வீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக் !!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 47 Second

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏராளம் உள்ளன. அதிலும், குறிப்பாக சிறிய முதலீடுகளில் வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களும் உள்ளன. அந்த வகையில், ஹோம் மேடு கேக் தயாரிப்பு இன்றைக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், இன்னொரு சிறப்பு அம்சம் இவை வீட்டில் தயாரிக்கப்படுவதால் இந்த கேக்குகளில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை. உடலுக்கும் எந்தவித கெடுதல்களும் ஏற்படுத்தாது. சென்னை நாவலூர் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா, ‘ஹோம்மேட் பேக்ஸ்’ என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே கேக்குகளை பேக் செய்து தருகிறார்.

‘‘ பிறந்தநாள், கல்யாணம் என அனைத்து விசேஷங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவது இயல்பாயிடுச்சு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவது கேக் தான். இதற்கு சீசன் என்பதெல்லாம் கிடையாது. ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். நான் எம்.பி.ஏ படித்ததால் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என ஆசை. சமையலில் ஆர்வம் அதிகம் என்பதால் வீட்டில் புதுப் புது உணவு வகைகளை செய்து பார்ப்பேன். மைக்ரோவேவ் இருந்ததால் கேக் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

கேக் மற்றும் பிஸ்கெட் பயிற்சி நிறுவனம் சென்று ஒரு வாரம் முறையாக கற்றுக்கொண்டேன். முதல்ல கேக் செய்து என் குழந்தையின் பிறந்தநாளுக்கு பக்கத்து வீட்டுக்கு கொடுத்தேன். அவங்க சாப்பிட்டு சுவை நன்றாக இருக்குன்னு சொன்னது இல்லாம அவங்க மகளின் பிறந்த நாளுக்கு ரசாயனம் இல்லாத உடலுக்கு கேடு விளைவிக்காத கேக் வேணும்ன்னு கேட்டாங்க. மைதா சாப்பிட சுவையா இருக்கும். ஆனா உடலுக்கு கேடு. குழந்தைக்கான கேக் என்பதால் ராகியில் டிரை செய்யலாம்ன்னு நினைச்சேன். முதல்ல எப்படி வரும்ன்னு யோசனையா இருந்தது. அதனால நான் முதலில் டிரையல் செய்து பார்த்தேன்.

நல்லா வந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு அது பிடிச்சது. பிறகு அந்த குழந்தையின் பிறந்த நாளில் செய்து கொடுத்தேன். அவங்களுக்கும் பிடிச்சு போக, தனது கணவரின் பிறந்தநாளுக்கும் அதே கேக் ஆர்டர் செய்தார். அந்த உந்துதல்தான் ஹோம்மேட் பேக்ஸ் உருவாக காரணம்’’ என்கிறார் அர்ச்சனா.‘‘நவதானிய கேக்குக்கும் நல்ல வரவேற்பு இருக்குன்ன புரிஞ்சது. இதையே முறையா தொழிலா செய்யலாம்ன்னு நினைச்சேன். ‘ஹோம்மேட் பேக்ஸ்’அப்படித்தான் உருவாச்சு. இந்த கேக்குக்கு அதிக செலவு செய்ய வேண்டியது இல்லை.

குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே குக்கரில் செய்யலாம். கேக் செய்வதற்கு மிக முக்கியமான விஷயம் அதன் அளவுகள். இதற்கான அளவுகள் கடைகளில் உள்ளது. அதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு கப் மற்றும் ஸ்பூன் கொண்டு தான் மூலப் பொருட்களை அளக்கணும். ஒரு தொழிலாக செய்ய வேண்டும் என்றால் முட்டை அடிக்கும் கரண்டி, ஓ.டி.ஜி அல்லது மைக்ரோவேவ், கேக் பேக் செய்ய அலுமினிய பாத்திரம் தேவை.

மூலப்பொருட்கள் என்று பார்த்தா, இவை எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயிலும், அதிகபட்சமாக பதினைந்தாயிரம் ரூபாயிலும் வாங்கிக்கொள்ளலாம்’’ என்றவர் தயாரிப்புமுறை பற்றி விளக்கினார்.‘‘நார்ச்சத்து அதிகமுள்ள சிறு தானிய கேக் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கும் சிறுதானியத்தை சாப்பிட வைப்பது கடினமான காரியம். அதுவே கேக், பிஸ்கெட் ஆக செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவாங்க. சர்க்கரை நோயாளிகளும் கட்டுப்பாடின்றி சாப்பிடலாம்

சிறுதானிய சாக்லெட் கேக்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1/2 கப்
கம்பு மாவு – 1/4 கப்
ராகி மாவு – 1/4 கப்
பொடித்த சர்க்கரை – 3/4 கப்
ஆப்ப சோடா (அ) பேக்கிங் சோடா – 3/4 டீஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
கோ கோ பவுடர் – 2 டீஸ்பூன்
வினிகர் (அ ) எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்
வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்.

செய்முறை

முதலி்ல் குக்கரில் உப்பு சேர்த்து அதன் மேல் ஏதேனும் பாத்திரம் வைக்கும் சிறிய ஸ்டாண்டு அல்லது பிரிமனை வைத்து அடுப்பை பற்ற வைத்து குறைந்த தீயில் வைத்து சூடு செய்யவும். குக்கருக்குள் பொருந்துமாறு ஒரு அலுமினிய பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவும். கேக் செய்வதற்கு உள்ள பொருட்களை அளந்து கொள்ளவும். ஜல்லடையில் அளந்து வைத்துள்ள கோதுமை மாவு, ராகி மாவு, கேழ்வரகு மாவு, கோ கோ பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த மாவுக் கலவையை சேர்த்து அதில் மூன்று பள்ளங்கள் செய்து கொள்ளவும்.ஒரு பள்ளத்தில் எண்ணெய் அடுத்த பள்ளத்தில் வெனிலா எசன்ஸ், கடைசி பள்ளத்தில் வினிகர் சேர்த்து, உடன் ஆப்ப சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரே திசையில் மாவை கட்டு முட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஸ்டாண்டு மேலே வைத்து குக்கரை தட்டால் மூடவும். 40 நிமிடம் கழித்து திறந்து எடுத்து ஆறவிட்டு சிறு துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.

குறிப்பு

கேக் வெந்துவிட்டதா என தெரிந்து கொள்ள டூத்பிக் அல்லது கத்தியால் குத்தி பார்த்தால் குச்சியில் மாவு ஒட்டாமல் வரவேண்டும். வேகவில்லை என்றால் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். நம் விருப்பத்துக்கு ஏற்ப அலங்கரிக்கலாம். கேக் தயாரிப்பில் கவனிக்க வேண்டியது சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் அளவு. இந்த பொருள்களை அளப்பதற்கான உபகரணங்கள் அவசியம் தேவை. அளவுகள் கூடினாலோ குறைந்தாலோ கேக் வீணாகிவிடும். கேக் தயாரிக்க விதவிதமான அச்சுகள் அரை கிலோ, ஒரு கிலோ என கேக்கின் அளவிற்கு ஏற்ப மார்க்கெட்டில் உள்ளது.

எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான மைதா மாவில் மட்டுமே செய்து தராமல், சத்தான சிறு தானியங்கள், நாட்டுச் சர்க்கரை, தரமான உலர் பழங்கள், வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய வெண்ணெய், நெய் உபயோகித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் புதுப்புது சுவைகளிலும் வித்தியாசமான டிசைனிலும் கேக் செய்து விற்றால் வெற்றி நிச்சயம். நீரிழிவு நோயாளிகளுக்கேற்ப சிறுதானிய கேக், முட்டை சேர்க்காத கேக் என கஸ்டமர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமாக செய்து கொடுத்தால் வீட்டில் செய்யும் கேக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம். ஒரு கிலோ கேக் தயார் செய்ய ரூ.150 – 200 மட்டுமே செலவாகும். இவற்றை ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்ய முடியும். ஒரு நாளைக்கு வீட்டு வேலைகளுக்கு இடையே சாதாரணமாக ஒரு நபர் 3-5 கிலோ வரை கேக் தயார் செய்யலாம். ஒரு கிலோவுக்கு தோராயமாக ரூ.200 லாபம் என வைத்துக்கொண்டாலும் ஒரு நாளில் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு மாதத்தில் ரூ.10,000 முதல் ரூ.15000 வரை கிடைக்கும். தற்போது இதற்கான பயிற்சிகள் ஒருசில இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுவோருக்கு நானே பயிற்சியும், வழிகாட்டுதல்களையும் செய்கிறேன்’’ என்றார் அர்ச்சனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை!!(கட்டுரை)
Next post TOP 5 IDIOT MILLIONAIRES | இந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க!!(வீடியோ)