பாலிவுட் டயட்!!(மருத்துவம்)
இந்தியாவின் மிகப்பெரும் அந்தஸ்து கொண்ட பாலிவுட் சினிமாவில் ரசிப்பதற்கும், வியப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரே திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் இணைந்து நடிப்பார்கள்.
ஒரே பாடலின் ஃப்ரேமில் கூட்டத்தோடு கூட்டமாக ஆடிக் கொண்டிருப்பார்கள். மெகா பட்ஜெட், 100 க்ரோர் க்ளப் கலெக்ஷன் என்று ஆச்சரியப்படுத்தும் எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் உண்டு. அதில், மற்றோர் குறிப்பிடத்தக்க அம்சம் அவர்களின் ஃபிட்னஸ்.
சைஸ் ஜீரோ என்பதற்கு உதாரணமாக பாலிவுட் ஹீரோயின்களும், சிக்ஸ் பேக் உடலுக்கு உதாரணமாக பாலிவுட் ஹீரோக்களும் எப்போதும் தங்களின் உடற்கட்டை பராமரித்து வருகிறார்கள். எப்படி இது அவர்களுக்கு சாத்தியமாகிறது? என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்? என்ன மாதிரியான உணவுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பது குறித்த தேடலால் தொகுத்த தகவல்கள் இவை.
கரீனா கபூர்
‘குழந்தைப்பேறுக்குப்பின் பெண்களுக்கு ஆற்றல் குறைவு: அவர்களால் உடற்பயிற்சியெல்லாம் செய்யவே முடியாது’ என்ற கற்பிதங்களையெல்லாம் உடைத்தெறிந்து, பிரசவித்த சிறிது நாட்களிலேயே உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார் கரீனா. அது மட்டுமா? தன்னுடைய பிரத்யேக டயட்டீஷியன் அறிவுரைப்படி கடுமையான உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றி கிட்டத்தட்ட12 கிலோ எடையை குறைத்து முன்பையும்விட சிக்கென்று வலம் வரும் கரீனாவின் டயட் பட்டியலை கேட்டால் சட்டென்று மயக்கம் வந்துவிடும்.
காலை உணவு : 1 கப் முசிலி (Muesli), சீஸ், 2 பிரட் துண்டுகள், பால் அல்லது சோயா பால்
மதிய உணவு : சப்பாத்தி, தால், நிறைய காய்கறி சாலட் அல்லது காய்கறி சூப்.
இடையில் புரோட்டீன் மில்க் ஷேக் மற்றும் பழத்துண்டுகள்.
இரவு உணவு : சப்பாத்தி, தால், காய்கறி சூப்.
கரீனாவின் மூன்று வேளைக்கான உணவு இவ்வளவே. இப்போது தெரிகிறதா? 2 வயது குழந்தையின் தாயாக இருந்தும் கரீனா இவ்வளவு சீக்கிரம் உடலை குறைத்தார் என்று?!
அக்ஷய்குமார்
இவரைப் பார்த்தால் 51 வயது என்று யாராவது சொல்ல முடியுமா?!
இந்த வயதிலும் வலுவான உடலமைப்போடு இருக்கும் அக்ஷய்குமார் ஒழுக்கமான வாழ்வியல் முறைகளை கடைபிடிப்பவர் என்பதை அவருடைய டயட் அட்டவணையைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இள வயதிலேயே சீனாவின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு, அதை இன்றளவும் செய்து வருபவர்.
சூரியன் மறைந்தபின் எதையும் சாப்பிடக்கூடாது என்பது இவரின் பிரதான கட்டுப்பாடு. வெளியில் சாப்பிடுவதை கூடியவரை தவிர்த்துவிடுகிறார்.
காலை உணவு : 2 பராத்தா மற்றும் 1 கிளாஸ் பால்.
காலை சிற்றுண்டி (11 am) : ஒரு கப் பழங்கள்.
மதிய உணவு : ரொட்டி, பருப்பு, பச்சை காய்கறிகள், சிக்கன் மற்றும் ஒரு கப் தயிர்.
மாலை சிற்றுண்டி (3 pm) : 1 கிளாஸ் சர்க்கரை இல்லாத பழச்சாறு.
இரவு உணவு : 6 மணிக்கு முன்: சூப், சாலட் மற்றும் பச்சைக் காய்கறிகள்.
தீபிகா படுகோனே
சவாலான ரோல்களை சட்டென்று ஒப்புக் கொள்ளும் தீபிகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தன்னை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க கடுமையான உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சிகள் செய்வதையும் கடைபிடிக்கிறார். ஃப்ரஷ்ஷான, ஆரோக்கியமான உணவுகளையே உண்ண விரும்பும் தீபிகா, எண்ணெய் உணவுகளுக்கும், ஜங்க் ஃபுட்டிற்கும் ஸ்ட்ரிக்டா ‘நோ’ சொல்லிவிடுவார்.
காலை உணவு : 2 முட்டை, கொழுப்பில்லாத பால் அல்லது உப்புமா, இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகள்.
மதிய உணவு : 2 சப்பாத்தி, க்ரில்டு ஃபிஷ் மற்றும் காய்கறி வகைகள்.
மாலை ஸ்நாக்ஸ் : நட்ஸ் வகைகளுடன் ஃபில்டர் காபி.
இரவு உணவு : சப்பாத்தி, காய்கறி, கீரை வகைகள் மற்றும் பழ சாலட்டுகள்.
அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவதையும், இளநீர் அருந்துவதையும் தவிர்ப்பதில்லை. இரவு நேரங்களில் அசைவ உணவை மறுத்துவிடுவார். டார்க் சாக்லெட் என்றால் தீபிகாவிற்கு
கொள்ளைப் பிரியம்.
சல்மான்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கானை அவரது ரசிகர்கள் Bhaijaan of Bollywood என்பார்கள். இந்திய சினிமா உலகின் சுல்தான் என்று சொல்லப்படும் சல்மான் 52 வயதிலும், செதுக்கிய உடலமைப்பை தன் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஒரே மாதிரி பராமரித்து வருகிறார். ஒரு படத்துக்காக தன் உடலை மாற்றிக் கொள்ளும் விஷயம் இவரது அகராதியில் கிடையாது.
கடுமையான உடற்பயிற்சிகளோடு, டயட் பிளானும் ஒரு காரணமாகிறது. இவரது உணவு அட்டவணையில், புரதம் நிறைந்த உணவுகள் பிரதானமாக இடம் பிடித்துவிடும். பாக்கெட்டில் அடைத்த எண்ணெய் உணவுகளையும், இனிப்புகளையும் அறவே தவிர்த்து விடுகிறார். இடையிடையில் ஸ்நாக்ஸாக புரோட்டீன் பார்ஸ் மற்றும் நட்ஸ்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார். ஒருபோதும் எண்ணெய் உணவுகளை உண்பதில்லை.
காலை உணவு : முட்டையின் வெள்ளைக்கரு – 4 மற்றும் கொழுப்பு நீக்கிய பால்.
உடற்பயிற்சிக்கு முன் : பாதாம், ஓட்ஸ், முட்டையின்
வெள்ளைக்கரு- 3 மற்றும் புரோட்டீன் பார்.
மதிய உணவு : காய்கறி சாலட்டுடன் 5 சப்பாத்திகள்.
சிற்றுண்டி : புரோட்டீன் பார், பாதாம் பருப்புகள்.
இரவு உணவு : வீகன் சூப், மீன் அல்லது சிக்கன்,
2 – முட்டையின் வெள்ளைக்கரு.
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா என்னதான் தன்னை ‘ஃபிட்’டாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தாலும், ஜிம்மில் உடற்பயிற்சியின்போது, தன்னை வருத்திக் கொள்வதையோ, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதையோ விரும்புவதில்லை.
தனக்கு மிகவும் பிடித்த பீட்சா, பர்கர், சான்ட்விச்களை சாப்பிடும் படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிடுகிறார்.
இதையெல்லாம் தாண்டி பிரியங்காவின் மெல்லிய உடலுக்கு அவர் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் உணவுத்திட்டமே காரணம். ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியிலும் இளநீருடன், நட்ஸ் வகைகளையும் எடுத்துக் கொள்வதால் படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாகவும், மிகுந்த ஆற்றலோடும் இருக்கிறார்.
பிரியங்காவிற்கு மிகவும் பிடித்த தந்தூரி உணவுகள், சாக்லேட், கேக் போன்றவை வார இறுதி நாட்களில் இடம் பிடிப்பவை. அதே நேரத்தில், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழங்களும் பிரியங்காவிற்கு விருப்பமானவை.
காலை உணவு : 2 முட்டை அல்லது
ஓட்ஸுடன் ஒரு கப் கொழுப்பு நீக்கிய பால்.
மதிய உணவு : 2 சப்பாத்தி, பருப்பு, சாலட் மற்றும் காய்கறிகள்.
இரவு உணவு: ஏதேனும் ஒரு சூப் மற்றும் கிரில்டு சிக்கன் அல்லது மீன்.
ஷாருக்கான்
பாலிவுட்டின் ‘பாதுஷா’ ஷாரூக்கான், தன் உடலை பேணிக்காப்பதில் அதீத அக்கறை காட்டுவதால்தான் 53 வயதிலும் இளமையாக இருக்கிறார். குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக பின்பற்றுகிறார்.
உணவின் பெரும்பகுதி கொழுப்பு நீக்கிய பால், தோல் நீக்கிய சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்புகள் மற்றும் மிதமான இறைச்சி துண்டுகள் என புரோட்டீன் நிறைந்த உணவுகளாக இருக்கும்.
கொழுப்பை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக கிரில் செய்த மீன், சிக்கன் போன்றவற்றையும், வெண்ணெய் சேர்க்காத உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார். உடற்பயிற்சிக்குப்பின் புரோட்டீன் பானங்கள் குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
ரீஃபைண்ட் செய்த மாவு வகைகள், பிரெட்டுகள் அல்லது அரிசி உணவை கண்டிப்பாக மறுத்துவிடுவார். அதேபோல் இனிப்புகளுக்கும் ‘தடா’ தான். சில நேரங்களில் முழு கோதுமை உணவோடு முட்டை மற்றும் சிக்கன் சாண்ட்விச்சும் இடம் பெறும்.காய்கறிகள் நிறைந்த உணவை கார்போஹைட்ரேட்டுக்கு மாற்றாக உபயோகிக்கிறார்.
அதே காய்கறிகள் தான் இவரது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்களையும் கொடுக்கிறது. பெரும்பாலும் தாவர உணவுகள்தான் இவரது உணவில் இடம் பிடிக்கின்றன.
இவரது உணவில் இனிப்புகளின் இடத்தை பழங்கள் பிடிக்கின்றன. இயற்கையான இனிப்பு சுவை கொண்ட பழங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொடுப்பவை என்பதால் எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவார். இவை எல்லாவற்றையும்விட ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை தவறவிட மாட்டார்.
Average Rating