தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!!(மகளிர் பக்கம்)
கடந்த அக்டோபர் 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரியும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராத கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடியை நடத்தி கலைத்தது காவல் துறை. இதில் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி சத்தியாவிடம் பேசினேன்.
“கடந்த ஆண்டுகளில் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அத்தனை கல்லூரிகளிலும் ஆங்கிலத்தில் சான்றிதழ் வழங்கினாலும், அனைத்து தேர்வுகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. இந்த ஆண்டு முதல் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆங்கிலத்தில் மட்டும்தான் அனைவரும் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு அதில் பிரச்சனை இருக்காது. ஆனால் ஏற்கனவே கல்லூரியில் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வை எதிர் கொள்வது என்பது மிக கடினமாக இருக்கும்.
இதனால் சில மாணவர்கள் தனது படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மாணவர்கள் ஒன்று கூடி பல்கலைக்கழகத் துணைவேந்தரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார் துணைவேந்தர்.அதற்கு பிறகு மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அத்தனை கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 12ம் நாள் காலையில் 300 மாணவர்கள் ஒன்று கூடி துணைவேந்தரை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் துணைவேந்தர் இல்லாத காரணத்தால் கல்லூரிப் பதிவாளரைச் சந்தித்துப் பேசினோம். அவர் எங்களுக்கு 15 நாள் கால அவகாசம் கொடுங்கள், சிண்டிகேட் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவு சொல்கிறோம் என்றார்.
15 நாள் தற்காலிகமாக எங்களுடைய போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த 15 நாளில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் இருந்ததை, இந்த ஆண்டு ஒரு பாடத்திற்கு 500 ரூபாய் என்று உயர்த்தியுள்ளனர். இந்த அறிவிப்பு இந்த ஆண்டு நடக்கும் தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்றும், தமிழில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்கிற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த அக்டோபர் 9ம் நாள் பல்கலைக்கழகத்தின் வாசலில் அமைதியான போராட்டத்தை நடத்தி வந்தோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டர்.
இன்னும் சில மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நிலையில், அவர்களைக் காவல் துறையினர் வழியிலேயே மறித்து கைது செய்துள்ளனர். காலை 8 மணியளவில் போராட்டம் தொடங்கியது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்தார்கள். ஆனால் தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கவே முடியாது என்று துணைவேந்தர் காட்டமாகத் தெரிவித்துவிட்டார். நாங்கள் பேசிவிட்டு வெளியே வந்த அடுத்த நொடியே காவல் துறையினர் தடியடி நடத்தினர். பெண்கள் என்றும் கூட பாராமல் சரமாரியாக தாக்கினர். பெண் காவலர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள். ஆண் காவலர்கள்தான் பெண்களையும் அடித்து விரட்டினர். இதில் பல மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் முடிந்தும் எங்களுடைய போராட்டம் அந்தந்த கல்லூரிகளில் உள்ளிருப்புப் போராட்டமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. போராட்டத்தின் போது மாணவர் கள் மீது பொய் வழக்குகளும் போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள எங்களுடைய இரண்டு கோரிக்கைகளோடு சேர்த்து, காவல் துறையினர் மாணவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்” என முடித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில்…“சுமார் 89 கல்லூரிகள் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. இதில் சுமார் 2 லட்சத்திற்கு மேலான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இத்தனை ஆண்டு காலமாக தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் தமிழ் மொழியிலே தேர்வு எழுதி வந்துள்ளனர்.
இந்த ஆண்டு திடீரென பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஆங்கிலத்தில்தான் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்து வகுப்பு புறக்கணிப்பு, கருப்பு பேட்ஜ் அணிவது, மனு அளிப்பது என இரண்டு மாத காலமாக எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தோம். இதற்கு இடையில் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்திக்கச் சென்று இயலாத நிலையில் கல்லூரிப் பதிவாளரிடம் மனு அளித்தோம். அவர் எல்லா கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதை நான் முடிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அன்று மாலையே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. பிரச்னை பற்றி எனக்கு தெரியாது. ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறோம். அதில் முடிவு எடுப்போம் என்று கூறிவிட்டார். ஆனால் இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அக்டோபர் 9ம் நாள் ஆயிரம் மாணவர் கள் ஒன்றுகூடி தங்கள் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி பல்கலைக்கழக நுழைவாயிலில் போராட்டம் செய்தனர். போராட்டம் தொடங்கிய காலை முதலே காவல் துறையும் பல்கலைக்கழக அதிகாரிகளும் போராட்டத்தை கலைப்பதற்கான வேலையைத் துவங்கிவிட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தர வரும் மாணவர்களை பாதியிலே நிற்க வைத்து திருப்பி அனுப்பிவிட்டனர். பல மாணவர்களின் வாகனங்களை மறித்து பேருந்திலேயே சிறை வைத்தனர். 80 மாணவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர் உங்களோடு பேச விரும்புகிறார் என்று கூறி என்னை ஆட்சியர் அலுவலகம் அழைத்துச்சென்று 2 மணி நேரம் காக்க வைத்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் சரியான பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை.
மீண்டும் துணைவேந்தர் உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார் என்று அழைத்துச்சென்றனர். அவருடைய அறைக்கு சென்ற போது, அறை முழுதும் சாமியார் மடம் போல் காட்சி அளித்தது. நாற்காலியில் இருக்கும் உறையில் இருந்து, திரைச்சீலை வரை இந்து மத வாசகங்கள் நிறைந்து காணப்பட்டது. இதிலிருந்தே அவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவரிடமும் தமிழ்மொழியில் தேர்வு எழுத அனுமதி கேட்ட போது மறுத்து விட்டார். ஏன் என்று கேள்வி எழுப்பிய போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் எழுதுவது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறிவிட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதி வருகிறார்கள். சட்டக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு மதிப்பெண் வழங்கியுள்ளீர்கள். கடந்த3 ஆண்டுகளாகவே துணைவேந்தராக இருக்கும் உங்களுக்கு இது தவறு என்பது தெரியவில்லையா என மாணவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதுவரை நடந்தது இனிமேல் நடக்காது என்றார். இந்த அறிவிப்பு வந்ததும் 10 மாணவர்கள் கல்லூரியில் இருந்து நின்று விட்டனர். வரப்போகிற தேர்வுகளில் பல மாணவர்கள் தோல்வி அடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழிலேயே தேர்வு எழுதக்கூடிய துறைகளை இவர்கள் துவங்கி இருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. 50 சதவீதமும் ஆங்கில வழியிலேயே தேர்வு எழுதுவது போன்ற துறையை வைத்துள்ளனர். தமிழில் எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகம் இருக்கிறார்கள்.
அவர்கள் தமிழிலேயே எங்களுக்கு சான்றிதழ்கள் கொடுங்கள் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். புஷ்கரம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவர்னரை சந்தித்து மனு அளித்த போது அவர் தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என்று முன்னாள் துணைவேந்தராக இருந்த வசந்தி தேவி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் என்று தமிழின் மீது பற்றுள்ள பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும். அரசியல் கட்சி தலைவர்களை முன்நிறுத்தி மாபெரும் பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்று எச்சரிக்கிறார் மாரியப்பன்.
Average Rating