Monsoon Fruits!!( மருத்துவம்)

Read Time:6 Minute, 36 Second

கோடை, பனி, காற்று போன்ற பருவக் காலங்களைவிட, மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாக குறைந்து விடும். ஏனென்றால், இந்தப் பருவத்தில்தான், நோய்களைப் பரப்பும் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற நுண்கிருமிகள் தண்ணீர் மற்றும் உணவுப்பண்டங்கள், கை, கால் விரல்கள் மூலமாக, உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக, மலேரியா, டெங்கு போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்பட இத்தகைய நுண்கிருமிகள் வழி வகுக்கின்றன. இது ஒருபுறமிருக்க, பலவிதமான நோய்களுக்கு முதன்மை காரணியாக திகழ்கிற மழைக்காலத்தில்தான், முறுக்கு, மிக்சர், பக்கோடா, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளை இதமான சுட்டில் நிதானமாக மென்று சாப்பிட வேண்டுமென்ற உணர்வும் மெல்லமெல்ல தலைக்காட்ட தொடங்கும்.

(என்னடா! இது, மாரிக்காலத்தில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவதைப் பற்றி சொல்லத் தொடங்கிவிட்டு, சுவையான ஸ்நாக்ஸ் வகைகள் பற்றி கூறி, பசியைத் தூண்டுகிறார்களே என எண்ணத் தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள்; உண்மை புலப்படும்) மழைக்காலம் பல வகையான நோய்தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடியது. அத்தகைய சூழலில், மழைப்பொழிவை ரசித்தவாறு, நாம் உண்கிற எண்ணெயில் நன்கு பொரிக்கப்பட்ட உணவுப்பண்டங்கள் எண்ணற்ற தொற்றுக்களை ஏற்படுத்துவதோடு, சோர்வு, உடல் பருமன், ஒவ்வாமை உட்பட காலரா, மலேரியா முதலான நோய்களையும் வரவழைத்துவிடும் தன்மை உடையன.

இது மாதிரியான ஆபத்தான தருணங்களில், உடல் இத்தகைய பிரச்னைகளை எதிர்த்துப் போராட, காய்கறி வகைகள் மற்றும் சிக்கன் சூப் சாப்பிடுவதோடு நின்றுவிடாமல், மருத்துவர்கள், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிற, மற்றொரு வகை உணவுப்பொருட்களையும், அன்றாட சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது இன்றியமையாததாக அமைகிறது… அவை பழங்கள்!

எப்படி பழங்களைப் பரிந்துரை செய்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறதா… அவைதான் எளிதாக உணவு செரிமானம் ஆக உதவி செய்கின்றன.இனி, மழைக்காலத்தில் நமது உடலின், நோய் எதிர்ப்பு தன்மையை(Immunity Power) அதிகரித்து, ஆரோக்கியமாக வாழ, துணையாக நின்றிடும் சில பழங்களையும், அவற்றின் சிறப்பு குணங்களையும் அறிந்து கொள்வோம்.

செர்ரி

மழைக்காலத்தில், ஏராளமாக கிடைக்கக்கூடிய இந்தப் பழம் மனித உடல்நலத்திற்குப் பல வகையிலும் பயன்படுகிறது. சுவை மிகுந்த இதில், கலோரி குறைவாகவும், ஆக்சிஜனேற்றி(Anti-Oxidants) போதுமான அளவிலும் காணப்படுகிறது. உடலில் தென்படுகிற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் இக்கனி, அதிக உயர் ரத்த அழுத்தம் மற்றும் யூரிக் அமில அளவை சரியான விகிதத்தில் இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறது.

ப்ளம்ஸ்

இந்தக் கனியில், நார்ச்சத்து, காப்பர், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் கே அதிகம் உள்ளன. புற்றுநோய் வருவதைத் தடுக்கும் சிவப்பு மற்றும் நீலம் கலந்த அந்தோசையானின்(Anthocyanins)என்ற நிறமியும் இதில் காணப்படுகிறது. இரும்புச்சத்தைக் கொண்டுள்ள இப்பழம் மலச்சிக்கல் மற்றும் ரத்தசோகையை குணப்படுத்த வல்லது.

நாவல் பழம்

வைட்டமின், பொட்டாசியம், ஃபோலேட்(Folate) மற்றும் இரும்பு என எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைத் தன்னிடத்தில் கொண்டுள்ள இந்தப் பழம், ‘பவர் அவுஸ்’ என மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட அனைத்து ஊட்ட சத்துக்களும் மழைக்காலத்தில் மிகவும் அத்தியாவசியத் தேவைகளாகச் செயல்படுகின்றன. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் முதலான உறுப்புகளுக்கு ஏற்றதாக திகழும் இப்பழம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, நீரிழிவு மற்றும் வாயு தொடர்பான பிரச்னைகளையும் சரி செய்ய வல்லது.

மாதுளை

நாவல் பழத்தைப்போன்றும், இக்கனியும் மாரிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்னைகள் என அனைத்தையும் இப்பழம் சரி செய்யக் கூடியது. இதில் காணப்படுகிற வைட்டமின் பி மற்றும் ஃபோலேட்(Folate) ரத்த சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.

ஆப்பிள்

ஆண்டு முழுவதும் உண்ணக்கூடிய பழவகைகளில் ஒன்றாக திகழும் ஆப்பிளில், வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் சி, பாஸ்பரஸ், அயோடின், கால்சியம், இரும்புச்சத்து முதலானவை ஏராளமாக உள்ளன. எனவே, எலும்பு, தோல், தசைப்பகுதி, நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு இப்பழம் பெரிதும் உறுதுணையாக திகழ்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்கே ? எப்போது ? நடந்தது தெரியுமா.? உலகின் கருப்பு வரலாறு ! யானையை தூக்கிலிட்ட கொடூரம் !(வீடியோ)
Next post நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் துபாய் பத்தின விஷயங்கள் !(வீடியோ)