காய்ச்சலா பதற வேண்டாம்!!(மகளிர் பக்கம்)
இந்த ஆண்டு சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் மழை இல்லை என்றாலும், வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது. கால நிலை மாற்றத்தால் நோய்த் தொற்று அபாயமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் குழந்தைகள் உட்பட பலரும் கொடிய காய்ச்சலால் இறந்துள்ளனர். வரும் முன் காப்போம் என்கிற அடிப்படையில் அரசு தன் பணியை செய்தாலும், செய்யாவிட்டாலும் நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளை நோய்த்தொற்றுகளில் இருந்து எப்படி பாதுகாப்பது, கொடிய காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் சுகன்யா.
“இயற்கையாவே பருவநிலை மாற்றம் ஏற்படும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இந்த நேரத்தில் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தக்க வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
* தண்ணீரில் சீரகம் சேர்த்து காய்ச்சி குடிக்கணும்.
* கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளணும்.
* நாம் வசிக்கும் இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளணும்.
நாம் இருக்கும் பகுதியில் பன்றிக் காய்ச்சல் அல்லது டெங்கு பரவி வருகிறது என்றால் முன்னெச்சரிக்கையாக சில நட வடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
* கிராம்பு, ஏலக்காயை பொடித்து சுத்தமான பருத்தி துணியில் மூட்டை போல கட்டி முகர வேண்டும்.
* துளசி, கற்பூரவல்லி அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிடலாம்.
* தினமும் வாரத்தில் இரண்டு முறை வயதுக்கு ஏற்ப நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* காய்ச்சல் இருக்கிறது என்றால் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஆடாதோடா மற்றும் பப்பாளி இலை சாறு குடிக்கலாம். ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (platelets) அதிகரிக்கும்.
* ஆடாதோடா குடிநீர் சூரணம், கபசுரக்குடிநீர் சித்தா அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக கிடைக்கிறது. இதனை வாங்கி வைத்துக் கொள்ளலாம். நோய் காலங்களில் பாதுகாப்பு கவசமாக உதவும்.
பன்றிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்சா வைரசால் உருவாகும் நோய். இது பன்றிகளை தாக்கும் வைரஸ். குளிர் நடுக்கம், காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, கடும் தலை வலி, உடல் சோர்வு, அசதி, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். இந்த நோய் மூன்று நிலையில் பாதிப்பு ஏற்படுத்தும். முதல் நிலையை பொறுத்தவரை மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு . போன்ற அறிகுறி தென்படும். இரண்டாம் நிலையில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி கடுமையாக இருக்கும். கடைசி நிலையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையின் அறிகுறியுடன் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலை சுற்றல், மயக்கம், மந்த நிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். நோயின் தாக்கத்தை (Throat swab) அதாவது தொண்டையில் உள்ள சளியை சோதிப்பதன் மூலம் வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.
பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு மருந்துகள் கிடையாது. பன்றிக்காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளது. அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். இனி வருவது மழைக்காலம். இந்த காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொசுக்கடியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டாலே மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். கொசுக்களை விரட்ட மழைக்காலங்களில் அதிகமான ரசாயனங்கள் கலந்த கொசுவர்த்தி, திரவங்கள் பயன்படுத்துவதன் மூலம் சுவாசக்கோளாறு, குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட சில வழிமுறைகள் உள்ளன. வீட்டை சுற்றி இருக்கும் காலி இடங்களில் நொச்சி இலை செடிகளை வளர்க்கலாம். அப்பார்ட்மென்ட் வாசிகள் என்றால், பால்கனியில் சின்ன தொட்டிகளில் வளர்க்கலாம். இரவு நேரங்களில் காய்ந்த நொச்சி மற்றும் மா இலைகளை தீ மூட்டி சாம்பிராணி புகை போடுவது போல போடலாம். கற்பூராதி தைலத்துடன் துளசி சாறு சேர்த்து கை, கால்களில் பூசிக்கொள்ளலாம்” என்று ஆலோசனை அளித்தார் சித்த மருத்துவர் சுகன்யா.
Average Rating