கருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன? (மருத்துவம்)
தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வரம். பெண்களுக்கு சம உரிமை என்று முழுங்குகிறார்கள். பெண்களும் கூச்சலிட்டுப் போர்க்கொடி தூக்கி உரிமை கேட்கிறோம். நடைமுறையில் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். இது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், மகப்பேறு என்ற ஒரு பெரிய அதிசயத்தை, உலகச் சுழற்சிக்கு முக்கியமான ஒரு அற்புதத்தை பெண்களுக்கு மட்டுமே விதித்திருக்கிறது இயற்கை. நம்மைப் பற்றி நாமே பெருமைகொள்ள இது ஒன்று போதாதா. இது ஒரு இமாலயப் பெருமை அல்லவா. ஆனால், தற்கால இளம் பெண்கள் இதை ஒரு சுமையாக எதிர்நோக்குகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம்.
* நிதானமாக யோசித்து திட்டமிட்டு கருத்தரிக்க முயற்சி செய்ய வேண்டும். திட்டமிடுதல் என்பது அரசின் ஐந்தாண்டுத் திட்டம்போல் நீடிப்பதும் நல்லதல்ல.
கருவுற்றவுடன் எங்கு பிரவசத்துடன் வைத்துகொள்வது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். 30 வயதுக்குக் கீழ் உள்ள, எந்த நோயும் இல்லாத ஒரு பெண்ணுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் வயது அதிகமான அல்லது உடல் – மன ரீதியான நோய்கள் உள்ள ஒரு பெண், பிரசவ காலத்தைப் பற்றி முன்கூட்டியே யோசிக்க வேண்டும்.
* உதாரணமாக, இதய நோய் அல்லது வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு, குழந்தை பிறக்கும்போதே சிக்கல்கள் வரலாம். தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்னைகளை எதிர்பார்த்து அவற்றுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ள மருத்துவமனை மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுக வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, நோயுற்ற தாயை அல்லது இளம் சிசுவை வைத்துக்கொண்டு தனிப்பயிற்சி பெற்ற மருத்துவரையோ மருத்துவமனையையோ தேடி அலைவது ஆபத்தை விளைவிக்கும்.
* அதனால், கருவுற்ற காலத்திலேயே 3 அல்லது 5 முறை DGO அல்லது M.D (O.G) படித்த மருத்துவரிடம் செக் அப் செய்துகொள்வது கட்டாயம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறையாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதத்தில் செய்யப்படும் ஸ்கேன், கரு உற்பத்தியை உறுதி செய்கிறது. அடுத்த ஸ்கேன் 4 – 6 மாதங்களில் செய்யப்படுகின்றது. இதனை anomaly scan என்று கூறுகிறார்கள். தாயின் கருப்பையில், குழந்தையின் முழு உருவமும் உறுப்புகளும் 12 வாரங்களில் உருவாகிவிடுகிறது. ஆனாலும் குழந்தை சுமார் 10 செ.மீ. நீளத்தில்தான் இருக்கும்.
* இந்தக் குழந்தையின் உள் உறுப்புகள், உடல் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா? இதயத்துடிப்பு சரியாக உள்ளதா? இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகளில் ஏதாவது பிறவிக் குறைபாடு (congenital anomaly) இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் இந்த இரண்டாவது ஸ்கேன். 7 – 8 மாதத்துக்குப் பிறகு மூன்றாவது ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி, நஞ்சு மற்றும் தொப்புள் கொடியின் அமைப்பு, அவற்றின் ரத்த ஓட்டம், கருவில் குழந்தையின் நிலை போன்றவற்றை அறிய இந்த ஸ்கேன் கட்டாயம் தேவை. இதன் அடிப்படையில்தான் சுகப்பிரசவமா, சிசேரியனா, எங்கு, எப்போது என்றெல்லாம் மருத்துவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.
* கருவுற்ற முதல் 3 – 4 மாதங்களில் காய்ச்சல், தலைவலி, கை கால் மூட்டுவலி, அம்மை நோய், கழுத்துப் பகுதியில் நெறி கட்டுதல், சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாய்க்கு ஏற்படும் சிறு வைரஸ் தொற்றுகூட கருவில் உள்ள சிசுவைத் தாக்கிவிடும். உதாரணமாக, ரூபெல்லா என்ற புட்டாளம்மை. தாய்க்கு இந்த அம்மை ஏற்பட்டால், குழந்தை congenital Rubella Syndrome என்ற நோயுடன் பிறக்க நேரிடும். மூளை வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு நோய், இதயக் கோளாறுகள், காது கேளாத் தன்மை, கண்களில் புரை போன்ற பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கலாம்.
* சிறுசிறு உபாதைகளுக்கு, தானாகவே கடைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது கூடவே கூடாது. கருவுற்ற காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தேவை. சாதாரண காலத்தில் சாப்பிடுவதைவிட 300 கலோரியும் 20 கிராம் புரதமும் அதிகமாக சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலை வருத்திக்கொண்டு வேலை செய்வது, அடிக்கடி அதிக தூரம் பிரயாணம் செய்வது கூடாது. நிதானமான வேலை, தேவையான ஓய்வு, உறக்கம் ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், கால்ஷியம், மற்ற வைட்டமின் மாத்திரைகளை தாயின் தேவைக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைப்பார்! அவற்றை விடாமல் சாப்பிட்டு வர வேண்டும். ரத்த குரூப் மற்றும் Rh பிரிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, HIV மற்ற பாலின நோய்கள், B வகை மஞ்சள் காமாலை, ரத்தசோகை, சிறுநீரில் உப்பு அதிகமாக வெளியேறுதல் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
* மாதம் ஒருமுறை எடையை பார்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள 9 மாதங்களில் சுமார் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை ரத்த அழுத்தம் (Blood pressure) பார்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்தில் மன அமைதி அவசியம். இதற்கு கணவன் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு முக்கியம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் அதிக அரவணைப்பு தேவை.
Average Rating