பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்!!(கட்டுரை)
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.
மஹிந்த – மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது.
நாடாளுமன்றத்துக்குச் செல்லாமலேயே, வெட்டியாடி விடலாம் என்று போடப்பட்ட கணக்கு, பிசகிப்போனதால், இப்போது நாடாளுமன்றத்துக்குள் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையிலும், கீழிறங்க மறுத்து, பிரதமராக நீடித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் எப்படியும் தமது நிலையைக் காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகங்களும், இதை முடக்கிப்போட எதிர்க்கட்சிகள் நகர்த்தும் காய்களும், இலங்கை அரசியலை உச்சக்கட்டப் பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
அரசமைப்பிலும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிலும் உள்ள ஓட்டைகளுக்குள்ளாலும், சந்து பொந்துகளுக்குள்ளாலும் நுழைந்து, தப்பித்துக் கொள்வதற்கு, இரண்டு தரப்பும் முண்டியடித்து முயற்சிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை, இப்போதைக்கு நிரூபிக்காமல், காலம் கடத்தவே விரும்புகிறது. இதை உணர்ந்து கொண்டே, ஐ.தே.க, எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தது.
முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்றே வாதிட்டு வந்தது ஐ.தே.கட்சி. அதுபோலவே, சபாநாயகரும் “மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது; அவரது தரப்பினருக்கும் ஆளும்கட்சி ஆசனம் வழங்க முடியாது” என்றே கூறினார்.
ஆனால், நாம் விரும்பிய நேரத்தில், பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மஹிந்த தரப்புக் கூறியதால், வேறு வழியின்றிப் போராட்டத்தின் போக்கை மாற்ற வேண்டியிருந்தது.
பிரதமரைப் பதவி நீக்கியது செல்லாது, மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்று முரண்டு பிடித்து வந்த ரணில் விக்கிரமசிங்க தரப்பு, மஹிந்த ராஜபக்ஷவின் நியமனத்தை, ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததை ஏற்றுக்கொண்டால்தான், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரமுடியும்.
மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமாயின், நம்பிக்கையில்லாப் பிரேரணை முக்கியம். அதைக் கொண்டுவர வேண்டுமாயின், மஹிந்தவின் நியமனத்தை ஏற்க வேண்டும்.
இதனால் தான், வேறுவழியின்றி சபாநாயகரும், ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் ஆசனத்தை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க இணங்கினர். அதுவே இப்போது, ஐ.தே.கவுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.
“நாங்கள் தான் ஆளும்கட்சி” என்று கூறிக்கொண்டு, தற்போதைய நாடாளுமன்றத்தில், புதிய தெரிவுக்குழுவில் தமக்கு ஏழு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நிற்கிறது மஹிந்த தரப்பு. இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் தான், நாடாளுமன்ற அமர்வை சுமுகமாகக் கொண்டு நடத்த முடியும். ஆனால், ஐ.தே.கவோ இதை விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக, பிரதமராக ஏற்றுக்கொண்ட மஹிந்தவை இப்போது, ‘போலி பிரதமர்’ என்கிறது ஐ.தே.க. இந்தநிலையில், அவர்களின் தரப்புக்குத் தெரிவுக்குழுவில் ஏழு பேருக்கு இடமளித்தால், நாடாளுமன்றத்தில் தமது மேலாதிக்கம் இழக்கப்பட்டு விடும், தாம் முன்வைக்கும் பிரேரணைகள் இழுத்தடிக்கப்படவோ, முடக்கப்படவோ வாய்ப்புகள் உள்ளன என்று கருதுகிறது அந்தக் கட்சி.
இதனால் தான், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் பிரதமர், அமைச்சரவை, அவைத்தலைவர், அரசதரப்பு பிரதம கொரடா என்று யாரும் பதவியில் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்பும் ஆளும்கட்சி கிடையாது. எனவே, அவர்களுக்கு ஏழு ஆசனங்களைக் கொடுக்க முடியாது என்ற வாதத்தை ஐ.தே.க, முன்வைத்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தான் உச்சஅதிகாரம் கொண்டவர். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதில் யாரும் தலையிட முடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை, சபாநாயகர் அங்கிகரித்திருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், சபாநாயகரின் உத்தரவு, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஹன்சார்ட் பதிவுகள் எல்லாமே சட்டரீதியானவை என்பதால், மஹிந்த தரப்பு ஆளும்கட்சியாக அங்கிகாரம் கோர முடியாது என்ற வாதம், ஐ.தே.கவால் முன்வைக்கப்படுகிறது.
இதனால், தெரிவுக்குழு நியமனத்தில், நாடாளுமன்றத்தில் மீண்டும் குழப்பங்கள் உருவாகக் கூடிய சூழல், தோன்றி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு, அடுத்தடுத்து ‘செக்’ வைப்பதில், ஐ.தே.க தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி வைக்கும் பிரேரணையைச் சமர்ப்பித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது ஐ.தே.க.
அந்தப் பிரேரணை, மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டப்படி, அரசாங்க நிதியைக் கையாளும் பொறுப்பு, நாடாளுமன்றத்திடமே உள்ளது. அதன் அடிப்படையில் தான், இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஐ.தே.க, தமக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கவே, இந்த நிதிப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறது. நிதிப் பிரேரணை ஒன்றில் தோல்வியடைந்தால், அமைச்சரவை பதவியிழக்கும் என்பது மரபு.
ஆனால், மஹிந்த தரப்போ, “நிதிப் பிரேரணைகளை அரசாங்கத் தரப்புத் தான் முன்வைக்க முடியும். எதிர்க்கட்சியால் அவற்றை முன்வைக்க முடியாது” என்றும் கூறுகிறது.
தினேஷ் குணவர்த்தன, ஜோண் செனிவிரத்ன உள்ளிட்டவர்கள், இந்தக் கருத்தை முன்வைத்திருப்பினும், இந்த விடயத்தில், சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட வேண்டியுள்ளது என்றும், மஹிந்த சமரசிங்க போன்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர். ஆனாலும், இந்தப் பிரேரணை, 29ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஒழுங்குப்பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமோ இல்லையோ, அவரால், தொடர்ந்தும் தனது செயலகத்தை, அதிகாரபூர்வமாக நடத்திச் செல்ல முடியாது போகும். இதனால் தான், நாடாளுமன்றத்தில், இந்தப் பிரேரணை முன்வைக்கப்படும் போது, மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.
இந்தச் சூழலில், மஹிந்த தரப்பின் மீது, அடுத்த பந்தை வீசியிருக்கிறது ஐ.தே.க. இது, எல்லா அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கும் வைக்கப்பட்டிருக்கின்ற ‘செக்’. நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் ஆளணியினருக்கான சம்பளம், சலுகைகள், வசதிகள் எதையும் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், இந்தப் பிரேரணை, புதன்கிழமை (21) நாடாளுமன்றச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பயணங்களுக்களுக்கும் உள்நாட்டில் ஹெலிகொப்டர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட, தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, மஹிந்த தரப்பினர் அமைதியாக இருப்பார்கள் என்று, எதிர்பார்க்க முடியாது.
எப்படியாவது கிடைத்த அதிகாரத்தை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். அவ்வாறு அதிகாரம் கை விட்டுப் போனால், தமது திட்டம் தோல்வியில் முடிந்து விடும் என்பது அவர்களின் நிலைப்பாடு.
அதனால், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, இந்தப் பிரேரணைகளில் இருந்து தப்பிக்க முனைகின்ற நிலையிலேயே மஹிந்த தரப்பு இருக்கிறது. ஐ.தே.கவின் ‘மறுத்தான்’ ஆட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும் போது, மஹிந்த தரப்பு வன்முறையை ஆயுதமாகக் கையில் எடுக்கும்.
நாடாளுமன்றத்தைக் குழப்பிக் கூச்சலிட்டு, சபையை நடத்த விடாமல் தடுக்கும் அராஜகம் அரங்கேறும். இதுதான் நடந்து வருகிறது இனியும் நடக்கப் போகிறது. நாடாளுமன்றத்தை பயனுள்ள வகையில் நடத்திச் செல்லும் திட்டம் ஏதும், மைத்திரி- மஹிந்த தரப்புகளுக்கு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மாறி மாறி, ‘மறுத்தான்’ ஆட்டங்கள் ஆடப்படும் நிலையில், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி, காலத்தை இழுத்தடிப்பது தான், அவர்களின் இப்போதைய இலக்காகத் தெரிகிறது.
Average Rating