ஆப்பிள் சிடர் வினிகர்!!(மருத்துவம்)
சாதாரணமாக ஊறுகாய், ஜாம் போன்ற நீண்ட நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கும் உணவுப்பொருட்களில் அவை கெடாமல் இருப்பதற்காக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், கூந்தல் முதல் பாதம் வரை அழகுச்சிகிச்சைக்காக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இப்போது எடை குறைப்பிலிருந்து சளி பிரச்னை வரை அப்படியே சாப்பிடக்கூடிய மருந்தாக ஆப்பிள் சிடர் வினிகர் பிரபலமடைந்துள்ளது. ஆப்பிள் சிடர் வினிகரை இதுபோல் நேரடியாகப் பயன்படுத்தலாமா என்று உணவியல் நிபுணர் கோவர்த்தினியிடம் பேசினோம்…
‘‘Apple Cider Vinegar(ACV) தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான கேப்ரியல் நீல், ஆப்பிள்சிடர் வினிகர் மருத்துவரீதியாக பயன்படுத்தலாம் என தன் ஆராய்ச்சியின் வாயிலாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். பண்டைய கிரேக்கர்கள் ஆப்பிள் சிடர் வினிகரை சளிக்கு மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்’’ என்கிற கோவர்த்தினி, ACV-யின் பலன்கள் பற்றி தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘ஆப்பிளின் சாற்றிலிருந்து எடுக்கப்படுவது ஆப்பிள் சிடர் வினிகர். இதிலிருக்கும் புளிப்புச்சுவை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. ஆப்பிள்சிடர் வினிகரில் இருக்கும் Pectin என்னும் ஒருவகை நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துடன் Probiotics மற்றும் ஆரோக்கியமான என்ஸைம்களும் நிறைந்திருக்கின்றன.
இதனால் ஆப்பிள் சிடர் வினிகரை சமையல் மற்றும் அழகு சாதனப்பொருட்களில் தாராளமாக பயன்படுத்தலாம். இதில் நல்ல பாக்டீரியா இருப்பதால் குடலை சுத்தம் செய்வதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது. வாய் துர் நாற்றத்தை போக்கும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன் மிதமான சுடுநீரில் ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் போய்விடும். சிலருக்கு நீண்ட நேரம் விக்கல் நீடித்து இருக்கும். இவர்கள் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீரை குடித்தால் விக்கல் உடனடியாக நின்றுவிடும்.
ஆப்பிள் சிடர் வினிகர் தொண்டையில் ஏற்படும் எரிச்சல், கரகரப்பு போன்ற பிரச்னைகளையும் சரி செய்யக்கூடியது. இரவில் சிலருக்கு காலில் Cramps என்று சொல்லக்கூடிய தசைபிடிப்பு ஏற்படும். இது பொட்டாசியம் சத்து குறைவால் வரக்கூடியது. பொட்டாசியம் நிறைந்துள்ள ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்துக் கொள்வதால் இந்தப் பிரச்னை சரியாகும்.
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப்பிடிப்பு இருக்கும்போது, இதை அருந்துவதால் குணமடையலாம். பசியை கட்டுப்படுத்தும் தன்மை ஆப்பிள்சிடர் வினிகருக்கு இருப்பதால் அதிகளவு உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பயன்படுத்தலாம்.
நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ACV- ல் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மழைக்காலத்தில் ஏற்படும் தும்மல், சளி, மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்னை போன்றவற்றுக்கு பயன்படுகிறது. சிலருக்கு உணவு உண்ட பின் வயிற்றில் அமிலம் குறைவாக சுரப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதை Acid Reflux என்பார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் ACV கலந்து பருகி வருவதால் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். சுவாசப் புத்துணர்வை அளிக்கக்கூடியது.
மலச்சிக்கலைப் போக்க வல்லது. உணவில் இருக்கும் ஊட்டச்சத்தை உறியும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆப்பிள் சிடர் வினிகரை குடிப்பதால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். பற்களில் படியும் கரையைப் போக்கி பற்கள் பளிச்சிட வைக்கிறது. உடலில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை போக்குகிறது.
கால்கள் மற்றும் தொடை, அக்குள் இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று நோய்களுக்கு எதிராக ஆப்பிள் சிடர் வினிகர் செயல்படுகிறது. வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் ACV-யை நரம்பு சுருண்டுள்ள பகுதிகளில் தடவி வருவதால், நோயின் தீவிரத்தன்மையை குறைக்க முடிவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.’’
அழகுப் பராமரிப்புக்கும் உதவுமா?
‘‘முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கும். ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீரில் சிறிது நேரம் கை, கால்களை ஊறவைத்து அலம்பினால் நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் போய்விடும்.முகத்தில் ஏற்படும் கருமை, கரும்புள்ளிகளைப் போக்க ACV-ஐப் பயன்படுத்தலாம். இதன்மூலம் முகம் பளபளப்பாகும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. வெளியில் செல்லும்போது வெயில் பட்டு, தோலில் ஏற்படும் எரிச்சலை போக்க அந்த இடங்களில் ACV-ஐ தடவினால் போதும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சிறிது ACV-ஐ தடவினால், மஞ்சள் கறை நீங்கி நகங்கள் பளிச்சென மாறும்.
ஃபேஷியல் க்ரீமுடன் சிறிதளவு ACV சேர்த்து முகத்தில் தடவலாம். முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால், முகப்பருக்கள் குணமாவதுடன், முகப்பருக்களினால் ஏற்படும் தழும்புகளும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.’’ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்த விரும்புகிறவர்களுக்கு…
‘‘ஆப்பிள் சிடர் வினிகர் உள்பட மருத்துவரீதியான எல்லா பயன்பாட்டுக்குமே தகுதி வாய்ந்த நிபுணரின் ஆலோசனை நிச்சயம் தேவை.
தாங்களாகவே எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. வெறும் வயிற்றில் குடிப்பதோ, அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்துவதோ தவறு. வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது. நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அருந்த வேண்டும். அதிகமாக குடிப்பதால் குடல் எரிச்சல் ஏற்படும்.’’
ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில், ACV தொடர்ந்து உபயோகிக்கும்போது LDL எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து HDL என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதாக சொல்லப்படுகிறது. மேலும் ACV உயர் ரத்த அழுத்த அளவை குறைப்பதாகவும், விலங்குகளிடத்தில் மேற்கொண்ட ஆய்வு உறுதி செய்கிறது.
உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் ACV எடுத்துக் கொள்வதால், 31 சதவீதம் ரத்த சர்க்கரை அளவு குறைவதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோய்க்கான ஒரு ஆய்வில், ஆப்பிள் சிடர் வினிகர் உட்கொள்வதால், 34 சதவீதம் வரை இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் உணர்திறனை டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடத்தில் மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
Average Rating