திம்பு பேச்சுவார்த்தை (4)!!! (கட்டுரை)

Read Time:18 Minute, 34 Second

திம்பு பேச்சுவார்த்தைகள் பற்றி முழுவிவரங்களையும் அறிந்துகொள்வதில் உள்ள முதல் சிக்கலானது, அது தொடர்பிலான தகவல்கள் பேச்சுவார்த்தை நடந்தபொழுதிலிருந்தே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமைதான். உத்தியோகபூர்வ பதிவுகள் இல்லாத நிலையில் அதில் பங்குபற்றியவர்களது தனிப்பட்ட கருத்துகள், பங்குபற்றிய தரப்புகள் வௌியிட்ட சில ஆவணங்கள், அவற்றினடிப்படையில் பலரும் எழுதியுள்ள, பதிவுசெய்துள்ள விடயங்கள் என்பவற்றைக் கொண்டே திம்பு பேச்சுவார்த்தைகளைப் பற்றி நாம் ஆராயக்கூடியதாக உள்ளது.

இந்தியாவின் மத்தியஸ்தம்

எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தை குழு சமர்ப்பித்திருந்த இலங்கை அரசாங்கத்தின் “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வுத் திட்ட முன்மொழிவை தமிழர் தரப்பு நிராகரித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை அமர்வுகளின் மூன்றாம் நாளில் இறுதியில் திம்பு பேச்சுவார்த்தை ஒரு தேக்க நிலையை எட்டியிருந்தது.

ஆரம்பம் முதலே ஜே.ஆர். அரசாங்கத்தோடு பேசுவதில் பயனில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தமிழர் தரப்பானது, ஜே.ஆர். அரசாங்கம் கடந்த வருடம் சர்வகட்சி மாநாட்டில் தமிழர் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வு முன்மொழிவு மீண்டும் திம்புவில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கு மேல் திம்புவில் பேச்சுவார்த்தையைத் தொடரும் எண்ணத்தையும் இழந்திருந்தது.

திம்பு பேச்சுவார்த்தை சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இலங்கை அரசாங்கத் தரப்பை விட, தமிழர் தரப்பை விட, இந்தியாவுக்​கே அதிகமாக இருந்தது. பேச்சுவார்த்தையின் மூன்றாம் நாள் இறுதியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட இந்தியா, இந்தத் தேக்கநிலையைத் தாண்டி, பேச்சுவார்த்தைகளைத் தொடரச் செய்ய உடனடி நடவடிக்கையை முன்னெடுத்தது. இதற்காக இந்திய வௌியுறவுச் செயலர் றொமேஷ் பண்டாரி உடனடியாக திம்புவுக்கு வந்தார்.

திம்புவுக்கு வந்த பண்டாரி இருதரப்போடும் தனித்தனியான சந்திப்புகளை நடத்திப் பேசினார். எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைப்பாடானது, தாம் தம்முடைய இறுதித் தீர்வு முன்மொழிவை முன்வைத்துவிட்டோம், அதை தமிழர் தரப்பு ஏற்காது விட்டால், அவர்கள் தமது மாற்று முன்மொழிவை முன்வைக்கலாம். அவ்வாறு மாற்று முன்மொழிவொன்று முன்வைக்கப்படும் போது அதை நாம் பரிசீலிக்கலாம் என்பதாக அமைந்திருந்தது.

மறுபுறத்தில் தமிழர் தரப்போ, தனிநாடு என்பதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து நாம் இறங்கிவர வேண்டுமானால் அதற்கு பொருத்தமானதொரு தீர்வு முன்மொழிவை அரசாங்கம்தான் முன்வைக்க வேண்டும். அவர்களது “ஐந்தடுக்கு பொறிமுறை” தீர்வு முன்மொழிவு தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை, ஆகவே பொருத்தமான மாற்றுத் தீர்வை அவர்கள்தான் முன்மொழிய வேண்டும் என்று கூறியது.

இந்தத் தேக்க நிலைக்குத் தீர்வாக றொமேஷ் பண்டாரி இருதரப்புக்கும் ஒரு யோசனையைச் சொன்னார். தமிழர் தரப்பானது, அரசாங்கத்தரப்பு ஏலவே சமர்ப்பித்திருந்த தீர்வு முன்மொழிவை நிராகரிப்பதை ஓர் அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட றொமேஷ் பண்டாரி, அரசாங்கத் தரப்பிடம், தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் இயங்கத்தக்கதொரு பொருத்தமான இன்னொரு தீர்வு முன்மொழிவை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“ஐந்தடுக்கு பொறிமுறை” தீர்வை நிராகரித்த தமிழர் தரப்பு

பேச்சுவார்த்தையின் நான்காம் நாள் அமர்வுகளின் போது தமிழர் தரப்பின் சார்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து அரசாங்கம் சமர்ப்பித்திருந்த “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வுத்திட்டத்தை நிராகரிக்கும் தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

திம்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த இணைந்த அறிக்கையானது தமிழீழ விடுதலை இயக்கத்தின் (​டெலோ) சார்ள்ஸினால் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பதாக, அரசாங்கத்தின் “ஐந்தடுக்குப் பொறிமுறை” தீர்வு முன்மொழிவை நிராகரித்து கருத்துரைத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், குறித்த தீர்வு யோசனையானது தமிழ் மக்களைக் கேவலப்படுத்துவதாக அமைகிறது என்று கடுந்தொனியில் பேசியிருந்தார். தாம் ஏற்கெனவே சர்வகட்சி மாநாட்டில் நிராகரித்திருந்த தீர்வை மீள்சுழற்சி செய்து திம்புவில் ஜே.ஆர். அரசாங்கம் சமர்ப்பித்திருந்ததில் அமிர்தலிங்கத்துக்கு நிறையவே கோபமும், விசனமும் ஏற்பட்டிருந்தது. குறித்த தீர்வு முன்மொழிவை நிராகரித்து அமைந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த இணைந்த பின்வருமாறு அமைந்திருந்தது:

நாம் ஆயுதவழியை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகும். ஏனெனில் மற்றைய வழிமுறைகளால் எல்லாம் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களை இணங்கச் செய்ய முடியவில்லை. மேலும் தேசிய அடக்குமுறை, அதிகரித்துவரும் அரச பயங்கரவாதம், மற்றும் எமது மக்களுக்கு எதிரான இன அழிப்பு ஆகிய நிலைகளுக்குக் கீழ் அடக்குமுறைக்குள்ளான தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழ அரசே தர்க்கரீதியில் ஏற்புடைய ஒரே கோரிக்கையாக அமைகிறது. அந்த தர்க்கரீதியிலான தீர்வை அடைவதற்கான வழிமுறைதான் எமது ஆயுதப் போராட்டம். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது மீண்டும் நல்லறிவு மற்றும் காரணகாரிய அறிவை மீளப் பெற்றுள்ளது என்பதற்கான யாதேனும் சமிக்ஞையை வழங்குமானால், எமது மக்களும் அமைதிவழித் தீர்வு முன்மொழிவொன்றை பரிசீலிக்க அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள், ஏனென்றால் தமிழ் மக்கள் அமைதியை விரும்பும் மக்களாவர்.

இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவாக இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தை குழுவினால் எம்முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகளானவை இலங்கை அரசாங்கம் நல்லறிவையோ, காரண காரிய அறிவையோ மீளப்பெற்றுள்ளது என்பதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் தரவில்லை. முதலாவதாக அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தை குழுவின் தலைவரானவர் எம்முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த முன்மொழிவுகளானவை சர்வ கட்சி மாநாட்டின் இறுதியில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்தது என தௌிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். நாம் பின்வரும் காரணங்களுக்காக சர்வ கட்சி மாநாட்டை அங்கிகரிக்கப் போவதில்லை என்பதை மிகத் தௌிவாக எடுத்துரைக்க விரும்புகிறோம்:
முதலாவதாக, சர்வக்கட்சி மாநாடு முடிவடைந்த உடனேயே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி குறிப்பிட்டது போல, சர்வ கட்சி மாநாட்டு முன்மொழிவுகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடைய பிராந்திய தன்னாட்சி என்பதற்கு அருகில் கூட வரவில்லை. இரண்டாவதாக, விடுதலை இயக்கமான நாம், நவ-பாஸிச இலங்கை அரசானது சர்வ கட்சி மாநாட்டை தமிழ் தேசிய பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை முன்னெடுப்பதற்கான புகைத்திரையாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கிறோம்.

மேலும், எம்மன் இந்த மேசையில் முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவுகளானவை இலங்கை அரசாங்க ஈழ தேசியப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டுள்ளமைக்கான எந்த அறிகுறிகளையும், எந்தவிதத்திலும் சுட்டிநிற்கவில்லை. இதற்கான காரணங்களானவை:
ஒன்று, குறித்த முன்மொழிவுக ளானவை தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை அங்கிகரிக்கவில்லை. மாறாக அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கூறாக மாவட்டத்தை அது எடுத்துக் கொள்கிறது. இது முற்றாக ஏற்புடையதல்ல.

இரண்டு, குறித்த முன்மொழிவுகளானவை தீர்வுத் திட்டத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை தவிர்ப்பதன் மூலம் தமிழ் மக்களினதோ, அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கவில்லை. அரசாங்கமானது வெறும் நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு மட்டுமான அரசியலமைப்பு திருத்தத்தினூடாக குறித்த முன்மொழிவுகளை அமுல்படுத்த எத்தனிப்பதன் மூலம் மக்களின் விருப்பை கருத்திற்கொள்ளாது விடுகிறது. இந்தச் செயற்பாட்டின் மூலம் இலங்கை அரசாங்கமானது தன்னுடைய அரசியலமைப்பு சர்வகாதிகாரத்த ன்மையை இலங்கை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கிறது.

நாம் இதற்கு மேல் செல்ல விரும்பவில்லை. நாம் அழுத்திச் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தப் பிரச்சினைக்கான பகுத்தறிவு வாய்ந்த நியாயமான தீர்வொன்றை சமர்ப்பிக்கும் பொறுப்பு முற்றாக இலங்கை அரசிடமே இருக்கிறது, ஏனெனில் எம்மைப் பொறுத்தவரையில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு அதுவே காரணம்.

சமாதானத்தின் பெயரால் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டுள்ள பேச்சுவார்த்தை குழுவிடம் நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் நாம் கருத்திற்கொள்வதற்கு ஏற்புடைய தீர்வு முன்மொழிவோடு வாருங்கள் என்பதுதான்.

தோல்வியில் முடிந்த முதல்சுற்று

தமிழர் தரப்பின் நிலைப்பாடு, குறிப்பாக தனிநாடு பற்றிய தம்முடைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கொண்டிருந்தமை, இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தவதாக அமைந்தது என திம்பு பேச்சுவார்த்தைகளைப் பற்றிக் கருத்துரைக்கும் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

திம்பு பேச்சுவார்த்தையை தமிழர்களின் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மீளுணர்த்தும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற நிலைப்பாட்டை தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் திம்பு பேச்சுவார்த்தைக்குச் செல்ல இந்தியா வற்புறுத்தி இணங்கச் செய்தபோதே எடுத்திருந்தன.

அவற்றுக்கு ஜே.ஆர். அரசாங்கம் ஏற்புடைய தீர்வொன்றைத் தரும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லாத நிலையில், தமது நிலைப்பாட்டை வலியுறுத்தும் களமாக இதனைப் பயன்படுத்தியது தந்திரோபாய ரீதியில் புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் தமிழர் தரப்பின் இந்தப் போக்கு இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியது. ஒரு கட்டத்தில் தமது அடிப்படை நிலைப்பாடுகளை மீளுரைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்களின் மேல் சினமடைந்த றொமேஷ் பண்டாரி, அவர்களை நோக்கி இந்தியர்களை முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?

இதுபோன்ற பயனற்ற கலந்துரையாடல்களின் நேரத்தை வீணடிப்பதற்கு என்று கேட்டதாக திம்பு பேச்சுவார்த்தை பற்றி பதிவுசெய்த கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். தற்போது நடைபெற்று வந்த திம்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது என்பதை றொமேஷ் பண்டாரியும், இந்தியாவும் உணர்ந்திருந்தனர். ஆனால் இதனை முறியவிடாது தொடரச் செய்யவே பண்டாரி தமிழர் தரப்பை அரசாங்கத்தின் முன்மொழிவுகளை நிராகரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அரசாங்கத் தரப்பை தமிழர் தரப்பின் கோரிக்கையைப் பரிசீலித்து பொருத்தமானதொரு மாற்றுத் தீர்வை முன்வைக்கவும் யோசனை கூறியிருந்தார்.

இதன் மூலம் பேச்சுவார்த்தைகள் தோல்வி என்ற முட்டுக்கட்டையை எட்டாது, இரண்டாம் சுற்று ஒன்றில் மீண்டும் இருதரப்பினையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர முடியக்கூடிய வாய்ப்பை இந்தியா நம்பிக்கையுடன் பார்த்தது. ஆகவே அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அல்ல என்று ரீதியிலான விம்பம் கட்டமைக்கப்பட்டது.

ஆனால் அன்று இலங்கைக்காக இந்திய தூதுவர் ஜே.என்.டிக்ஷிட் தன்னுடைய நூலொன்றில் இது பற்றிக் குறிப்பிடும் போது இந்திய வௌியுறவு அமைச்சானது திம்பு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று தோல்வியில் முடிவடைந்ததாகவும், இது பற்றி ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, இலங்கை அரசாங்கத்தை சங்கடப்படுத்தாமல் கருத்துத்தெரிவிக்க தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

1985 ஜூலை 13ம் திகதி முதல் சுற்று திம்பு பேச்சுவார்த்தையின் இறுதி நாளாக அமைந்தது. இந்த நாளில் தமிழர் தரப்பு வரலாற்று முக்கியத்துவம் மிக்க​ேதார் அறிக்கையை வௌியிட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகள்தான் என்ன என்ற ஆண்டாண்டு காலமாக கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு இன்றும் கூட இரத்தினச்சுருக்கமான பதிலை வழங்கத்தக்கதொரு பெறுமதியான ஆவணமாக அவ்வறிக்கை அமைகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!!(மகளிர் பக்கம்)
Next post ஆண்களுக்கு முடி கொட்டுவது ஏன்?! (மருத்துவம்)