தேசாபிமானி ஏ.எம்.ஏ.அஸீஸ்!!(கட்டுரை)
ஜனாப் அபூபக்கர் முஹம்மது அப்துல் அஸீஸ் அவர்கள் இறையடி சேர்ந்து, 45 ஆண்டுகளாகின்றன. அன்னாரின் மறைவுடன், இலங்கைத் தாயகம், தேசபக்தி நிறைந்த மகனொருவரையும், முஸ்லிம் சமூகம், பேரறிவு படைத்த பெருமகனையும் இழந்துவிட்டன.
கொழும்பு சாஹிரா கல்லூரியின் மேம்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் அன்னார் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த அரும்பெரும் சேவை, அவரை என்றும் நினைவுபடுத்துகின்றது. இலங்கை முஸ்லிம்களின் முதனிலைக் கல்விக்கூடமான சாஹிரா கல்லூரி, அவர் அதிபராகப் பதவியேற்ற 1948ஆம் ஆண்டுக்கும் அதிலிருந்து ஓய்வுபெற்ற 1961ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், வைத்திய கலாநிதிகளாகவும் பொறியியலாளர்களாகவும் அறிவியல் அறிஞர்களாகவும் அரச சிவில் சேவை அலுவலர்களாகவும் சிறப்புடன் சேவையாற்றியுள்ள, சேவையாற்றி வருகின்ற அன்றைய இளைஞர்கள் தொடர்ச்சியாக இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தவர்களே. அத்துடன் மட்டுமல்லாமல், அஸீஸ் அவர்களின் கூற்றின் பிரகாரம், சாஹிரா கல்லூரி, “முஸ்லிம்களின் கலாசாரம், எண்ணக்கருத்து, செயற்பாடுகள் ஆகியன பரிணமித்துப் பரிமளித்து ஒளிபரப்பிய மத்திய நிலையமாகவும்”, விளங்கியது. சுருக்கமாகக் கூறினால், அந்த 13 ஆண்டுகாலப் பகுதி, சாஹிரா கல்லூரியின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
சாஹிரா கல்லூரியின் நிர்வாகத்தைத் திறமையாகக் கையாண்டு வந்த அன்னார், கல்வித்துறையில் சிறப்பாகப் போதிக்கக்கூடிய திறன்மிகு ஆசிரியப் பெருந்தகைகளைத் தெரிவுசெய்து நியமிக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தார். பல்கலைக்கழக மூதவையின் உறுப்பினராகவும் பதவி வகித்த அஸீஸ் அவர்கள், பல்கலைக்கழகம் புகுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்திய சாஹிரா கல்லூரியில் மேற்பிரிவில் கற்பிக்க, ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகத்தில் திறமையாகச் சித்தியடைந்த இளம் பட்டதாரிகளைத் தன்னுடைய கல்லூரியில் இணைத்துக் கொண்டார்.
திங்கட்கிழமைகளில் மாணவர்களுக்கு அஸீஸ் அவர்கள் வழங்கிய அறிவுரைகளின்போது, அன்னாருக்குப் பின்னால் அரைவட்டமாகச் சூழ்ந்திருந்த இந்த இளம் பட்டதாரிகள், அன்னாரின் உரைகளில் உள்ளடங்கியிருந்த அறிவு விருந்தைச் சுவைத்துப் போஷித்துக் கொண்டிருந்தார்கள். திங்கட்கிழமைகளில் அன்னார், மாணவர்களிடையே நிகழ்த்திய அறிவுரைகளில், இஸ்லாம் மதம் சம்பந்தமான ஆத்மீக அறிவும் மதசார்பற்ற உலகம் சம்பந்தப்பட்ட நுண்ணறிவும் கலந்திருக்கக் காணப்பட்டன. ஆர்வம் மிகுந்த வாசகராக இருந்த அஸீஸ் அவர்கள், கொழும்புக் கல்லூரிகளில் சிறந்த நூல் நிலையமொன்றை சாஹிரா கல்லூரியில் அமைத்துக் கொள்வதற்கும், அயராத அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார். அஸீஸ் அவர்கள், சாஹிரா கல்லூரியில் அதிபராகப் பதவி வகித்த காலத்தின் நிரந்தரமான சாசனப் பட்டியல்களில் ஒன்றாக இது திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம் சமூகம், கல்வித்துறையில் நான்கு பெருந்தகைகளின் சேவையைப் பெற்றிருந்த காலமது. இந்த நால்வரையும், “நயமிகு நால்வர்கள்” என நான் நினைவுகூருகின்றேன். இவர்கள், எம்.சீ. சித்திலெப்பே (1838 – 1898), ராசிக் பரீத் (1893 – 1984), பதியுத்தீன் மஹ்முத் (1904 – 1997) மற்றும் எ.எம்.எ. அஸீஸ் (1911 – 1973) ஆவர். இவர்களிடையே, அஸீஸ் அவர்களின் பங்களிப்புத் தனித்துவமுடையதாக இருந்தமைக்குக் காரணம், முஸ்லிம்களின் மத்தியில் சிந்தனையாளர்களையும் நுண்ணறிவு படைத்தவர்களையும் உருவாக்குவதிலேயே அவர் தன்னுடைய முழுமையான நோக்கத்தையும் செலுத்தினர். இவர், தன்னைப் போன்று, ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற்று, அந்த மொழியில் கிடைக்கப்பெற்ற பாரிய அளவிலான அறிவையும், குறிப்பாக இஸ்லாம், முஸ்லிம் நாகரிகம் என்பவற்றிலுள்ள படைப்புகளையும் படித்துப் பயன்பெற வேண்டுமென்று செயற்பட்டார். மேற்கத்திய மொழிகளில், குறிப்பாக ஆங்கில மொழியில், இஸ்லாம் மதம் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், மடை திறந்த வெள்ளப் பிரவாகமாக வெளிவந்து கொண்டிருந்த எண்ணக் கருத்துகளை அவர் தெரிந்துகொண்டிருந்தார்.
அஸீஸ் அவர்கள், இக்பால் தத்துவ நோக்காளரொருவராக விளங்கியதுடன், சேர் செய்யத் அஹமத் கான், முஹம்பது அலி ஜின்னா, அபுல் கலாம் ஆசாத் போன்ற கல்விமான்களையும், தலைவர்களையும் சிலாகித்து மெச்சுபவராகவும் இருந்தார். ஆகையால், நவீனத்துவப் பாதையில் தலைமைத்துவம் வகித்து, சமூகத்தை வழிநடத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்கு வித்துகளையிட்டு, அவற்றைப் பேணி வளர்ப்பதில், சாஹிரா கல்லூரிக்குப் பாரிய பொறுப்புள்ளது என்பதை அவர் உணர்ந்து செயற்பட்டார்.
இந்தக் கைங்கரியம், அவருக்குக் கடினமாக இருந்தது. ஏனெனில், அன்றைய முஸ்லிம் சமூகம், வணிகத்துறையில் ஈடுபட்டு, மதம் குறித்த விடயங்களில் பழமையைப் பின்பற்றியவர்களாக, இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகத்தில் உண்டான நவீனமயமான சிந்தனைகளை ஏற்கொள்ளாத ஒரு சமூகமாகவே இருந்தது. இந்த விடயம், அவருடைய பல வாழ்க்கைச் சரித்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அவருடைய உரைகளையும் ஆக்கங்களையும் கூர்ந்து அவதானிக்கும்போது, இது புலப்படுவதை உணர முடியும்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியெய்திய முதலாவது முஸ்லிமான அன்னார், தன்னுடைய தாய்நாட்டுக்கான சேவையை, கிழக்கு மாகாண நகரமான கல்முனையில் உதவி அரசாங்க அதிபராக, 1942 முதல் 1944ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிறைவேற்றினார். உலக யுத்தம் காரணமாக, உணவுத் தட்டுப்பாட்டை நாடு எதிர்கொண்டிருந்த காலமது. இந்தத் தட்டுப்பாட்டை, பகுதியளவிலாவது நிவர்த்தி செய்ய, கிழக்கு மாகாணக் கரவாகுபற்று முஸ்லிம்கள், விவசாயத் துறையில் கொண்டிருந்த திறமையை உபயோகப்படுத்தினார். வெற்று அரச காணிகளை விவசாய நிலங்களாகப் பரிமளிக்கச் செய்ய, அந்தக் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை, அந்த முஸ்லிம்களுக்கு வழங்கினார்.
இன்றும்கூட அந்தப் பகுதி முஸ்லிம்கள், அஸீஸ் அவர்களாற்றிய அரும்பெருஞ் சேவையை அன்புடன் நினைவுகூர்வதுடன், இன்னும் “அஸீஸ்துரைக் கண்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள பாரிய நெற்செய்கை நிலப்பகுதி, அந்தப் பிரதேசத்தை இலங்கையின் “நெல் விளைச்சல் களஞ்சியமாக” மாற்றியமைத்த அன்னாரின் சேவைக்கு, நிசப்தமானதொரு சாட்சியமாக விளங்குகின்றது.
கல்முனையில் அவர் கடமையில் ஈடுபட்டிருந்த குறுகிய காலப்பகுதியில், இரண்டு பிரபலங்களின் தொடர்புகள் அவருக்கு அறிமுகமாகின. அவர்களில் ஒருவர், அந்தப் பகுதியில் ஆசிரியப் பெருந்தகையாகப் பதவி வகித்தவரும் இக்பாலின் மீள் நிர்மாண இஸ்லாமியக் கருத்துகளில் இலயத்திருந்து விளங்கியவருமான புலவர் அப்துல் காதர் லெப்பை அவர்களாகும். மற்றவர், இந்து மதப் பக்தரும் நுண்ணறிவுப் பேரறிஞருமான சுவாமி விபுலானந்தர் அடிகள் அவர்களாகும். இந்தப் பேராசான், அஸீஸ் அவர்களுக்கு மேலும் அறிவூட்டும் வண்ணம், தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றின் ஆழ்கடல் அறிவுச் சுரங்கத்துக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே தன்னுடைய சின்னப் பெரியப்பா முறையான அசனார் லெப்பை அவர்கள் மூலமாகவும், புகழ்பூத்த தமிழ் வித்தகர் ஆறுமுகநாவலர் அவர்களின் பிறப்பிடமான வண்ணார்பண்ணைச் சுற்றுச்சூழலிலும் பாரிய தமிழ் அறிவைப் பெற்றுக் கொண்டிருந்த அஸீஸ் அவர்களுக்கு, தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றின் மேலிருந்த ஆர்வம் மென்மேலும் அதிகரித்தது.
தமிழ்மொழியில் அவர் கொண்ட அன்பும் ஆர்வமும் முஸ்லிம்களுக்கு அது முக்கியமானதென, அம்மொழி பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அன்னாருடைய உத்வேகமும் ஆர்வமும், “சிங்களம் மட்டும்” சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை “செனட்” எனும் மூதவையில் வாதிட்டு உரையாற்றிய நிகழ்வில் நன்கு புலனாகின்றது. நாடாளுமன்றத்தில் அன்றைய முஸ்லிம் தலைவர்களின் கருத்துகளுடன், அஸீஸ் அவர்களின் நோக்கு முரண்பட்டிருந்தது. அஸீஸ் அவர்களின் மொழிக்கொள்கை, அரசியல் பிரபலத்துக்கு அப்பால் சென்றதுடன், இலங்கையில் இஸ்லாம் எதிர்காலத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்ற தீர்க்கதரிசனத்தையும் கொண்டிருந்தது. முஸ்லிம் பாடசாலைகளில் போதனா மொழி, தமிழாக இல்லாமல் சிங்களமாக மாற்றப்படும் நிலை, எதிர்காலத்தில் நிகழக்கூடிய நீண்டகால விளைவுகளை அன்றைய முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அநேகமானவர்கள் அறிந்திருக்கவில்லை. அஸீஸ் அவர்களினதும், அன்னாரின் நீண்டநாள் நண்பருமான அப்துல் காதர் லெப்பை அவர்களினதும் நுண்ணறிவு மிக்க வாதமே, அன்று சிங்கள மொழி மட்டும் சட்டமூலத்தை உக்கிரமமாக ஆதரித்த அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் மனோநிலையையும் மாற்றியதென்று இங்கு குறிப்பிடும்போது, அது மிகையாக இருக்காது.
அஸீஸ் அவர்கள், தமிழுக்கும் தமிழ் எழுத்தாக்கத்துக்கும் ஆற்றியுள்ள தொண்டு, தனியான ஆராய்ச்சிக்குரிய விடயமாகும் ஜனாப். ஏ.எம். நஹியா அவர்களின் “அஸீஸும் தமிழும்” எனும் படைப்பு, அஸீஸ் அவர்களின் நினைவுக்குப் பெறுமதிமிக்க பங்களிப்பாகும். இலக்கியத்துறையில், தமிழ்பேசும் முஸ்லிம்களால் தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இஸ்லாம் மதத்துக்கும் ஆற்றிய மாபெரும் தொண்டாக அரபுத் தமிழ் விளங்குவதுடன், இது தொடர்பாகவும் அஸீஸ் அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள். “அரபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ்” எனும் அன்னாரின் ஆக்கம், தமிழ், அரபுச் சொற்களைச் சிறிது மாற்றம் செய்து, அரபு எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும் இந்த ஓரளவு “புனித” மொழி மறுமலர்ச்சி செய்யப்பட வேண்டியதொன்றாக உள்ளது. அலுவலக மொழிப் பிரச்சனையின்போது “அரபுத் தமிழ்”, முஸ்லிம்களின் தெரிவாக இருக்க வேண்டுமென்று அஸீஸ் அவர்கள், சிலசமயம் எண்ணியிருந்ததுமுண்டு. ஆனால் அவருடைய நண்பர், அப்துல் காதர் லெப்பை, அரசியல் இலாபத்துக்காகத் தமிழ்மொழியைப் பலிக்கடாவாக ஆக்குதல், இஸ்லாமியக் கலாசாரத்தைப் பாதிக்கும் எனக் கடிதத் தொடர்பு மூலம் வலியுறுத்திய காரணத்தால், அஸீஸ் அவர்கள் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டார்.
முஸ்லிம் வாலிபர் சங்கம் (YMMA), இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் (CMSF) ஆகிய இரண்டும், அஸீஸ் அவர்களினதும் அன்னாரின் புலவர் நண்பரினதும் இரட்டைப் படைப்புகளாகும். வாலிபர் சங்கத்தை உருவாக்குவதும் வறுமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதலும், அவர்கள் இருவரினதும் கல்முனைக் கால நட்பில் உருவானவையாகும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நுற்றுக்கணக்கான மாணவர்கள் நிதியுதவி பெற்று, தொழில் வல்லுநர்களாகவும் சிரேஷ்ட சிவில் சேவை அலுவலர்களாகவும் நாட்டில் இன்று சேவை செய்கின்றனர். முதலாவது வாலிபர் சங்கக்கிளை, 1943ஆம் ஆண்டில், பதுளையில் அவருடைய புலவர் நண்பரால், அவர் அங்கு ஆசிரியராக மாற்றம் பெற்றுச் சென்ற பின்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கிளை, கொழும்பிலுள்ள வாலிபர் சங்கத் தலைமை அலுவலகத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாக விளங்குகின்றது.
அஸீஸ் அவர்களின் வதிவிடமாக இருந்த கொழும்பு பான்ஸ் பிளேஸிலுள்ள “மெடோசுவீட்” வளவில், அஸீஸ் அவர்களால் நடப்பட்டு வளர்ந்திருந்த பனை மரம், அவருடைய நண்பர்களுக்கு, அன்னாரின் யாழ்ப்பாண வம்சாவழியை நினைவூட்டியது. யாழ்ப்பாணத்தில் கல்வியிலும் அந்தஸ்திலும் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த அஸீஸ் அவர்கள், வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பிரபலமான பழைய மாணவர் ஆவார். இந்துக் கலாசார சூழலில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவருக்கு, தமிழ்மொழியில் பாண்டித்தியமும் இந்து மெய்யியலிலும் மரபியல்களிலும் சிறந்த அறிவைப் பெறவும் முடியுமாக இருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில், அன்னாரின் மறைவுக்குப் பின்னர், 1980இல் வழங்கப்பட்ட கலாநிதிப் பட்டம்,
இந்த உறவுக்குச் சான்றாக அமைகிறது.
அஸீஸ் அவர்கள், ஒரு நிறுவனமாகவும் நடமாடும் கலைக் களஞ்சியமாகவும் திகழ்ந்தார். அவருடைய எண்ணமும் நோக்கமும் அவருடைய காலத்துக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. இலங்கைக்கு இக்பாலின் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவராகவும், ஆங்கிலம் கற்ற அநேக முஸ்லிம் தொழில் வல்லுநர்கள், அரச அலுவலர்கள் ஆகியோர்களை நாட்டுக்கு வழங்கிய கல்விமானாகவும் கிழக்கிலங்கை முஸ்லிம் விவசாயிகளுக்குப் பாரிய சேவைகளை வழங்கியவராகவும், தேசிய மற்றும் சர்வதேச எழுத்தாளர்கள் அமர்வுகளில் அங்கிகாரம் பெற்றவராகவும், கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டுக்குப் பாரிய சேவை செய்தவருமான அன்னார், நம்மிடையே இல்லை. சர்வதேச தூரநோக்காளரான இவருக்குப் பொருத்தமான புகழ்மாலையாக, இந்தியாவின் குறிக்கோள்களுக்கான கற்கை நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள “20ஆம் நூற்றாண்டின் 100 முஸ்லிம் தலைவர்கள்” என்ற நூலில், அன்னாரும் இடம்பெற்றுள்ளார். அவருடைய இழப்பு, நாட்டுக்குப் பாரிய நட்டமாக இருப்பதுடன், அவருடைய நுண்ணறிவு வெற்றிடம் இனிவரும் வருடங்களிலும் அவ்வாறே இருக்கும்.
(தமிழில்: எஸ்.எம்.எம். யூசுப்)
45 ஆண்டுகள் நிறைவு…
கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவுதினம், நாளை (24) ஆகும். அதை முன்னிட்டு, இக்கட்டுரை பிரசுரமாகிறது.
இக்கட்டுரையை எழுதிய கலாநிதி ஏ.சீ.எல். அமீர் அலி, காத்தான்குடியில் பிறந்தவரும், நாடு நன்கு அறிந்த புலவருமான அப்துல் காதர் லெப்பை அவர்களின் புதல்வரும் ஆவார். அஸீஸ் அவர்கள் அதிபராகப் பணியாற்றிய காலத்தில், சாஹிரா கல்லூரியில் கல்விகற்று, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் 1964இல் சிறப்புப் பட்டம் பெற்றவர் ஆவார். இலண்டன் பொருளியல், அரசியல் கற்கைக் கல்லூரியில் முதுமாணிப் பட்டமும், மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் பயிற்றப்பட்ட ஒருவராக அவர் விளங்குவதுடன், இலங்கைப் பல்கலைக்கழகம், தாருஸ்ஸலாம் புருணைப் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம், முர்டொக் பல்கலைக்கழகங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் ஆசிரியராக விளங்குகிறார். கல்வித்துறை ஆலோசகராக அவருடைய சேவை, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டுள்ளது. தற்போது அவர், மேற்கு அவுஸ்திரேலிய முர்டொக் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட கல்வியாளராகப் பணிபுரிகின்றார்.
சர்வதேச மாநாடுகளில், அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள அவர், அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தவராகவும் விளங்குகிறார்.
Average Rating