சுருக்கம் போக்கும் சிகிச்சை!!!(மகளிர் பக்கம்)
உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நெற்றியில் உள்ள சுருக்கத்தை, கண்களை சுற்றி தோன்றும் கோடுகளை, கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள்.
இதெல்லாம் வயதாவதால் வருகிறது… நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று வருத்தத்துடனும் கடந்திருப்பீர்கள். இனி அதுபோல் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஒருவரின் முகத்தில் மிகவும் முக்கியமானது கண்கள். எத்தனைதான் ஒருவர் அழகாக இருந்தாலும் அவருடைய கண்கள் பொலிவாக இல்லையென்றால், முகம் களையிழந்துதான் காணப்படும்.இதுபோல் ஒருவர் முதுமையடைவதை முதலில் எடுத்துச் சொல்வது கண்களைச் சுற்றியுள்ள தோல் மற்றும் நெற்றியின் தோல் பகுதிகள்தான்.
இவ்விரண்டு பகுதியின் தோல் பராமரிப்பு ஒருவரின் முக அழகுக்கு மிகவும் அவசியம். இப்பகுதியில் இருக்கும் தோல் சுருங்குவதற்கு நம்முடைய மரபணுக்களே முக்கிய காரணம். இதுதவிர அடிக்கடி மாறும் முக பாவனைகள், கண்களுக்கு அடியில் உள்ள எலும்பின் தேய்மானம், தோலின் அடியில் உள்ள இணைப்பு திசுக்கள் சுருங்கி போவது, புவியீர்ப்பு விசை, உணவுப் பழக்க வழக்கங்கள், வெயிலினால் ஏற்படும் தோல் சேதம் மற்றும் புகைப்பழக்கமும் காரணங்களாகின்றன.
பொதுவாக நெற்றி மற்றும் கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் தோலானது, முகத்தின் மற்ற பகுதிகளை விட மெலிதாக இருக்கும். வயதாகும்போது நெற்றியிலும், கன்னங்களிலும் தடிமனாக மாறும். ஆனால், கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் மிகவும் மெலிந்துவிடும்.
அது மட்டுமில்லாமல் தோலின் அடியில் உள்ள திசுக்கள் சுருங்கி விடுவதால் அடியில் உள்ள எலும்பும், தசையும் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி பல முக்கிய தசைகள் உள்ளன. அதில் Orbicularis Oculi என்று அழைக்கப்படும் தசையானது கண்களை திறந்து மூட மிகவும் அவசியம்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு துவாரத்தைச் சுற்றியும் உள்ள தசைகள் எப்பொழுதுமே வட்ட வடிவமாகத்தான் இருக்கும். அப்பொழுதுதான் திறந்து மூட வசதியாக இருக்கும். அதேபோல் கண்களைச் சுற்றியுள்ள தசையும் வட்ட வடிவமாகத்தான் இருக்கும்.
சிலருக்கு கண்களின் பக்கவாட்டில் மிகவும் சுருக்கம் விழுந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் Crow’s feet என்று சொல்லப்படுகிறது. அதாவது அந்த கோடுகள் காகத்தின் கால்கள் போல் இருப்பதால் அந்தப் பெயர். Orbicularis oculi தசையை அடிக்கடி உபயோகிப்பவர்களுக்குத்தான் Crows feet சுருக்கம் உருவாகும்.
மேலும், அடிக்கடி புருவத்தை உயர்த்தி முக பாவனை செய்பவர்களுக்கு நெற்றியில் வரிசையாக கோடுகள் இருக்கும். இவர்கள் Frontalis என்னும் தசையை அதிகம் உபயோகப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
அதனால் Frontal lines உருவாகிவிடும்.ஒரு சிலர் புருவத்தை சுருக்கி சுருக்கி நெற்றியில் புருவங்களுக்கு இடையில் ஒரு கோடு உண்டாகும் அதை Glabellar Frown Lines என்றழைப்பர். இவர்கள் Procerus மற்றும் Corrugator, Supercilii ஆகிய தசைகளை அதிகம் உபயோகிப்பார்கள். இவர்களின் முகம் அழகாக இருந்தால் கூட அவர்கள் கோபக்காரர்கள் போல் காட்சியளிப்பார்கள்.
சரி… இந்த கோடுகளால் ஏற்படும் பிரச்னையை சமாளிப்பது எப்படி என்று கேட்டால் அதற்கான பதில் Botulinum Toxin மருந்து.பெயரிலே Toxin என்று வருகிறதே என்று பயப்படாதீர்கள். கத்தியை பிடிப்பவரை பொறுத்துதான் உபயோகம் மாறுபடும். உயிரைக் காக்கும் அறுவை
சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியை வைத்து கொலை செய்யவும் முடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல்தான் இது.
Clostridium Botulinum என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிப்பதுதான் இந்த Botulinum Toxin. இந்த பாக்டீரியா எல்லா இடங்களிலும் இருப்பவை. பொதுவாக மணலில் இருக்கும். இந்த Toxin- ஐ தயாரித்து மாறுகண் இருப்பவர்களுக்கு முதன் முதலில் ஊசியின் மூலம் செலுத்தி, சோதித்துப் பார்த்தார்கள்.
சில மாதங்களுக்குப்பின் அவர்களின் மாறுகண் பிரச்னை தீர்ந்து மிக சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சோதனை முயற்சியில் ஆச்சரியமாக சிலருக்கு கண்களை சுற்றிய சுருக்கங்களும் குறைந்ததை கவனித்த பின்புதான், சுருக்கங்களைப் போக்குவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஒரு தசை வேலை செய்ய நரம்புகளில் Acetylcholine என்ற பொருள் வேண்டும். இந்த Acetylcholine நரம்புகளிலிருந்து வெளியேறி நரம்பும் தசையும் சேருமிடத்தில் சேர்ந்தால்தான் தசை வேலை செய்ய முடியும். இந்த Botulinum toxin-ஐ ஊசியின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படியாக வேலை செய்யும் தசைகளில் செலுத்தும்போது, அந்த தசையின் வேலை சில மாதங்களுக்கு (4-6 மாதங்கள்) நிறுத்தப்படும்.
எனவே, இதை பயன்படுத்தி கண்களின் பக்கவாட்டில் உருவாகும் Crow’s feet, நெற்றியில் தோன்றும் Frontal lines அல்லது புருவங்களுக்கு நடுவில் தோன்றும் Glabellar frown lines ஆகியவைகளை சில மாதங்களிலேயே தேவையான அளவு குறைத்துவிடலாம். அந்தக் கோடுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டால் முகம் இயற்கையாக உள்ளதுபோல் இல்லாமல், இஸ்திரி பெட்டியால் தேய்த்த முகம் போல் Frozen Look-ல் இருக்கும். அதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால்தான் குறைத்து விடலாம் என்கிறேன்.
‘ஒரு முறை மட்டும் போட்டுக் கொண்டேன். பின்பு என்னால் அந்த இன்ஜெக்ஷனை போட்டு கொள்ள முடியவில்லை. அதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்படுமா, கோடுகள் அதிகம் உருவாகுமா’ என்று கேள்வி கேட்டால், ‘அப்படி இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு எப்போதும் என்ன ஏற்படுமோ, அந்த சுருக்கங்கள்தான் ஏற்படுமே தவிர இந்த இன்ஜெக்ஷனை போட்டு நிறுத்தியதால் கூடுதலாக சுருக்கங்கள் ஏற்பட்டு விடாது.
கண்களைச் சுற்றி இந்த சுருக்கங்கள் மட்டும் பிரச்சனை இல்லை. சிலருக்கு கண்களின் அருகில் தோலே கருப்பாக இருக்கும். அவர்களுக்கு என்ன
செய்யலாம்?
ஒழுங்கான தூக்கம், சரியான உணவு பழக்கம் மிக முக்கியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அலர்ஜியால் தும்மல் அடிக்கடி ஏற்படும் தன்மை உடையவர்கள், அரிப்பு ஏற்பட்டு கண்களை அடிக்கடி தேய்த்தால் கூட கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படும். அவர்களுக்கு அலர்ஜியை கட்டுப்படுத்தினாலே இந்த கருமை குறையும். சிலருக்கு Kojic acid அல்லது Arbutin போன்ற க்ரீம்களை உபயோகப்படுத்தி ஓரளவு கருவளையத்தை குறைக்கலாம். ஒரு சிலருக்கு கரு வளையம் போகவே போகாது. காரணம் அவர்களுக்கு பரம்பரைத்தன்மையால்
வருவதாக இருக்கலாம்.
ஒரு சிலருக்கு முக அமைப்பில் கண்கள் உள்ளடங்கி காணப்பட்டால் புருவத்தில் உள்ள எலும்பின் நிழல் கண் இமை மீது பட்டு கருப்பாக தெரியும். அவர்களை நன்றாக கவனித்துப் பார்த்து முகத்தை கொஞ்சம் தூக்கி காண்பிக்கச் சொன்னால் அந்த கருப்பு மறைந்துவிடும். அந்த நிழலால் உண்டாகும் கருப்புக்கு எந்த வைத்தியமும் உதவாது.
மாற்றாக, Glycolic acid, Arginine போன்ற பொருட்களை உபயோகித்து Chemical Peel பண்ணலாம். Micro needling என்று ஒரு சிகிச்சை முறை உள்ளது. அதை செய்யும்போது சுருக்கங்கள் சற்று குறையும். தோலும் கொஞ்சம் பொலிவு பெறும். ரசாயனங்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களை கண்ணிமை மீது உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் மேக்கப்பை நன்றாக கழுவி விட வேண்டும். மாய்சரைசர்களை கண் இமை மேல் உபயோகிக்க வேண்டும். செல்போன்களை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடிப்பதால் கண்களைச் சுற்றியுள்ள தோலை பேணிக் காக்கலாம். கண்களைச்சுற்றி மற்றும் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்து விரைவில் வயதான தோற்றம் உருவாவதிலிருந்து தப்பிக்கலாம்.
Average Rating