அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’!!(கட்டுரை)
இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர் கலரியிலுள்ள ஆசனங்களிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர்.
இதைக் கண்டு, அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரிகள், மாணவிகளின் நடத்தையால், சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி, அந்த மாணவிகள் அனைவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு பணித்தனர்.
கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர் கலரியில் அன்றி, சபை மத்தியிலேயே, வெளிநாட்டுத் தூதுவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, கைகலப்பில் ஈடுபட்டதையும் சபாநாயகரின் தொலைபேசியையும் ஒலிவாங்கியையும் பிடுங்கி எடுத்து, சபாநாயகரின் கதிரையில் தண்ணீரை ஊற்றிதையும், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் சபையின் கதிரைகளை உடைத்து, பொலிஸார் மீது மிளகாய்த் தூள் கலந்த நீரைத் தெளித்து, புத்தகங்களையும் கதிரைகளையும் அவர்கள் மீது எறிந்து செய்த அட்டகாசத்தைத் தொலைக்- -காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பத்தியாளரின் மகள், “எமது பாடசாலை மாணவிகள் தூங்கி விழுந்தமை, இந்த அட்டகாசத்தை விடவும் நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதா?” எனக் கேட்டாள்.
அது நியாயமான கேள்வியாக மட்டுமன்றி, தர்க்க ரீதியான கேள்வியாகவும் இருந்தது. பொதுவாக, நாட்டு மக்களுக்கும் இவ்வாறு சிறுவர்களைப் போல், கட்சி பேதமின்றித் தர்க்க ரீதியாக மட்டுமே சிந்திக்க முடியுமாக இருந்தால், அதன் படி தேர்தல்களின் போது, பண்பானவர்களை மட்டுமே தான் தெரிவு செய்வோம் என்று உறுதி கொள்ள முடியுமாக இருந்தால், இந்நாட்டு அரசியல்வாதிகள், மக்களை மதிப்பார்கள். இப்போது போல் மக்களின் அறிவைப் பரிகசிக்க மாட்டார்கள்.
ஆனால், மக்கள் அவ்வாறு தர்க்க ரீதியாகச் சிந்திப்பதில்லை. தாம் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதி, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விதத்தைக் கண்டு, ‘இனி இவருக்கோ, இவரைப் போன்றவர்களுக்கோ வாக்களிக்க மாட்டேன்’ என்று நினைத்த ஒரு வாக்காளர் இந்த நாட்டில் இருப்பாரா என்பது சந்தேகமே.
அதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும் அவர்கள் பொதுச் சொத்துகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கையில் சேதப்படுத்தியதையும் கண்டு, இவர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று நினைத்து, மனதை மாற்றிக் கொண்ட மஹிந்த அணி ஆதரவாளர் ஒருவரேனும் நாட்டில் இருப்பாரா?
இறைவன், மனிதனைப் படைத்தாலும், சுதந்திரமாகச் சிந்தித்து செயற்பட இடமளித்துள்ளான். அவனுக்கு, அந்தச் சுதந்திரத்தை வழங்காது, இறைவனே மனிதனின் செயற்பாடுகள் அனைத்தையும் தாமாக வழி நடத்துவதாக இருந்தால், மனிதன் செய்யும் பாவங்களுக்காக, அவனைத் தண்டிக்க இறைவன் நரகத்தைப் படைக்கத் தேவையில்லை. அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் தான், “நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ளும் வரை நான், உங்கள் தலைவிதியை மாற்றுவதில்லை” என இறைவன் கூறுகிறான்.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலும், இந்நாட்டு மக்கள், தம்மை மாற்றிக் கொள்ளாத வரை, தற்போதுள்ள மக்களின் அரசியல் தலைவிதியும் மாறப் போவதில்லை.
இந்நாட்டு மக்கள் மத்தியில், தற்போதுள்ள அடிமை மனப்பான்மை மாறுவதாகத் தெரியவில்லை. அதனால் தான் அரசியல்வாதிகள், கண்கூடாகத் தெரியும் யதார்த்தத்தைக் காணாதவர்களைப் போல் விதண்டாவாதம் பேசிக் கொண்டு, அந்த யதார்த்தத்தை மறுக்கிறார்கள். அதன் மூலம், நாடு பெரும் அழிவை நோக்கிச் செல்வதையும் அவர்கள் காணாதவர்களைப் போல் இருக்கிறார்கள்.
ஜனாதிபதி, புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பதாக இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவரெனத் தாம் கருதுபவராக இருக்க வேண்டும் என்பது, அரசமைப்பின் விதியாகும். ஆயினும் குறிப்பிட்ட ஒருவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என, ஜனாதிபதி எந்தவித அடிப்படையும் இல்லாமல் கருத முடியாது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கருதுவதற்கு எந்தவித ஆதாரமும் இருக்கவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கத் தேவையில்லை. மஹிந்தவுக்குப் போதிய எண்ணிக்கையில் எம்.பிக்களை விலைக்கு வாங்க முடியாததைக் கண்டு, அதன் பின்னர் கடந்த ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையில்லை.
மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அதன் பின்னர், மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் குழப்பங்களை உருவாக்கி, எந்தவொரு வாக்கெடுப்பையும் நடத்த விடாமல் தடுத்திருக்கவும் தேவையில்லை. அதேவேளை, சட்ட விரோதமாகப் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிராக, இரண்டு முறை 122 எம்.பிக்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, மக்கள் விடுதலை முன்னணி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது. அந்தப் பிரேரணைகள், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் முறையாக வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்றும், மஹிந்த அணியினர் வாதிடுகின்றனர்.
நிலையியல் கட்டளைகள் ஒத்திவைக்கப்பட்டே அந்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. நிலையியல் கட்ளைகளின் படி, நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கவும் முடியும். அவ்வானதொரு மரபு நாடாளுமன்றத்தில் இருக்கின்றது.
அவ்வாறு நிலையியல் கட்டளைகள், சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், நிலையியல் கட்டளைகளின் படி செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமே, அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
அதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் கரு ஜயசூரிய முயன்றார். மஹிந்த அணியினர் குழப்பம் விளைவித்து, அதைத் தடுத்த காரணத்தாலேயே, சபாநாயகர் குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.
பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துவதைத் தாமே தடுத்துவிட்டு, இப்போது, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்கிறார்கள் மஹிந்த அணியினர்.
உண்மையிலேயே, அந்தப் பிரேரணைகள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்று இப்போது வாதிட்டுக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் பிரேணைகளில் 122 கையொப்பங்கள் இருப்பதால், மஹிந்தவுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னரும், அரசியல்வாதிகள் வாதிட்டுக் கொண்டு இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு பொறிமுறை.
ஆனால், பொது மக்களுக்கு என்ன கிடைக்கிறது? பெரும்பான்மைப் பலம் பற்றிய பிரச்சினை இவ்வளவு தெளிவாக இருக்கும் போது, பொது மக்கள் ஏன் அதைப் பற்றிக் கண்மூடித்தனமாக வாதிட்டுக் கொண்டு, இந்தப் பிரச்சினையால் நாடு அழிவை நோக்கிச் செல்வதற்குத் துணைபோக வேண்டும்?
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றதை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது, அன்று நள்ளிரவு அளவில் தெளிவாகியது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தடைசெய்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க மஹிந்த முயன்றாரெனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, உடனே சட்டமா அதிபர், பிரதம நீதியரசர். பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோர், ஜனாதிபதி தங்கியிருந்த அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் அதை எதிர்த்ததால், அத்திட்டத்தைக் கைவிட்ட மஹிந்த, அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் அந்நாள்களிலேயே குற்றஞ்சாட்டப்பட்டது.
சட்டப்படி தமக்குப் பதவியில் இருக்க அதிகாரம் இல்லாத நிலையில், தாம் அவ்வாறு பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க முயலவில்லை எனக் கூறி, அந்தச் சதிக் குற்றச்சாட்டை மஹிந்த மறுத்தார்.
ஆனால், இப்போது சட்டப்படி தமக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அவர் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது, அவ்வாறானதொரு சதித் திட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதியால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தாமே இன்னமும் பிரதமர் எனக் கூறுகிறார். தம்மைப் பதவியில் இருந்து நீக்க, ஜனாதிபதிக்கு அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் வாதிடுகிறார். ஆனால், தம்மைப் பதவியில் இருந்து நீக்கியமையை எதிர்த்து, அவர் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.
அதேவேளை அவர், அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமரின் ஆசனத்தில் அமர முற்படவும் இல்லை. மஹிந்தவே அந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். ‘பிரதமர்’ மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே, ஐ.தே.க வாக்களித்தது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் பரீட்சிக்கப்பட முன்னரே, மஹிந்தவைப் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் இருந்த நிலையையே, தாம் ஏற்றுக் கொள்வதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். அந்த நிலைப்பாடு சரி என, ஏற்றுக் கொள்ள முடியாது.
மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என, அவர் அப்போது எவ்வாறு முடிவு செய்தார்? ஆனால், முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னர், தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, அவர் கூறினார். அதுவே சரியான வாதமாகும்.
ஏனெனில் ஜனாதிபதிக்கு, பிரதமர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் சிங்களப் பிரதியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று மைத்திரி தரப்பினர் வாதிடுகின்றனர். அரசமைப்பின் தமிழ், சிங்கள, ஆங்கில் பிரதிகளிடையே வேறுபாடுகள் இருப்பின், சிங்களப் பிரதியே செல்லுபடியாகும். எனவே ரணில் நீக்கப்பட்டமை சட்டபூர்வமாகிறது என்பது அவர்களின் வாதம்.
அதேவேளை, அதன் பின்னர் மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானதல்ல என்பதை, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் உள்ள கையொப்பங்கள் காட்டுகின்றன. ஏனெனில், பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என, அரசமைப்புக் கூறுகிறது. எனவே, தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என சபாநாயகர் கூறுவது சரியே.
இப்போது, தாமே பிரதமர் என, மஹிந்த கூறுகிறார்; ரணிலும் கூறுகிறார். ரணிலைப் பதவி நீக்கம் செய்ததும், மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததும் சரியே என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, சபாநாயகர் கூறுகிறார்.
இந்த நால்வரும் தாம் நிற்கும் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை. இறங்கி வராமல் பிரச்சினை தீரப் போவதுமில்லை. இது அவர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த ‘ஈகோ’ (தன்முனைப்பு) பிரச்சினைக்குப் புறம்பாக, மஹிந்தவும் ரணிலும் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க, ஏன் முயல்கிறார்கள் என்பதற்கு, மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது தலைமையிலான காபந்து அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
அப்போது, அந்தத் தேர்தலில் அவர்கள் அரச வளங்களைத் தேர்தலுக்காகப் பாவிக்க முயலலாம். பொலிஸாரை வழிநடத்த முடிகிறது. இதன் அனுகூலம், தேர்தல் முடிவு மீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமையே தற்போதைய பிரச்சினை தோன்ற அடிப்படைக் காரணமாகும். எனவே, புதிதாகத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்வதே, தற்போதைய பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வாகும். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி மேற்கொண்ட கலைப்பு, சட்ட விரோதமானது என்று, உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசெம்பர் ஏழாம் திகதி தீர்ப்பளித்தால், ஒன்றில் தற்போதைய இழுபறி தொடரும்; அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
Average Rating