ஒவ்வொரு விநாடியும் முக்கியம்!( மருத்துவம் )
அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது Golden Hour என்ற வார்த்தையை மருத்துவர்கள் பயன்படுத்துவதை கேட்டிருப்போம். மிகவும் அதி முக்கியத்துவம் வாய்ந்த நேரம் என்பதால் ஒவ்வொரு மணித்துளியுமே கவனத்துக்குரியது என்று சொல்லப்படுகிறது. கோல்டன் ஹவர் எதனால் இத்தனை முக்கியமானது என்று அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் ஜெயராமனிடம் பேசினோம்…
Golden Hour-ன் முக்கியத்துவம் என்ன?
‘‘அதிர்ச்சிகரமான மாரடைப்பு அல்லது படுகாயம் காரணமாக ஒரு நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது சரியான சிகிச்சையை உடனடியாக அளித்து உயிர்காக்க வேண்டியது அவசியம். இதில் ஒவ்வொரு விநாடியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நோயாளியின் உயிரைக் காக்க உதவக் கூடியது. இதனையே Golden hour என்கிறோம்.
Golden Hour என்று சொல்லப்படும், முதல் ஒரு மணி நேரத்தில் அளிக்கப்படும் உறுதியான மருத்துவ பராமரிப்பு அதிர்ச்சியான அல்லது அவசரமான சூழ்நிலைகளுக்கு மட்டுமானதல்ல. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் நேரங்களில் இதயத்திசுக்கள் மற்றும் மூளைத்திசுக்கள் பாதிக்கப்படாமல் மீட்டெடுக்கப்படுவதிலும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்த அவசர மருத்துவ தலையீடானது, ஒரு நோயாளி உயிர் வாழ்வதில் மற்றும் செயல்படுவதில் எடுக்கக்கூடிய இறுதி முடிவில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. மருத்துவப் பராமரிப்பு எந்த அளவுக்கு வேகமாக தொடங்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அதன் மருத்துவ விளைவுகளும் இருக்கும் என்பதை நோயாளிகளும், அவரது குடும்பத்தாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.’’
ஒவ்வொரு நோய்க்கும் தகுந்தவாறு Golden hour காலம் மாறுபடுமா?
‘‘மாரடைப்பு வந்தால் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் மருத்துவமனை வந்துவிட்டால், இதயத்தின் தசைகள் பழுதடைவதை தடுக்கலாம். அதுவே ஒருவருக்கு பக்கவாதம் வந்தால், அரை மணி நேரத்திற்குள் கூட்டி வந்தால் பழுதடையக்கூடிய மூளைத்தசைகளை காப்பாற்றிவிடலாம்.
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை அதிகபட்சம் முதல் ஒரு மணிநேரத்திற்குள் வந்தால் எளிதில் காப்பாற்றிவிடலாம். 6 மணிநேரம், 12 மணிநேரம் கழித்து கொண்டு வந்தால், இதயத்தசைகள் பழுதடைய ஆரம்பித்துவிடும், அவற்றை காப்பாற்ற முடியாது. ஸ்ட்ரோக் வந்த நான்கரை மணி நேரத்திற்குள் வந்தால் மூளைக்குச் செல்லும் ரத்த அடைப்பை கரைப்பதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். நான்கரை மணிநேரத்திற்கு மேல் வந்தால் எதுவும் செய்ய முடியாது. முதல் 1 மணி நேரத்திற்குள் கொண்டுவருவது மிக சரியான செயல்.’’
விபத்து நோயாளிகளுக்கு எது சரியான நேரம்?
‘‘விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதல் 10 நிமிடங்களை பிளாட்டினம் நிமிடங்கள்(Platinum minutes) என்கிறோம். ஏனென்றால், ஒரு சில விபத்துகளில் உறுப்புகளில் அடிபடும்போது, ரத்தநாளங்களில் வெடிப்போ, உறைவோ ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கலாம். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் காப்பாற்றிவிடலாம். தலையில் அடிபடுபவர்களை 1 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு எடுத்து வந்தால் உயிரைக் காப்பாற்றப்படுவதோடு, (Mortality), அதன்பின்னர் ஏற்படும் கை, கால் செயலிழப்பு(Morbidity) போன்ற அபாயகரமான விளைவுகளையும் தவிர்த்துவிடலாம்.
சாலை விபத்தை சந்திக்கும் நோயாளிகளை சாதாரண வாகனங்களில் எடுத்துவரும்போது எலும்புகளில் பிறழ்வு ஏற்படலாம் என்பதால், விபத்து சிகிச்சைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் எடுத்துவருவது சிறந்தது. அதற்கடுத்ததாக, தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கக்கூடாது, கம்பளி, சாக்கு போன்றவற்றை சுற்றி அணைத்தபிறகு, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து வரவேண்டும்.
விஷம், பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றவர்களை 1 மணிநேரத்திற்குள் எடுத்துவந்து வயிற்றுக்குள் இருக்கும் விஷத்தை Stomach wash செய்து வெளியே எடுத்து விடுவோம். அப்படியில்லாமல் நீண்டநேரம் கழித்து எடுத்துவந்தால் விஷம் ரத்தத்தில் கலந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதோடு பக்கவிளைவுகளுக்கும் காரணமாகிவிடும்.
ஒரு விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு, முதல் உதவி பற்றி நன்றாக தெரிந்தவர்களை வைத்து முதல் உதவி கொடுத்து முயற்சிக்கலாம். அரைகுறையாக தெரிந்ததை வைத்து முதல் உதவி செய்வது ஆபத்தானது. எனவே, எந்தவிதமான அவசர சிகிச்சைக்கும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் முதலில் உயிர்பிழைக்க வைக்க முடியும் என்பதோடு, அந்த விபத்தால் அவர் செயலிழக்கும் நிலையிலிருந்தும் காப்பாற்ற முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.’’
Average Rating