புஷ் சீனியருக்கு இறுதி அஞ்சலி – நெகிழ்ச்சியான நிகழ்வு!!(உலக செய்தி)
அரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில், அவரது மகன் ஜோர்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார்.
இறுதி சடங்கில் உரையாற்றிய புஷ் ஜூனியர், தனது தந்தையை “ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை” என்று விவரித்தார்.
இந்த நிகழ்வில் தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளும் கலந்து கொண்டனர்
அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 வரை பணியாற்றிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ், தனது 94 வது வயதில் கடந்த வெள்ளி அன்று காலமானார்.
அவரது சொந்த மாகாணமான டெக்ஸாசில், அவரது மனைவி பார்பராவிற்கு அருகில் அவரது உடல் புதைக்கப்படும்.
இறுதி மரியாதை சடங்கில் உரையாற்றிய ஜோர்ஜ் டபுள்யூ புஷ், “பொது சேவை என்பது சிறந்தது மற்றும் அவசியமானது” என தனது தந்தை தனக்கு சொல்லிக் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், “தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று என் தந்தை ஒப்புக்கொண்டார். ஆனால், தோல்வியால் எதையும் வரையறுக்கக்கூடாது என எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னடைவுகள் நம்மை எப்படி பலமாக்கும் என்பதை அவர் எங்களுக்கு உணர்த்தினார்” என்று குறிப்பிட்டார்.
உரையாற்றும் போது உணர்ச்சிவசப்பட்ட அவர், “உங்களை எவ்வளவு நேசிக்கிறோம், புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை எங்களின் கண்ணீர் வழியாக உணரலாம். என் தந்தை ஒரு தலைசிறந்த மனிதர். மகனுக்கும் மகளுக்கும் சிறந்த தந்தையாக விளங்கினார்” என்றார்.
தேசிய கதீட்ரலில் நடந்த இறுதி சடங்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேல்ஸ் இளவரசர், ஜெர்மன் சேன்சலர் ஏங்கலா மெர்கல், ஜோர்டன் அரசர் அப்துல்லா II உள்ளிட்ட உலக தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபுள்யூ புஷ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதன் கிழமை அன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு – பல அரசு நிறுவனங்களும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனைகளும் மூடப்பட்டன.
பொதுமக்களுக்காக வியாழக்கிழமை காலை வரை அவரது சவப்பெட்டி, புனித மார்டின் எபிஸ்கோபல் தேவாலயத்தில் வைக்கப்படும்.
இந்நிலையில், அவரது செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய ஜிம் மெக் க்ராத் கூறுகையில், தன் இறுதிச்சடங்கிற்கு யாரேனும் வருவார்களா என ஜனாதிபதி ஒருமுறை வியந்து கேட்டதாக குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ புஷ்ஷின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் தவிக்கும் அவரது செல்ல நாய் சுல்லி, சோகத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தியது.
ஜோர்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ் உடனே இருந்து, அவருக்கு தேவையான உதவிகளை சுல்லி செய்து வந்தது.
முன்னதாக, அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜோர்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷின் மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான புகைப்படத்தை, ´பணி முடிந்தது´என்ற பதிவுடன் புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
2009ஆம் ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ஹுண்ட்சன் ஆற்றில் இறக்கி, விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்களை காப்பாற்றிய விமானி செல்ஸி “சுல்லி” சுலென்பெர்கர் நினைவாக சீனியர் புஷ்ஷின் லாப்ரெடர் நாய்க்கு “சுல்லி” என்று பெயரிடப்பட்டது.
அப்போது இரண்டு வயதாக இருந்த “சுல்லி”, உடல்நிலை நலிவால், தனது வாழ்வின் இறுதி நாட்களில் சக்கர நாற்காலியில் இருக்க நேரிட்ட போது, அவருக்கு உதவி செய்வதற்காக பணியமர்த்தப்பட்டது.
உயர்தர பயிற்சியளிக்கப்பட்ட “சுல்லி”, பல்வேறு கட்டளைகளை புரிந்து கொண்டு செயல்படக்கூடியது. சீனியர் புஷ்ஷுக்கு பொருட்களை கொண்டு வந்து கொடுப்பது, கதவை திறந்துவிடுவது, போன் அடித்தால் எடுத்துக் கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்து வந்தது.
தற்போது ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமாகிவிட்ட நிலையில், காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உதவி செய்யும் பணியில் “சுல்லி” ஈடுபடுத்தப்படும்.
தனக்கென பிரத்யேக இன்ஸ்ட்ராக்ராம் கணக்கை வைத்துள்ள “சுல்லி”, சீனியர் புஷ் கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் “வாக்களிப்பதற்கு உதவி” செய்தது.
அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவருக்கும் நாய்கள் பிடித்தமானதாக இருந்ததில்லை என்பதும், ஜோன் எஃப். கென்னடிக்கு நாய்கள் என்றாலே பிடிக்காது என்பதும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஒரு நாய் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த சீனியர் புஷ், ரத்தத்தில் தொற்று ஏற்பட்டதால் ஏப்ரம் மாதம் முதல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.
Average Rating