அவசியமான மீள்பரிசீலனை!!(கட்டுரை)
உலகில், பெரும் புரட்சியாளர்கள் என்று பெயரெ டுத்தவர்கள், அகன்ற இராச்சியங்களை ஆண்ட அரசர்கள், தீர சூரர்கள், படையெடுப்பில் வல்லவர்கள் எனப் பேசப்பட்டவர்கள், பெயர்பெற்ற ஆயுதக் குழுக்களின் கட்டளையிடும் தளபதிகள் எனப் பலர், தாம் போகும் வழிமுறையை, நகர்வுகளை மீள்பரிசீலனை செய்யாமல் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத ஒரு தருணத்தில், தோற்றுத்தான் போனார்கள் என்பதற்கு, சரித்திரக் குறிப்புகளில் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.
இலங்கையில், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கும், மேற்குறிப்பிட்ட உவமானத்தை இணைத்து நோக்க முடியும்.
இரு பெருந்தேசியக் கட்சிகளும், தொடர்ச்சியாகத் தமது போக்குகளைச் சுயமாக மீள்வாசிப்புச் செய்து, அதிலுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், எகத்தாளமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்கள் போலவே, இயங்க விரும்புகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை, பெருந்தேசியத்தின் நலன்களுக்குள் புதைத்து வைக்கும் பாங்கில் செயற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள்,கடந்த இருபது வருடங்களாகத் தாம் செல்கின்ற வழி, சரிதானா என்பதை மீள்பரிசீலனை செய்து, தமது கட்சியில், சொந்த அரசியலில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவர்கள், ‘மக்களுக்கான அரசியலில்’ பயணிக்கத் தலைப்படாத காரணத்தால், அடிக்கடி பின்னடைவுகளை எதிர்கொள்கின்றனர். இதைப் ‘பூசிமெழுகி’ மறைத்து,“அப்படியொன்றுமில்லை” என்றதொரு மாயத் தோற்றத்தைக் காண்பிக்க முயன்று, அவர்கள் தோற்றுப்போவதை, அவர்களே அறியமாட்டார்கள்.
சுருங்கக் கூறின், பிரதான அரசியல் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் மக்களுக்கேற்ப, தங்களை மீள்பரிசீலனை செய்து, தம்மைத் திருத்திக் கொள்ளாமல் பயணிக்கின்றமையால், நடைமுறையில், யதார்த்த சூழலில், வெளியில் இருந்து வருகின்ற தாக்கங்கள், கடுமையான தோல்விகளுக்கும், சிக்கல்களுக்கும் தள்ளிவிடுவதை, வெளிப்படையாகவே காண முடிகிறது.
ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி கவிழ்த்து, அவ்விடத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததன் மூலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ‘வெள்ளிக்கிழமை இரவுப் புரட்சி’ இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
பிரதமர் நியமனம், நாடாளுமன்ற ஒத்திவைப்பு, நாடாளுமன்றக் கலைப்புக்கான அறிவித்தல், அடிப்படை உரிமை மனுக்கள், உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு, நாடாளுமன்ற அமளிதுமளி, சந்திப்புகள் என்று, கடந்த ஒரு மாதகாலமாக, இப்பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவெடுக்கப்படாமல், இழுபறியாகவே இருந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
பொதுவாக, ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ, இதர உதிரிக் கட்சிகளோ, நாட்டு மக்களது உணர்வுகளைச் சரியாக வாசித்து, அதற்கேற்றாற் போல், தமது அரசியல் போக்குகளை மீளமைத்துக் கொள்ளவில்லை.
இது சிங்கள நாடு என்றும், சிங்களப் பெரும்பான்மைத் தேசம் என்றும் பெருமையடித்துக் கொண்டாலும், தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியாலோ, சுதந்திரக் கட்சியாலோ, பொது ஜன பெரமுன போன்ற புதிய கட்சிகளாலோ, தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையே உள்ளது.
சிறுபான்மைக் கட்சிகள், சிறு கட்சிகளின் ஆதரவு, அதற்கு அவசியமாகின்றது. அல்லது, நிறையப் பேரை வாங்க வேண்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், இலங்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற பெரும்பான்மைக் கட்சிகள் என்று, எதுவும் கிடையாது என்பதாகும்.
அதேபோல், சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் பக்கபலத்தோடு, ஆட்சியை நிறுவினாலும், ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, அக்கட்சிகள் உதவ முன்வருவதில்லை.
குறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க முற்படுகின்ற சந்தர்ப்பங்களில், ஏதாவது ஒரு கட்சிக்கு, முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்க யோசிக்கின்றன. அதே கட்சிக்கு அல்லது மற்றைய கட்சிக்கு, முட்டுக்கொடுக்கத் தமிழ்க் கட்சிகள் பின்வாங்குகின்ற நிலைமைகளைத் தற்போது அவதானிக்க முடிகின்றது.
இதனது அர்த்தம் என்னவென்றால், அந்தந்தக் கட்சிகள், சிறுபான்மை மக்களின் மனக் கிடக்கைகளை, மீள்வாசிப்புச் செய்து, அதற்கேற்றால் போல் தம்முடைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதில் தவறிழைத்தமையே எனலாம்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கும், நல்லாட்சி தோல்வியுற்றதற்கும் இவ்வாறான போக்கே காரணமாகும்.
அதேபோன்று, இப்போது இரு பெரும்பான்மைக் கட்சிகளாலும் தமது பலத்தை நிரூபிக்கவோ, ஸ்திரமான ஓர் ஆட்சிச் சூழலைக் கட்டியெழுப்பவோ முடியாமல் போயிருக்கின்றது. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, பொதுஜன பெரமுனவின் பக்கபலத்தோடு செயற்படுகின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ, எவ்வித தங்குதடையும் இல்லாமல் 113 இற்கு அதிகமான எம்.பிக்களின் ஆதரவை, நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது.
நேரத்தையும் பொழுதையும் பணத்தையும் அதிகமாகச் செலவிட்டும் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பித்து, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, இழுபறியாகக் காணப்படுவதற்கும், அக்கட்சிகள் தமது போக்குகளைச் சரிப்படுத்தாமல், எகத்தாளமாக செயற்பட்டதே காரணம் எனக் கூறுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லை.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், தமது போக்குகளை மீள்வாசிப்புச் செய்ய வேண்டும்.
குறிப்பாக, நல்லாட்சியின் காரணகர்த்தாவாக இருந்து, அரசாங்கத்தை நிறுவி, பிரதமர் பதவியை வகித்த போதும், பதவி கவிழ்க்கப்படும் நேரம் வரைக்கும், அதுபற்றி அறியாதிருந்தது மட்டுமன்றி, இப்போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில் நடைமுறைச் சவால்கள் பலவற்றையும் சந்தித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமது அரசியல் முன்னெடுப்புகளை, மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என, எண்ணத் தோன்றுகின்றது.
தற்போதைய நிலையில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதில், உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.
ஆனால், எதற்காக இந்த ஆதரவைத் தெரிவிக்கின்றன, முஸ்லிம் மக்கள் சார்பில், என்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, ரணில் எழுதிக் கொடுத்ததற்காக, இந்த முடிவை முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் எடுத்திருக்கின்றன என்பதை, விலாவாரியாக அக்கட்சித் தலைவர்கள், மக்களுக்குச் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளனர்.
ஆனாலும், ‘ஜனநாயகம்’ என்று, ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு, ரணில் ஆட்சியை நிறுவுவதிலேயே, முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளனர்.
ஆனால்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவாக வாக்களித்த மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில், அவ்வாறு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அவ்வாறே, பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும், ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில், இரட்டை நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியில், சில கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை நிறைவேற்றினாலேயே, பெரும்பான்மையை நிறுவும் நடவடிக்கைக்கு, ஆதரவளிப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
இவ்விரு கட்சிகளும், எதிர்க்கட்சி ஆசனத்தில் இருப்பவை. எனவே, ஆட்சியமைக்க ஆதரவளிக்க முடியாது என்பது, நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற காரணம்தான். ஆனால், அதற்குப் பின்னால், காரணகாரியம் இருக்கின்றது. அதுதான் நாம் மேற்குறிப்பிட்ட விடயம்.
அதாவது, பெரும் நம்பிக்கையோடு நிறுவப்பட்ட நல்லாட்சி, தமிழ்த் தேசியத்தைத் திருப்திப்படுத்தவில்லை. தமிழர்களின் பார்வையில், ரணில் விக்கிரமசிங்கவையும் கூட, இனியும் நம்பி ஏமாற முடியாது.
ஒருவேளை, தாம் கொடுத்த வாக்குறுதி என்ன, அதைச் செய்வதில், அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்று, பிரதமராகப் பதவிவகித்த விக்கிரமசிங்க, மீள்பரிசீலனை செய்து, ஓரளவுக்கேனும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் செயற்பட்டிருப்பாரேயானால் இந்தச் சிக்கல் வந்திருக்காது.
மறுபுறத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் விதத்தில், இந்த நாட்டில், உண்மைக்கு உண்மையாக ஊழல், மோசடி இல்லாத ஆட்சிச் சூழல் உருவாக்கப்பட்டு, இனவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, பழைய, புதிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்றால், அந்தக் கட்சியும் ஒரு தார்மீக ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவது குறித்துச் சிந்தித்திருக்க வாய்ப்பிருந்தது.
ஆனால், அதையும் முன்னைய பிரதமர் செய்யவில்லை. ஜனாதிபதி, என்னதான் ரணில் விக்கிரமசிங்க மீது, முழுப் பழியைப் போட்டாலும், கடந்த மூன்று வருடங்களுக்குள் இந்த நல்லாட்சி, அவலட்சணமடைந்ததற்கு ரணிலுக்கும் பொறுப்பிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, இரண்டு முஸ்லிம் கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கான தமது பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தாலும் கூட, அவை முழு மனத்துடன் அதைச் செய்திருக்கின்றனவா என்பது சந்தேகமே. அதைவிட முக்கியமாக இக்கட்சிகள் ரணிலைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும், அது அக்கட்சிகளுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களினதோ, பொதுவாக, நாட்டு முஸ்லிம்களினதோ நிலைப்பாட்டை, முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், எல்லாப் பெருந்தேசிய ஆட்சியாளர்களும் ஒன்றுதான். ஒன்று பேய் என்றால், இன்னொன்று பிசாசு.
இவ்வாறிருக்கையில், இன்றைய நாட்டு நிலைமையில், நடுநிலை வகிப்பது நல்லதல்ல என்று, முஸ்லிம் கட்சிகள் எண்ணிய பிறகு, இருக்கின்ற தெரிவுகளுள் ஒரு ஒப்பீட்டுத் தெரிவாக, ரணில் விக்கிரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குக் கணிசமானோர் ஆதரவளிக்கின்றரே தவிர, கடந்த மூன்று வருடகாலத்தில், அல்லது அதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றினார் என்பதற்காக, முஸ்லிம் கட்சிகளும் சமூகமும் அவருக்கு நன்றிக்கடன் அடிப்படையில், ஆதரவளிக்கின்றனர் என்று, யாரும் தப்புக்கணக்குப் போட்டு விடக் கூடாது.
ஏனென்றால், முஸ்லிம்கள் இன்று இருமனதோடு இருப்பதற்கும், நாம் இப்பத்தியில் மேற்சொன்ன விடயமே காரணமாகும்.
அதாவது, முஸ்லிம்கள் விடயத்தில் தமது அரசாங்கத்தின் நடவடிக்கை சரியாக அமைந்துள்ளதா என்பதை, ரணில் விக்கிரமசிங்க மீள்பரிசீலனை செய்து, நிறைவேற்றி இருந்தால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும், முழுமனதோடு ரணிலுக்காக, இன்று குரல் கொடுக்க நினைத்திருப்பர். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
2015ஆம் ஆண்டு, ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, முஸ்லிம்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை என்பதையும் மைத்திரி – ரணில் கூட்டணியை, ஆட்சிபீடமேற்றுவதைத் தீர்மானித்தவர்களுடன், தமிழர்களுடன் முஸ்லிம்களும் இணைந்திருந்தார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
ஆனால், “இனவாதிகளைப் பிடித்து, நாய்க்கூண்டில் அடைப்போம்” என்றும் “இனவாதம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்” என்றும் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அளித்த ரணில் விக்கிரமசிங்க (மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரின்) ஆட்சியிலேயே அம்பாறையில், புனைகதைகள் கட்டிவிடப்பட்டு, பள்ளிவாசலும் கடைகளும் உடைக்கப்பட்டன. திகண தொடக்கம் கண்டி வரை, திட்டமிடப்பட்ட இனக் கலவரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஆனால், பேருவளைக் கலவர காலத்தில், மஹிந்த அரசாங்கம் செயற்பட்டதைப் போலவே, ரணில் அரசாங்கமும் திகண விடயத்தில் நடந்து கொண்டது. மஹிந்த செய்த தவறைச் செய்யாமல், சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இனவாதத்தின் கொட்டத்தை உடன் அடக்க நடவடிக்கை எடுத்திருப்பார் என்றால், முஸ்லிம்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்.
இன்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்துகின்ற ஜனாதிபதி, திகண கலவரத்தின் சூத்திரதாரிகளை இரு மணித்தியாலங்களுக்குள் பிடித்து அடைக்க நடவடிக்கை எடுத்திருப்பார் என்றால், ரிஷாட்டும் ஹக்கிமும் எந்தப் பக்கம் நின்றாலும், இப்போது முஸ்லிம்கள் ஜனாதிபதியின் பக்கம் நின்றிருப்பார்கள்.
எனவே, ஜனாதிபதி, பிரதமர் மட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்கவும் மீள்பரிசீலனையை நடாத்த வேண்டி இருக்கின்றது. குறிப்பாக, இலங்கையில் பல வருடங்களாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து, கடந்த 24 வருடங்களில் யாரும் ஜனாதிபதியாக வரவில்லை. ஐ.தே.க, 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல தேர்தல்களில் தோல்வியடைந்தது. பின்னர் பெரும்பாடு பட்டே, 2015 இல் வெற்றிபெற முடிந்தது.
அதற்குக் காரணமாக இருந்த, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத சமகாலத்தில், மத்திய வங்கி மோசடிக்கும், சதித் திட்டங்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகும் நிலையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கட்சிக்குள் புதியவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதோடு, ஐ.தே.கட்சி மேட்டுக்குடி அரசியலில் இருந்து இன்னும் இறங்கி வரவேண்டும்.
வெளிநாடுகளின் திட்டங்களுக்கு துணைபோபவர் என்ற கருத்துநிலை, மாற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, சிறுபான்மை மக்கள் விடயத்திலும், நாடு என்ற ரீதியிலும் தம்முடைய, தமது கட்சியினுடைய நிலைப்பாடுகள், போக்குகளைக் கட்டாயமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றார்.
அதை அவர், உடன் செய்வாரேயானால்…. ஒரு விமோசனம் கிடைக்கக் கடைசி வாய்ப்பிருக்கின்றது.
Average Rating