மூலக்கூறுகளால்தான் தனியாவிற்கு கிடைக்கிறது.
மல்லி தேநீர்
தனியாவை தேநீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து இனிப்புச்சுவைக்காக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி அல்லது தேன் போன்ற ஏதேனும் ஒன்றினைக் கலந்து தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.
தனியா தேநீர் பயன்கள்
மல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது. கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகிறது. மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.
வைட்டமின் சி, பொட்டாசியம், மினரல் போன்றவை தனியாவில் மிகுதியாக அடங்கியிருக்கிறது. இரைப்பை சார்ந்த பிரச்னைகளான அசிடிட்டி, உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. தனியாவை நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பு, ஆஸ்துமா, சளி தொந்தரவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயம் தனியா டீ அருந்துவது நல்லது.
அதுபோல முதியவர்கள் தினமும் தனியா தேநீர் அருந்துவது அவர்களுக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை சரி செய்யும். அதேபோல நாம் தினமும் அருந்துகிற தண்ணீரில் சிறிதளவு தனியாவை போட்டுக் குடித்து வந்தால் குளிர்காலங்களில் ஏற்படுகிற சைனஸ், அலர்ஜி, சளி போன்ற தொந்தரவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு டீ, காபி போன்றவை கொடுப்பதை தவிர்த்து விட்டு, தனியா தேநீர் கொடுத்து வரலாம். இதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகளிலிருந்து அவர்கள் விடுபடுவதோடு உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை மற்றும் வெள்ளைப்படுதல், உடல் பருமன், உடல்வலி, சோர்வு போன்ற பிரச்னைகள் இருந்தால் தனியாவை ஊற வைத்து கொதிக்க வைத்து மூன்று நாட்களுக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
Average Rating