‘ரபேல்’ விமானத் தீர்ப்பும் ஸ்டாலினின் பிரதமர் அறிவிப்பும்!! (கட்டுரை)

Read Time:14 Minute, 4 Second

இந்திய அரசியலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு, திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியே, பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் தயங்கித் தயங்கி, எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பேசிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “புதிய பிரதமரை உருவாக்குவோம்; ராகுல் காந்தி அவர்களே வருக! நல்லாட்சி தருக” என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை, பிரதமர் பதவிக்கு முன்மொழிந்திருக்கிறார் ஸ்டாலின்.

கலைஞர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில், இந்த முன்மொழிவைச் செய்த போது, அந்த மேடையில், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமர்ந்திருக்க, நடுநாயகமாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தற்போதையை தலைவர் ராகுல் காந்தியும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ராகுல் காந்தி பிரதமர்’ என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, காங்கிரஸ் தலைமையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் குறிப்பாக மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும், அணிவகுக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்திருக்கிறது.

பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு எதிராகக் களத்தில் நிற்க, ராகுல் காந்திக்குத் தகுதி இல்லை என்று பா.ஜ.கவினரும், காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன . ஏன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள் கூட, அதில் தயக்கத்துடன் நிற்கின்றன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஸ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ராகுலை விரும்பவில்லை. குறிப்பாக, கொம்யூனிஸ்ட் பேரியக்கங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

மம்தா பானர்ஜி, பிரதமர் வேட்பாளர் என்ற நிலை வந்தால், அந்த நேரத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிகள், ராகுல் காந்தியின் பின் நிற்கக் கூடும். இப்படி, ராகுல் காந்தியைப் பிரதமராக அறிவிக்கத் தயாராக இல்லாத கட்சிகளுக்கு, வேறு அபிலாஷைகள் உள்ளன. அவர்களும் பிரதமர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

குறிப்பாக, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மயாவதி ஆகியோருக்கு அந்த ஆசை இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக எம்.பிக்களைக் கொடுக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் அந்த ஆசை நிறையவே இருக்கிறது.

அதேநேரத்தில், கலைஞர் கருணாநிதி ஒரு காலத்தில் “என் உயரம் எனக்குத் தெரியும்” என்று, பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்தார். அந்த உண்மை நிலையை, ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அவர் முன் இருக்கும் இப்போதைய இலக்கு, தமிழகத்தின் முதலமைச்சராவதுதான்; பிரதமர் பதவி அல்ல.

ஆகவே, பிரதமர் பதவியில் ஆசையில்லாத ஸ்டாலின், துணிச்சலாக அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்று முன்னிறுத்தி, அதே மேடையில் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் ‘வெள்ளி வாள்’ பரிசு அளித்திருக்கிறார்.அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், “பிரதமர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கும் பலம், ராகுல் காந்திக்கு இருக்கிறது” என்று, ஸ்டாலின் பிரகடனம் செய்திருக்கிறார்.

மத்திய பிரதேசம், சத்திஷ்கர், இராஜஸ்தான் மாநிலங்களில், பா.ஜ.கவைத் தனியாக நின்று தோற்கடித்ததை மனதில் வைத்தே, இப்படிக் கூறியிருக்கிறார். “ராகுல் காந்தியால், பா.ஜ.கவைத் தோற்கடிக்க முடியாது” என்ற பிரசாரத்தை, இந்த மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளும் முறியடித்துள்ள நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார். தி.மு.கவின் இந்த அறிவிப்பின் பின்னனியில், பல வியூகங்கள் காணப்படுகின்றன.

முதல் வியூகம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு காங்கிரஸுடன் உள்ள கூட்டணி வாய்ப்பை மூட வேண்டும். அதேபோல், டி.டி.வி தினகரன் தலைமையில், ஓ​ரணி அமைக்கப் போகிறோம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. அப்படியோர் அணியில், காங்கிரஸ் இடம்பெற்று விடக்கூடாது; அதை தடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ராகுல் பிரதமர் வேட்பாளர்’ என்று அறிவித்து, தி.மு.க – காங்கிரஸ் உறவை, உறுதி செய்து கொள்ள வேண்டும் . அதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை, அப்படியே தி.மு.க வாரிக் கொள்ள வேண்டும்.

இன்னொரு புறத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணி அமைவதால், தி.மு.கவுக்கு ஆபத்தில்லை. அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள், தி.மு.கவுக்கே வரப் போகின்றன என்பது ஸ்டாலின் கணிப்பு.

அதேநேரத்தில், காங்கிரஸும் உள்ளடக்கிய அணி ஒன்று, டி.டி.வி தினகரன் தலைமையில் அமைந்தால், அது தி.மு.கவுக்கு வர வேண்டிய அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைக் குறைத்து விடும். ஆகவே, இதையும் மனதில் வைத்தே, “ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்” என்ற அஸ்திரத்தை, மற்ற எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் அதிர்ச்சி தரத்தக்க வகையில் எய்தியிருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, அகில இந்திய அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று, எந்த எதிர்க்கட்சிகளும் கூறவில்லை என்பது முக்கியமானது. இதுவே ஸ்டாலினின் கருத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கருத்து, ‘தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேசிக் கொள்ளலாம்’ என்பது மட்டுமே! காங்கிரஸிலிருந்து விலகிச் சென்று, மேற்கு வங்க முதலமைச்சராகி இருக்கும் மம்தா பானர்ஜி கூட, அப்படித்தான் சொல்கிறாரே தவிர, ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறவில்லை. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

அகில இந்திய அளவில், அனைத்து மாநிலங்களிலும் பரவலாக இடம்பெற்றிருக்கும் கட்சி, காங்கிரஸ் ஆகும். தேசிய அளவில் பா.ஜ.கவும் காங்கிரஸும் அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கை கொடுக்கும் விதத்தில், பலமுள்ள கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது.

ஆகவே, சந்திரபாபு நாயுடுவோ, மம்தா பானர்ஜியோ, அகிலேஷ் யாதவோ, ஸ்டாலினோ, லாலு பிரசாத் யாதவோ, பரூக் அப்துல்லாவோ- யாராக இருந்தாலும், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால், அந்தத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கு உதவ முடியும்.

வட இந்திய மாநிலங்களையும் தாண்டி, மற்றைய தென்னிந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்தச் செல்வாக்குதான், மற்ற எதிர்க்கட்சிகள், ‘ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று, கூற முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே, தி.மு.கவின் அறிவிப்பு அகில இந்திய அரசியலில், ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளர் என்ற விவாதத்தைத் தொடக்கி விட்டிருக்கிறது. இதன் எதிரொலி, இப்போதே பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதுதான், அக்கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி, ‘விலகலாமா’ என்று இப்போது, பூவா தலையா போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், “ரபேல் விமான விவகாரத்தில், ஊழல் நடக்கவில்லை” என்று, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, ‘ஊழலற்ற ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகின்ற நேரத்தில், அக்கட்சிக்கு மிகப் பெரிய தேர்தல் பிரசார ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது. பா.ஜ.க, நாடு முழுவதும் 70 இடங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, “ரபேலில், ராகுல் காந்தி பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொன்னார்” என்றும், “நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை” என்றும் கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
இப்போதைக்கு இந்தியத் தேர்தல் களத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளர் என்பதும், மோடி தலைமையில், ஊழலற்ற ஆட்சி என்பதும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன.

ராகுல் காந்தி பக்கமாக, அவர் தலைமையை ஏற்றுக் கொண்டு, ஓரணியில் நிற்க, எதிர்க்கட்சிகள் பல நினைக்கவில்லை என்றாலும், அவர் வேண்டவே வேண்டாம் என்று எதிர்க்கவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைக்கும் போது, காங்கிரஸ் கட்சி இல்லாமல் அந்த முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வது, பா.ஜ.கவின் வெற்றிக்கு வித்திடலாம் என்ற கணக்கும் எதிர்க்கட்சிகளின் மனதில் இருக்கிறது.

ஆகவே, 272 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி, ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், இந்த, ‘மந்திர எண்ணை’ தொட்டு விடும் கட்சிக்கே அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ, தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவோ இந்த ‘மந்திர’ எண்ணை நெருங்கா விட்டால், எதிர்கக்கட்சிகளிடம் உள்ள எம்.பிக்கள்தான் மத்தியில் ஆட்சி அமைவதை நிர்ணயிப்பார்கள்.

ஆகவே, 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் அணிக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை நோக்கி, 2019 நாடாளுமன்றத் தேர்தலும் செல்கிறது.

அந்த வகையில், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த தி.மு.கவும் முக்கியத்துவம் பெறும் என்பதே, தற்போதைய நிலைமையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆதலினால் காதல் செய்வீர்! (அவ்வப்போது கிளாமர்)
Next post கயிலாய மலையின் மிரளவைக்கும் மர்மங்கள்!! (வீடியோ)