திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு
கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழில் பெயர்சூட்டப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்று மேலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து திரையுலகினர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கின்றனர். இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது. மராட்டிய மாநில கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் விழாவில் பங்கேற்கிறார்கள். டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கருணாநிதி உருவப்பட பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு ரத்து: நடிகர், நடிகைகள் 2 மணி நேர கலை நிகழ்ச்சி
திரையுலகம் சார்பில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா நடப்பதையொட்டி 2 நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் நேற்று சென்னை திரும்பினார்கள். மேடையில் பலர் நடனமாட இருப்பதால் மாலை நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பிரபல நடன இயக்குனர்கள் பயிற்சி அளித்தார்கள். கருணாநிதி பராசக்தி படத்தில் எழுதிய கா…கா…கா… உள்ளிட்ட பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பாடப்படுகிறது.
கருணாநிதியை பாராட்டி கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த பாட்டுக்கு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருக்கிறார்கள். அந்த பாட்டுக்கு நடிகர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.
இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ்- முரளி ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள் மேடையில் தோன்றி பாடுகிறார்கள்.
நடிகர்கள் சிம்பு, பிரசாந்த், அப்பாஸ், பிரகாஷ்ராஜ், கார்த்திக், ஜீவா, ஜெயம்ரவி, மாதவன், ஸ்ரீகாந்த், பரத், `ஜித்தன்’ரமேஷ், சிபிராஜ், பிரசன்னா, ஆர்யா, நடிகைகள் அசின், சதா, ஸ்ரேயா, ரீமா சென், `உயிர்’சங்கீதா, மும்தாஜ், பூஜா, அபர்னா, லட்சுமிராய், தியா, சிந்து துலானி, ரகசியா, தேஜாஸ்ரீ, பத்மபிரியா, பாவனா, சமிக்ஷா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
சித்திரம் பேசுதடி படத்தில் பிரபலமான வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டுக்கு நடிகை ரசியா நடனம் ஆடுகிறார். சிவகாசி படத்தில் இடம்பெற்ற “வடுமாங்கா” பாட்டுக்கு லட்சுமிராய் ஆடுகிறார். 4 ஸ்டூடன்ஸ் படத்தில் இடம் பெற்ற லஜ்ஜாவதியே பாட்டுக்கு பரத் ஆடுகிறார். நடன குழுவினருடன் நடிகர் சிம்பு லூசு பெண்ணே என்ற பாட்டுக்கு ஆடுகிறார். நமீதாவும் ஆடுகிறார்.
பாக்யராஜ், வடிவேலு, விவேக், நெப்போலியன், தியாகு, அலெக்ஸ் ஆகியோரின் நகைச்சுவை நாடகமும் இடம் பெறுகிறது. டைரக்டர் சீமானின் புதுமை நாடகமும், 100 குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. கலைநிகழ்ச்சிகள் மாலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை 2 மணி நேரம் நடக்கிறது.