கர்ப்பகால சங்கடங்கள்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 33 Second

‘தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள்.

எல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. அப்படி சில பிரச்னைகளையும், தீர்வுகளையும் விளக்குகிறார் அவர்.

கர்ப்ப கால முதுகுவலி

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் 6 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட சிலருக்கு முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.

மூச்சு முட்டுவது…

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல சிலர் உணர்வார்கள். இது இயல்பானதுதான். கருப்பையிலுள்ள குழந்தையானது கார்பன் டை ஆக்சைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது.

அதை வெளியேற்றுவதற்காக கர்ப்பிணியின் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது உதர விதானத்தை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.

இருமல், மார்பில் வலி அல்லது தொடர்ச்சியான களைப்பு போன்றவற்றுடன் மூச்சு நின்றுபோகிற உணர்வும் ஏற்படுமானால் கர்ப்பிணிகள் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலம் முழுவதும் மருத்துவரின் ஆலோசனையுடன் இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். ஆஸ்துமா பாதிப்பு தீவிரமடைந்தால் அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும். எனவே, இந்த விஷயங்களில் கர்ப்பிணிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

அஜீரணம் மற்றும் நெஞ்சு கரித்தல்

கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்னைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.

கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்னை வராமல் தவிர்க்கும்.

சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.

தலைவலி

கர்ப்ப காலத்தில் பலருக்கும் தலைவலி ஏற்படுவது சகஜம். இதற்கும் ஹார்மோன்களே காரணமாகின்றன. இதைத் தவிர்க்க, காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம். அடிக்கடி தலைவலி வந்தாலோ, திடீரென அதிகரித்தாலோ மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் அவ்வாறு தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

பல் பிரச்னைகள்

கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும், கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து, நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில் பற்கள் பராமரிப்பு மிக முக்கியம். ஒரு நாளைக்கு இரு வேளையாவது பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எக்ஸ்ரே எடுப்பது, சிகிச்சைகள் மேற்கொள்வது போன்றவற்றை கர்ப்பக் காலத்தில் தவிர்ப்பது அவசியம்.

மூக்கில் ரத்தக் கசிவு

கர்ப்ப காலத்தில் மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்படுவதும் சகஜமானதுதான். சிலருக்குக் குறைவாகவும், சிலருக்கு சில நேரத்தில் அதிகமாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். நீண்ட நேரத்துக்கு அதிக ரத்தம் வெளியேறினால் அலட்சியம் வேண்டாம்.

மூக்கை வேகமாகச் சிந்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ ஆலோசனையும் அவசியம். நோய்த் தொற்றின் காரணமாக இப்படி இருக்கலாம் என்பதால் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுக வேண்டும். மருத்துவரிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விவரத்தைக் கூறி ஆலோசனை பெற வேண்டியது மிக முக்கியம்.

வெள்ளைப்படுதல்

கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, அரிப்போ ஏற்டாதவரை அது பற்றிப் பயப்பட வேண்டாம். புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். தொற்றின் காரணமாக அப்படி இருக்குமானால் மருத்துவர் சரியான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்

* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.

* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்

* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.

* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஞாபக சக்தியை அதிகரிக்கிறது மூச்சுப்பயிற்சி!!(மகளிர் பக்கம்)
Next post இந்த நடிகை பெண் ஓரின சேர்க்கையாளரா? (சினிமா செய்தி)