திம்புக் கோட்பாடுகள்!! (கட்டுரை)
முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதி நாள்
1985 ஜூலை எட்டாம் திகதி, உத்தியோகபூர்வ வரவேற்புடனும் ஒன்பதாம் திகதி, முதலாவது அமர்வுகளுடனும் ஆரம்பமாகி, இடம்பெற்று வந்த திம்புப் பேச்சுவார்த்தையின் முதலாவது கட்டம், ஜூலை 13ஆம் திகதி, அதன் நிறைவு நாளை எட்டியிருந்தது.
யதார்த்தமாகப் பார்த்தால், திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டிருந்தது என்பதுதான் உண்மை. இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாவதும் குறிப்பிடத்தக்கதுமான வெற்றி, ஆயுதம் தாங்கிய இயக்கங்களுடன் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்த இலங்கை அரசாங்கத்தை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுடன் பேசச் சம்மதிக்க வைத்ததாகும்.
அத்துடன், ஜே.ஆர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்து, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசச் செய்தமையாகும்.
மற்றப்படி, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ, நன்மையோ விளையவில்லை.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களில் முக்கியமானவற்றையும் உள்ளடக்கிய தமிழ்த் தரப்பு, ஜே.ஆர் அரசாங்கத்தின், ‘ஐந்தடுக்குப் பொறிமுறை’ தீர்வு முன்மொழிவு, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்று நிராகரித்திருந்த நிலையில், ஜூலை 13ஆம் திகதி இறுதிநாள் அமர்வுகள் ஆரம்பமாகின.
நிறைவேறாத வாக்குறுதி
திம்புப் பேச்சுவார்த்தையின் முதல் நாள் அமர்வுகளின் போது, அரசாங்கத்தின் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்கள், தமிழ் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் தமிழர் பகுதிகளில் ஊரடங்கு, வீதித்தடைகள், சோதனைகள், கைது செய்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் ஆகிய விடயங்களைத் தமிழர் தரப்புச் சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான எச்.டபிள்யூ. ஜெயவர்தன, “குறித்த விடயங்கள் பற்றி, ஜனாதிபதி ஜே.ஆரோடு பேசியபின், வடக்கு, கிழக்கு பகுதிகளில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு, நாளை விலக்கிக்கொள்ளப்படும்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,197 பேரில், 643 பேர் அடுத்த இரு தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார். இது நடந்தது, 1985 ஜூலை ஒன்பதாம் திகதி.
ஆயினும், ஜூலை 13ஆம் திகதி பேச்சுவார்த்தையின் இறுதி நாளிலும் கூட, பேச்சுவார்த்தையின் முதல்நாளில் எச்.டபிள்யூ. ஜெயவர்தன அளித்திருந்த மேற்கூறிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இதுகுறித்து விசனமும், அதிருப்தியும் அடைந்திருந்த தமிழர் தரப்பு, பேச்சுவார்த்தையின் இறுதி நாளில், குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டியதுடன், போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்கள் தொடர்வதையும் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலாக, அரசாங்கத் தரப்பானது, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களைப் பட்டியலிட்டனர். கிட்டத்தட்டத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்ட 73 சம்பவங்களை, அவர்கள் பட்டியல் இட்டிருந்தனர்.
இது, இறுதி நாளிலும் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக, நீயா? நானா? என்ற ரீதியிலான வாக்குவாதத்துக்கே வழிவகுத்தது.
போர் நிறுத்த உடன்படிக்கை என்பதை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஐயக்கண்ணோட்டத்துடனேயே பார்த்தார்கள். பேச்சுவார்த்தை என்ற போர்வையில், போர் நிறுத்த ஒப்பந்தந்தைச் செய்துவிட்டு, தமது இராணுவக் கட்டமைப்பை விஸ்தரிக்கும் சூழ்ச்சியை, ஜே.ஆர் அரசாங்கம் மேற்கொள்கிறது என்பதே அவர்களது குற்றச்சாட்டாகும்.
தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையை விரும்பாததற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும்.
தன்னுடைய இராணுவ பலத்தை அதிகரிக்கும் வரை, காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாய மார்க்கமாகவே ஜே.ஆர் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைக் கையாண்டதேயன்றி, இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலானதொரு தீர்வைக் காணும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது, பல ஆய்வாளர்களது கருத்தாக உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திம்புப் பிரகடனம்
எது எவ்வாறாயினும், முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதிநாளில், தமிழர் தரப்புச் சமர்ப்பித்த பிரகடனம்தான், தோல்வியடைந்த திம்புப் பேச்சுவார்த்தை பற்றி, இன்றுவரை அதிகம் பேசப்படுவதற்கும், மேற்கோள் காட்டப்படுவதற்குமான முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கு, திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளில், தமிழர் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட திம்புப் பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி, இன்று ஒரு சொற்றொடரில் பதிலளிக்கத்தக்கதாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, மிக இரத்தினச் சுருக்கமாக அந்த அறிக்கை வௌிப்படுத்தியிருந்தது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை, பின்வரும் வகையில் அமைந்திருந்தது.
திம்புக் கோட்பாடுகள்
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவோர் அர்த்தமுள்ள தீர்வும், பின்வரும் நான்கு உயர் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுதான், எமது ஆய்ந்தறிந்த பார்வையாகும்:
1. இலங்கைத் தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல்.
2. இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல்.
3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல்.
4. இலங்கையில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களதும் குடியுரிமையை, அடிப்படை உரிமைகளை அங்கிகரித்தல்.
மேற்குறித்த கோட்பாடுகளை உறுதிப்படுத்த, வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வகையான அரசாங்க முறைமைகளை வடிவமைத்துள்ளன.
எமது மக்களின் இந்த அடிப்படை உரிமைகள், மீறப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, சுதந்திர தமிழ் அரசொன்றை நாம் கோரியும் அதற்காகப் போராடியும் கொண்டிருக்கின்றோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவால் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள், முற்றாகவே ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல.
ஆகவே, 12 ஜூலை 1985 அன்று, நாம் வௌியிட்ட அறிக்கையில், நாம் குறிப்பிட்டுள்ளது போல, குறித்த முன்மொழிவுகளை நாம் நிராகரித்துள்ளோம். எவ்வாறாயினும், அமைதியை நாம் மிகவும் விரும்புவதன் காரணத்தால், மேற்சொன்ன கோட்பாடுகளின்படி அமையும் எந்தவொரு தீர்வு முன்மொழிவுகளையும் இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்குமானால், அதனைக் கருத்திற்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
திம்புக் கோட்பாடுகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும்
மேற்கூறியவாறு அமைந்த, திம்புப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விடயங்களும்தான், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை, இரத்தினச் சுருக்கமாகக் கூறும் திம்புக் கோட்பாடுகளாகும்.
இன்றுவரை, இலங்கைத் தமிழர் அரசியலில், தமிழ் மக்களின் அரசியல் மந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘தேசியம்’, ‘தாயகம்’, ‘சுயநிர்யணம்’ என்பவற்றைத் தமிழர் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கை அரசாங்கத்துக்கும் உலகத்துக்கும் தெட்டத்தௌிவாகத் திம்புப் பிரகடனத்தின் மூலம் எடுத்துரைத்திருந்தன.
இது, மிகச் சுருக்கமாக அமைந்ததொரு பிரகடனமெனினும், அது கூறும் விடயங்கள், மிக ஆழமானதும், முக்கியத்துவம் வாய்ந்தவையுமாகும். இந்தக் கோட்பாடுகளைத் தீர ஆராய்வதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கான பதிலை, விவரமாக நாம் உணர்ந்துகொள்ளலாம்.
தமிழர்கள் பிரிவினைவாதிகள், தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள், தமிழர்கள் பயங்கரவாதவழியை நாடியவர்கள், தமிழர்கள் நாட்டைத் துண்டாடும் சமஷ்டியைக் கோருகிறார்கள் போன்ற, பேரினவாதப் பிரசாரங்கள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டும், மேற்கொள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கும் சூழலில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் கோரிக்கை என்ன என்பதன் தௌிவு மிக அவசியமானது.
இதைப் பற்றிய ஆழமான புரிதல், ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த தமிழருக்கும் கட்டாயம் இருக்கவேண்டும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பேச்சு எழும்போதே, தனிநாடு, சமஷ்டி, 13+ போன்றவையே பொது எண்ணத்தில் தோன்றக் கூடிய விடயங்களாகும்.
ஆனால், இவற்றைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்று கூறிவிட முடியாது. இவை தமிழ் மக்களுக்கு, அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உள்ள பல்வேறு வழிமுறைகளே அன்றி, இவைதாம் தமிழர்களின் அபிலாஷைகள் அல்ல. இந்த இடத்தில்தான் திம்புக் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்றோ, தமிழர்களது அபிலாஷை சமஷ்டிதான் என்றோ, யாராவது சொன்னால், அதனை மறுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.
ஏனென்றால், தமிழர்களது அபிலாஷை என்பது, தீர்வின் வடிவத்தைப் பற்றியதல்ல; அது தீர்வின் அடிப்படைகளைப் பற்றியது. அந்த அடிப்படைகளைத் தான் திம்புக் கோட்பாடுகள் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சமஷ்டியோ, தனிநாடோ, வேறுவகையான அதிகாரப்பகிர்வோ என்பது பிரச்சினையல்ல; அதிகாரப்பகிர்வின் வடிவம் எவ்வாறு இருந்தாலும், அது தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகியவற்றைத் திருப்திசெய்வதாக அமையவேண்டும். இவற்றைத் திருப்தி செய்யும் தீர்வு, ஒற்றையாட்சிக்குள்ளானதாக இருந்தால் கூட, அதனைத் தமிழ் மக்கள் மறுக்கப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், இந்த அடிப்படை அபிலாஷைகளைத் திருப்தி செய்யாத அதிகாரப் பகிர்வுத் தீர்வை, அது பெயரளவில் சமஷ்டியாக அமைந்தாலும் கூட, அது தமிழ் மக்களை ஒருபோதும் திருப்தி செய்யாது.
ஆகவே, முதலாம் கட்டத் திம்புப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளன்று, தமிழர் தரப்பு, தமக்கான தீர்வுக்கான வடிவத்தை முன்வைக்காது, தீர்வுக்கான அடிப்படைகளை முன்வைத்தமையானது மிகச்சிறந்ததொரு முன்னெடுப்பாகும்.
தீர்வுக்கான அடிப்படையாகத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்வைத்துவிட்டு, இவற்றைத் திருப்தி செய்யும் எந்தத் தீர்வையும் நாம் பரிசீலிக்கத் தயார் என்று, தீர்வுக்கான வடிவம் தொடர்பிலான முன்மொழிவுகளைச் செய்யும் செயற்பாட்டை, இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைத்தமையும் ஒரு வகையில் பார்த்தால், தந்திரோபாய ரீதியான காய்நகர்த்தலாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்பது, பல்வேறு தமிழ் அரசியல் தலைவர்களாலும் இன்று வரை அழுத்தமாகச் சொல்லப்பட்டு வரும் விடயமாகும். முன்பு, இதுபற்றிப் பலகாலம் கருத்துரைத்த அரசமைப்பியல் வல்லுநரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன, “இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக, அரசமைப்பொன்று வடிவமைக்கப்படும் போது, அதில் திம்புக் கோட்பாடுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த நிலைப்பாடு, இன்றும் தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே. மறுபுறத்தில் சில கருத்துரையாளர்கள், திம்புக் கோட்பாடுகள் என்பது, ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளான தீர்வுக்கு ஏதுவானதல்ல என்ற கருத்தையும் முன்வைப்பதை அவதானிக்கலாம்.
இது, தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற கருத்தியல்கள் தொடர்பிலான முழுமையான, மேம்படுத்தப்பட்ட புரிதல் இல்லாமையின் விளைவாகும். இரண்டாம் உலக யுத்தம், அதனைத் தொடர்ந்த கொலனித்துவ ஒழிப்புக் காலகட்டம், பனிப்போர்க் காலகட்டம் ஆகியவற்றினூடாக மேற்குறித்த, குறிப்பாக, தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கருத்தியல்கள் மிகுந்தளவில் மாற்றமடைந்துள்ளன.
ஆகவே, திம்புக் கோட்பாடுகளை இன்றைய சூழலில் புரிந்துகொள்வதற்கு, அதுகூறும் விடயங்களை ஆழமாக ஆய்ந்தறிதல் அவசியமாகும். அப்படிச் செய்வதனூடாகத்தான், தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.
இக்கட்டுரைத் தொடரின் அடுத்துவரும் பாகங்கள், திம்பு கோட்பாடுகள் கூறும் விடயங்களை சற்று விளக்கமாக ஆராயும்.
Average Rating