வியர்வையில் குளிக்கிறீர்களா?(மகளிர் பக்கம்)
சமகால மக்களுக்கு ஆயுர்வேத குளியல் முறை சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.ஆனால் இயற்கை குளியலை மிக எளிமையாக நாம் தயார்படுத்தி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “உடல் செயல் இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை தணிக்க தினமும் அதிகாலையில் குளிப்பது நல்லது. நாம் அன்றாட குளியலை உடலில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கு மட்டும் இல்லாமல், வெயில் காலங்களில் ஏற்படும், வியர்வை மற்றும் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்திலிருந்தும் விடுபடும் வகையில் மூலிகை குளியல் செய்வது நல்ல பலன் தரும். ஆயுர்வேத முறையில் கொடுக்கப்பட்டுள்ள சில எளிய மூலிகை குளியல் பற்றி பார்ப்போம்.
மண் குளியல், சூரிய குளியல், மழைநீர் குளியல், சாம்பல் குளியல் போன்றவை மூலிகை குளியலாக கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த குளியல் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையாக இருக்கிறது. வெயில் காலங்களில் உடலில் வியர்வை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூலிகை குளியலை நாம் கடைபிடிக்கலாம். வியர்வையைப் போக்கும் மூலிகைக் குளியல். வாகைப்பூ அல்லது அதனுடைய இலை, திருநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை, மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியபிறகு குளிக்கலாம். இந்த குளியல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.
லவங்கப் பட்டை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தன மேல் பட்டை ஆகிய நான்கையும் ஒன்றாக இடித்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பிறகு குளிக்கலாம். இது வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். பன்னீர் ரோஜா இதழ்களை பூக்கள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய் கலந்து சூரிய ஒளியில் சில நாட்கள் வைக்க வேண்டும். ரோஜாப் பூ இதழ்கள் சருகு போல் ஆனவுடன் எண்ணெயை வடிகட்டி தேய்த்து குளித்து வர அதிக வியர்வை, வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் தீரும். கற்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், பன்னீர் ரோஜா கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் உடலில் உள்ள மாசுக்கள் நீங்கி உடல் சுறுசுறுப்பு அடையும். வேப்பிலை, வேப்பம் பட்டை போன்றவையும் குளியலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாசிப்பயறு, ரோஜா, ஆவாராம் பூ, வெட்டி வேர் போன்றவற்றை நன்றாக அரைத்து தேய்த்து குளிக்கலாம். சளித் தொல்லை, சைனஸ் உள்ளவர்கள் மேற்கண்ட மூலிகைக் குளியலை இப்படி செய்ய வேண்டும்-இளஞ்சூடாக மூலிகை நீரை எடுத்து துணியால் தொட்டு உடலை துடைத்துக்கொள்ளலாம், இதன் மூலம் வியர்வையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். காய்ச்சல், வயிற்று போக்கு உள்ளவர்கள் மேற்கண்ட குளியலை மேற்கொள்ள கூடாது. இயற்கை குளியல் மேற்கொள்கிறவர்கள் சில உணவு முறைகளை தவிர்ப்பது நல்லது. மாமிச உணவு, அதிக காரம், அதிக உப்பு, நார்ச்சத்து இல்லாத மலச் சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவேண்டும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.
Average Rating