2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? (கட்டுரை)
ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில் வந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதும், பா.ஜ.கவின் பிடியிலிருந்து, இந்த மூன்று மாநிலங்களும் விலகிச் செல்வதும் பா.ஜ.கவுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தையக் கெட்டக் கனவாகவே அமைந்து விட்டது.
மூன்று முறை ஆட்சி செய்த மத்திய பிரதேசத்தில், பா.ஜ.கவின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார். “விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பார்கள். அது போல் மாநிலத்தில் பதிவான 38.1 மில்லியன் வாக்குகளில், காங்கிரஸ் கட்சியை விட, 47 ஆயிரத்து 827 வாக்குகள் அதிகம் பெற்றும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
230 சட்டமன்ற தொகுதிகளில் 115 பிடித்தால் ஆட்சி என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 114இல் வெற்றி பெற்றது. அதனால், 109 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்ற பா.ஜ.க, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. ஆகவே, மத்தியப் பிரதேசத்தில் நூலிழையில் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது பா.ஜ.க. 29 நாடாளுமன்றத் தொகுதிகளையுடைய இந்த மாநிலத்தில், 27இல் சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது பா.ஜ.க. ஆனால், 2 இடங்களில் மட்டுமே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இனி வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்த 29 நாடாளுமன்றத் தொகுதிகள், பா.ஜ.கவுக்கு, பெரும் சோதனைக் களமாக அமைந்து விட்டது.
ராஜஸ்தான் மாநிலத்திலும், ஏறக்குறைய பா.ஜ.கவின் தோல்வி, படு மோசம் என்று சொல்லி விட முடியாது என்றாலும், ஆட்சியை இழந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, ஆட்சி மாற்றத்தைச் செய்து விடும் வழக்கம்கொண்ட இந்த மாநில வாக்காளர்கள், சென்றமுறை, வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் இருந்த ஆட்சியை அகற்றிவிட்டு, இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க, பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்கள்.
இம்மாநிலத்தில் 100 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ.கவுக்கு இப்போது ஆட்சியை இழந்திருப்பது சோகமான காலம். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ், ஆட்சிக்கே வந்திருப்பது வசந்த காலம். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக உள்ள கட்சி என்று பேசப்படும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் கூட இங்கு வெற்றி பெறவில்லை. மாறாக, அக்கட்சி வெற்றி பெற்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுமே, பொதுத்தொகுதியில் இருந்து தேர்வு பெற்றுள்ளமை, மிகவும் சுவாரஸ்யமான தேர்தல் களமாக காட்சியளிக்கிறது.
மூன்றாவது மிக முக்கியமான மாநிலம் சத்திஸ்கர். இங்கு, மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி விட்டோம் என்பதை முன்வைத்து பிரசாரத்தை பிரதமரே மேற்கொண்டார். ஆனால் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சரான பா.ஜ.கவின் ராமன்சிங்கால், இந்த முறை வெற்றி பெற முடியவில்லை. இந்த “வட இந்தியாவின் இதயமான” மாநிலங்களில் சத்திஸ்கர் மாநிலத்தில்தான், காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவை விட 10 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 68 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக- மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது.
ஆட்சியிலிருந்த பா.ஜ.கவுக்கு 90 சட்டமன்ற தொகுதிகளில் 15இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சத்திஸ்கர் மாநில முடிவால், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க, இனி வரும் 2019 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என்றக் கவலைக்கிடமான சூழ்நிலையில் இருக்கிறது.
ஆகவே, இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் மத்தியிலுள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே எண்ண இடமிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளும் சட்டமன்ற உறுப்பினர்களும், அம்மாநில முதலமைச்சர்களுக்கு அதிருப்தி இருந்ததை விட, மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருக்கிறது. ஆனால் அங்கு ஆட்சிக்கு வந்திருப்பது அங்குள்ள மாநிலக் கட்சி. அதேபோல், தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அங்கு வெற்றி பெற்றிருப்பது ஏற்ெகனவே ஆட்சியிலிருந்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்.
ஆகவே, ஐந்து மாநிலத் தேர்தல்களில் நேருக்கு நேரான மோதலில், மூன்று மாநிலங்களிலும் எவ்வித கூட்டணியும் இல்லாமல், காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், இந்த மினி தேர்தல், மத்தியிலுள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்கு “எச்சரிக்கை மணி” அடித்திருக்கிறது. துவண்டு கிடந்த காங்கிரஸ் கட்சிக்குக் கை கொடுத்திருக்கிறது.
தேர்தல் முடிவுக்கு முதல் நாளே, 27 கட்சிகள், காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் கூடி “பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும்” என்று தீர்மானம் போட்டு விட்டன. அக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று, தி.மு.க சார்பில் எடுத்துச் சொல்லப்பட்டு, இனி காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான அணி, 2019இல் உருவாகும் களம் உருவாகி விட்டது.
கூட்டணி கட்சிகளுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் இதுவரை “சுமை” என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு “சுகம்” என்று நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷாவா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தேர்தல் முடிவு வெளிவரப் போகின்ற நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி வெளியேறியிருக்கிறது. ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகளால் “கூட்டணி கட்சிகள் வருகையும்” பா.ஜ.கவுக்கு “கூட்டணி கட்சிகளின் வெளிநடப்பும்” இனி வரும் காலத்தில் தொடர்ந்து அரங்கேறும் என்றே தெரிகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்மாநில முதல்வர்களின் ஆட்சி சாதனைகளை முன் வைக்காமல் “ராமர் கோயில்” கட்டும் விவகாரத்தை தட்டி எழுப்பியும், காங்கிரஸை தேச விரோத கட்சி என்று சித்தரித்தும், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்தியும் தவறான பிரசார யுக்தியை பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர்கள் கையாண்டார்கள்.
இதில் பா,ஜ.க முதல்வர்களின் சாதனைகள் மறைந்து மத்திய அரசின் வேதனைகள் வாக்காளர்களுக்கு நினைவுக்கு வந்ததே மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க தோற்றதற்கு காரணம்.
ஆகவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனது தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் தள்ளப்பட்டுள்ளதே ஐந்து மாநில தேர்தல்களின் இப்போதைய ஹைலைட்!
Average Rating