வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை…கவனமா இருங்க மக்களே!!(மருத்துவம்)
தமிழக மக்கள் ஆவலுடனும், சற்று கவலையுடனும் எதிர்பார்த்த வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வழக்கமான அளவைக் காட்டிலும் கூடுதலாக 12 சதவிகிதம் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது. எனவே, சற்று கவனத்துடன் இந்த பெரும் மழையினை ஆரோக்கியமாகக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சாதனாவிடம் பேசினோம்… மழையை நினைத்து வெறுப்புணர்வோ, பயம் கொள்வதோ வேண்டாம். அதுவும் வாழ்வில் கொண்டாடக் கூடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.
உணவு, பயணம், சுற்றுச்சூழல் இவற்றையெல்லாம் கொஞ்சம் பாதுகாப்பாக அமைத்துக்கொண்டால் போதும். மழைக்காலத்தில் வெப்பம் குறைவாக இருக்கும்; காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான இதுபோன்ற சூழ்நிலைதான் நோய்கிருமிகள் உருவாகவும், எளிதில் பரவவும் ஏதுவானதாக இருக்கிறது. எனவே, எந்தவொரு நோயும் எளிதில் தொற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகையால், மழைக்காலத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
மழைக்கால நோய்கள்
மழை காலத்தின்போது காய்ச்சல், சளி தொந்தரவுகள் எல்லோருக்குமே இருக்கும். இவர்களில் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும். இவர்களுடன் நீரிழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள், காசநோய், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆகையால், அவர்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
முக்கியமாக கொசுவால் வரக்கூடிய நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், நிமோனியா போன்றவை மழைக்காலத்தில் எளிதில் பரவக்கூடிய அபாயம் உண்டு. பொதுவாகவே, திறந்தவெளியில் மலம், ஜலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. அதனை மழைக்காலங்களில் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால் நோய் பரவும் அபாயம் அதிகமாகும்.
தண்ணீர் கவனம்
சுகாதாரமற்ற குடிநீரால் பல நோய்கள் பரவுகின்றன. அதிலும் மழைக்காலத்தில் தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால் 70% நோய்கள் தண்ணீரின் மூலம்தான் பரவுகிறது. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை நோய் போன்றவைகள் சுத்தமற்ற தண்ணீர் மூலம் பரவும் நோய்களாக இருக்கிறது.
மழைக்காலத்தில் நாம் வசிக்கும் இடம், பணியாற்றும் அலுவலகம் அருகே சுற்றுப்புறங்கள் தூய்மையில்லாத காரணத்தால் கழிவுநீர்களில் வாழும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலமாக மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். இதனால் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி நன்றாக ஆறிய பின் அருந்த வேண்டும். அதுபோல மழைக்காலத்தில் தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக்கானதால் இல்லாமல் சில்வர், செம்பு என உலோகத்தால் இருத்தல் நல்லது.
ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு ஏற்கனவே கொதிக்க வைத்த தண்ணீரை லேசாக சூடு செய்து வெதுவெதுப்பாக தரலாம். குளிக்கும்போது தண்ணீரை லேசாக சூடு செய்து குளித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குளித்தவுடன் நன்றாக உலர்ந்த துணியால் உடனே துவட்டுதல் வேண்டும். காது சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்கள் மழைக்காலத்தில் அன்றாடம் தலை குளித்தலை தவிர்க்கலாம்.
உணவு
மழைக்காலங்களில் உட்கொள்ளும் உணவில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். கண்டிப்பாக ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கரி உணவுகள், துரித உணவுகள் என ஏற்கனவே தயார் செய்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்துவிட்டு உடனுக்கு உடன் சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது.
எக்காரணம் கொண்டும் மீதமாகும் உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. அது உடனடியாக வயிறு சார்ந்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
நாம் உண்ணும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், இஞ்சி போன்ற ஆன்டிபயாடிக் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. பல வண்ணங்களில் இருக்கும் காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். அந்த கவலை வேண்டியதில்லை. வைட்டமின் சி நிறைந்த பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இதேபோல் தினமும் ஒரு கீரை எடுத்துக்கொள்வது நல்லது. முருங்கைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை போன்ற கீரைகளை அன்றாடம் மதிய உணவில் எடுத்துக் கொள்ளலாம். உணவில் கசப்பு, துவர்ப்பு சுவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அணியும் ஆடைகள்
குளிரைத் தாங்க கூடிய ஆடைகளை அணிவது நல்லது. குழந்தைகள் ஆடை தரையில் படும் படி இருக்கக் கூடாது. அது தேவையற்ற தொற்றுகளை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. முதியவர்கள் கனமான ஆடைகளை அணிவது நல்லது. மழைக்காலங்களில் துணிகளை நன்றாக துவைத்து உலர்த்தி அயர்ன் செய்து உடுத்திக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு உணவு, ஃபாஸ்ட் ஃபுட் இவைகளைத் கண்டிப்பாக தவிர்த்தாக வேண்டும். இதனால் வயிற்றில் எளிதில் கிருமித்தொற்று ஏற்படும்.
இவற்றையும் நினைவில் கொள்ளுங்கள்
* மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய காய்ச்சலுக்கு உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைக்கு சென்று சாதாரண காய்ச்சல்தானா அல்லது டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். அலட்சியமோ, தாமதமோ செய்யாமல் சிகிச்சை பெறுவதும் அவசியம்.
* மழை காலங்களில் ஜீரண கோளாறு ஏற்படும். அதனால் அசைவ பிரியர்கள் குறைந்த அளவு அசைவ உணவு எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் அவர்கள் அசைவ உணவுகளை ஹோட்டல்களில் சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது முக்கியம். குறிப்பாக மழைக் காலங்களில் மசாலா உணவுகளையும், உப்பு கூடிய உணவுகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.
* நீங்கள் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை வீட்டிலோ வீட்டை சுற்றியோ தேங்க விடாதீர்கள். வீட்டின் அறைகளை அடைத்து மூடி வைக்காமல் அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும்படும் படி வையுங்கள்.
* மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் அனைவரும் குளிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் குளிக்கும் தண்ணீரை லேசாக சூடு செய்து குளிக்க வேண்டும். கொசு சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம்.
* மழைக்காலங்களில் கிராமங்களில் வசிப்பவர்களை விட நகரங்களில் வசிப்பவர்களை எளிதில் நோய்கள் தாக்கிவிடுகின்றன. அதற்கு சுற்றுப் புறச்சூழல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் நகரத்தில் வாழ்பவர்கள் வசிப்பிடம், குடி தண்ணீர், உணவு போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் கையாள்வது அவசியம்.
* சிலர் மழைக்காலங்களில் அடிக்கடி ஆவி பிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். அவர்கள் அதற்கு முன் மருத்துவரை ஆலோசித்து விட்டு அவரின் அறிவுறுத்தலின் படி நடந்துகொள்ள வேண்டும்.
* சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனைப் படி அவர்களுடைய உணவு, நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
* மழைக்காலங்களில் உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டியதில்லை. உடற்பயிற்சியினை இந்த காலகட்டத்திலும் மேற்கொள்ளும்போது உடல் நன்றாக வியர்க்கும். இதனால் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
Average Rating