ரயில் பயணங்கள்…!(மகளிர் பக்கம்)
குழந்தையாக இருக்கும்போது நமக்கெல்லாம் தூரத்தில் புள்ளியாய் துவங்கி பெரும் இரைச்சலோடு வரும் ரயிலைப் பார்ப்பதும் சரி, நண்பர்களோடு ரயில் விளையாட்டு விளையாடுவதானாலும் சரி, விளையாட்டு ரயிலை பொம்மை தண்டவாளத்தில் நகர்த்தி விளையாடுவதும் சரி ஒருவித உன்னத உணர்வுதான். ரயில் பயணங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு உணர்வையும் உன்னத அனுபவத்தையும் தரும். சுபஜாவின் ரயில் பயணம் தந்த அனுபவம் வேறுவிதமானது. ஒரு ரயில் பயணம் அவரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது. அவரே நம்மிடம் பேசுகிறார்…
‘‘என் பெயர் சுபஜா. என் சொந்த ஊர் நாகர்கோவில். எனக்கு மூன்று சகோதரிகள் இரண்டு சகோதரர்கள். நான் என் வீட்டில் கடைக்குட்டி. எனக்கு ஒரு வயது இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். அதன் பிறகு என் அம்மாதான் கூலி வேலை செய்து முழுக் குடும்ப பாரத்தையும் சுமந்தார். எங்கள் போதாத நேரம் எனக்கு எட்டு வயதிருக்கும்போது திடீரென வந்த நெஞ்சுவலி அம்மாவை எங்ககிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சுருச்சு. ஆதரவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மூலமாக ஆதரவற்றோர் விடுதியில் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.
நானும் என் கடைசி அக்காவும் ஒரே விடுதியில் இருந்தோம். அங்கிருந்தே தொடர்ந்து படித்தோம். வார இறுதியில் விடுதியில் இருக்கும் குழந்தைகளைப் பார்க்க யாராவது உறவினர்கள் வருவார்கள். விடுமுறை வந்தால் அவர்கள் எல்லாம் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். நானும் அக்காவும் மட்டும் யாருமற்ற நிலையில் விடுதியே கதி எனக் கிடப்போம். அப்போதெல்லாம் நான் தனிமையில் நிறைய அழுதிருக்கிறேன். +2 முடித்த நிலையில் எனது மூன்று அக்காவிற்கும், அண்ணன் ஒருவருக்கும் திருமணமாகியிருந்தது. +2 விடுமுறையில் சென்னையில் இருந்த அக்காவின் வீட்டிற்குச் செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல டிக்கெட் எடுத்தேன்.
நான் ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில் நகரத் தொடங்கியிருந்தது. ரயிலைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ரயிலோடு இணைந்து ஓடி கடைசிப் பெட்டியின் படிகளில் கால்வைத்துவிட்டேன். என் போதாத நேரம் அப்போது மிகவும் வேகமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தது. ஆம்..! நான் படிகளில் கால்வைத்து ஏறவும் உள்ளிருந்த கதவு வேகமாக மூடவும் சரியாக இருந்தது.
எனது கை ரயிலின் பிடியில் இருந்து விலகி நான் தண்டவாளத்தில் விழுக, ரயிலின் கடைசிப் பெட்டியில் சக்கரங்கள் என் கால்களில் ஏறி இறங்கி இருந்தது. ரயில் நிலையம் இருந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், தண்டவாளத்தின் மேல் கால்கள் இரண்டையும் பறிகொடுத்த நிலையில் ரத்தமும், சதையும், வலியுமாக கத்திக்கொண்டு கிடந்தேன். என் கண்களுக்கு புலப்படும் தூரத்தில் துண்டிக்கப்பட்ட என் கால் செருப்போடு கிடக்கிறது. நான் கதறி அழும் குரல் அந்தப் பகுதியில் யார் செவிகளுக்கும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் இன்னொரு ரயில் தூரத்தில் புள்ளியாக அதே தண்டவாளத்தில் அதிர்வுகளுடன் வந்து கொண்டிருந்தது.
ரயில் மீண்டும் என் மீது ஏறினால் நான் உருத் தெரியாமல் சிதைந்து போவேன். அப்போது எங்கிருந்துதான் எனக்கு அந்த பலம் வந்ததோ தெரியாது. வாழ்க்கை மீதிருந்த நம்பிக்கை காரணமாய் அருகில் மண்டிக்கிடந்த செடிகொடிகளை இறுக்கப்பற்றி என் உடலை நகர்த்தி ஓரத்தில் இருந்த பள்ளத்திற்குள் நான் உருளவும் அந்த ரயில் என்னைக் கடக்கவும் சரியாக இருந்தது. எல்லாமும் சினிமாவில் வரும் காட்சிகளைப் போல அடுத்தடுத்த நொடிகளில் நடந்து முடிந்திருந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து கொண்டிருக்கிறேன்… நினைவு திரும்பி நான் கண் விழித்தபோது அவசர சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டு இருக்கிறேன்.
முட்டிக்குக் கீழிருந்த என் இரண்டு கால்களும் நீக்கப்பட்டு அரை உருவமாக நான் கிடக்கிறேன். அப்போது பீறிட்டு எழுந்த என் அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. பள்ளத்தில் கிடந்த என்னை அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் பார்த்து தகவல் சொல்லி, ஆம்புலன்ஸ் மூலமாக கோட்டாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அறிந்தேன். என் விபத்து அன்றைய நாளிதழ்களில் செய்தியாகவும் வந்தது. தொடர்ந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்தேன்.
கால்களை இழந்து பிறர் உதவியோடு படுக்கையில் கிடந்த என்னைப் பார்க்க வந்த உறவினர்கள் யாரும் அவர்களோடு என்னை அழைத்துச் செல்ல முன்வரவில்லை. அவர்களின் சூழலும் அப்படி இருந்தது. புண்கள் ஆறாத நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆறு மாதத்திற்கு மேல் அந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் இருக்க முடியாது என்ற காரணத்தால் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நிலை வந்தது. என்னைப் பார்க்க வந்த உறவினர்கள் என் மீது பரிதாபப்பட்டு என் அருகில் வைத்துச் சென்ற பணத்தோடு ஆட்டோவில் ஏறி மருத்துவமனையைவிட்டு வெளியேறினேன். இது நடந்தது 2006ல்.
ஏதோ நம்பிக்கையில் வெளியேறி விட்டேன் ஆனால் எங்கு செல்வது எனத் தெரியவில்லை. ஒரு பிச்சைக்காரியைப்போல தெருக்களின் ஓரத்தில் கிடந்தேன். புண் ஆறாத என் கால்களில்ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. கால்களில் மண்கள் அப்பிக் கிடக்க எரும்புகள் என் காயத்தைச் சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருந்தது. வேதனையின் உச்சத்தில் புலம்பிக்கொண்டிருந்தேன். அந்த வலியான நாட்களையும் வேதனையையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை. அந்த வழியாகக் என்னைக் கடந்து சென்ற இரண்டு கன்னியாஸ்திரி சகோதரிகளை அழைத்து என் புண்களை ஆற்றிவிட உதவுமாறு கெஞ்சினேன்.
என் அருகில் வந்து என்னைப் பார்த்தவர்கள், என்னை அடையாளம் கண்டு, என் மீது பரிதாபப்பட்ட நிலையில் அங்கிருந்த முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்தனர். அந்த இல்லத்தோடு தொடர்புடைய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரத் தம்பதியினர் மூலம் நான் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ‘மொபில்டி இந்தியா’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். மேல் சிகிச்சைக்குப் பின், அவர்கள் மூலமாக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு செயற்கை கால்கள் (prosthetic) எனக்குப் பொருத்தப்பட்டது. நடப்பதற்கு பயிற்சி எடுத்த பிறகு அவர்களுடன் கொடைக்கானல் அழைத்துச் செல்லப்பட்டு கொஞ்சநாட்கள் அவர்களுடன் அங்கேயே தங்கினேன்.
மீண்டும் அவர்கள் உதவியால் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் சேர்க்கப்பட்டு கல்லூரி விடுதிக்கு மாறினேன். கல்லூரிப் படிப்பை நல்லவிதமாக முடித்து வெளிவந்த நிலையில், சென்னையில் இருந்த எனது மூத்த சகோதரியின் வீட்டில் கொஞ்சநாட்கள் தங்கியிருந்தேன். அப்போது அருகாமையில் உள்ள குழந்தைகளுக்கு மாலைநேர வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தேன். எனது அக்காவின் வீட்டு சூழ்நிலை என்னால் அங்கிருக்க முடியாத நிலையினை எனக்கு மீண்டும் ஏற்படுத்தியது. எங்கு செல்வது எனத் தெரியாமல் இரவு முழுவதும் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் சுற்றினேன்.
ஒரு பெண் இரவில் தனியாக பொது வெளியில் இருப்பது அவ்வளவு எளிதில்லை என்பது கொஞ்ச நேரத்திலேயே எனக்குப் புரிந்தது. என்ன செய்வதென யோசித்த நிலையில், என் பாதுகாப்பிற்காக நாகர்கோவிலுக்கு ரயிலில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி படுத்துக்கொண்டேன். இரவு நேரம் கடந்திருந்தது. மீண்டும் நாகர்கோவில் இருந்து சென்னைக்கு டிக்கெட் எடுத்தேன். ஒரு முடிவுக்கு வந்தவளாய், என்னுடன் படித்த தோழியின் முகவரியோடு மதுரையை நோக்கி ரயில் ஏறினேன். அங்கு சென்றபோது அவளுக்குத் திருமணமாகி சிவகங்கை மாவட்டத்திற்கு மாறி இருந்தாள். அவளைத் தேடி சிவகங்கைக்கும் சென்றேன். தோழியின் உதவியால் அங்கிருந்த சக்கந்தி நூல் மில்லில் குவாலிட்டி கண்ட்ரோல் கண்காணிப் பாளர் வேலையும் கிடைத்தது.
என் வாழ்க்கைக்கு வழி கிடைத்தது என நினைத்தேன். என் போதாத நேரம் மீண்டும் வேலை செய்யத் துவங்கியது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவிப்பால் வேலை இழக்கும் நிலை உருவானது. வாழ்வதற்கான என் போராட்டம் மீண்டும் தொடங்கியது. சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் என் நிலையினை விளக்கி வேலை கேட்டு மனு கொடுக்கச் சென் றேன். அப்போது சிலர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வருபவர்களின் கோரிக் கைகளை மனுவாக எழுதிக் கொடுக்கும் வேலையினை செய்து பணம் சம்பாதித்துக்கொடுத்துக் கொண்டிருந்தனர் என்னைக் கவனித்த மாற்றுத் திறனாளி நண்பர் ஒருவர், ஏம்மா நீதான் படிச்சிருக்க, எழுதப் படிக்கத் தெரியும். நீயும் இந்த மாதிரி வருபவர்களுக்கு இங்கேயே இருந்து மனு எழுதிக் கொடுக்கலாமே, அதில் உனக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் எனச் சொன்னார்.
எனக்கும் சரியெனப் பட்டது. தொடர்ந்து அந்த வேலையைச் செய்யத் துவங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை எழுதிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதோ இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒரு நாளைக்கு 200ம் வரும் 300ம் வரும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 500 வரைகூட சம்பாதித்திருக்கிறேன். வாடகைக்கு தனி வீடெடுத்து தங்கியிருக்கிறேன்.
மனு எழுதுவதில் வரும் வருமானத்திலேயே என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு செய்யவும் தொடங்கியிருக்கிறேன். என் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புக்களையும் எடுத்து வருகிறேன். விளையாட்டிலும் எனக்கு நிறையவே ஆர்வம் உண்டு. ஒவ்வொரு வார இறுதியிலும் சிவகங்கையில் இருந்து சென்னை வந்து வீல் சேர் பாஸ்கெட்பால் விளையாட்டுக்கான பயிற்சியினை எடுத்து வருகிறேன். அது தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.மருத்துவமனையில் இருந்தபோது என் இரண்டு கால்களும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதே எனக்குக் கடினமாக இருந்தது.
அதை உணர எனக்கு நீண்ட நாட்கள் பிடித்தது. நான் இயற்கை உபாதைக்காக எழ முயற்சித்தபோது என்னால் முடியாத அந்த இயலாமை எனக்குள் அழுகையாக வெடித்துக் கிளம்பியது. நான் அழுத அழுகை அங்கிருப்பவர்களையும் கரைத்திருக்கும். ஒரு நிமிடம் என் கவனக் குறைவால் நான் எத்தனை பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் அவை கண்ணீரால் நிரம்பிய தினங்கள். உறவுகள் என்னை வேண்டாமென நிராகரித்து விட்டுச் சென்றபோதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் எனக்குப் புரிந்தது. அதைக் கேள்விப்பட்டு மீண்டும் வெடித்து அழுதேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு எடுக்கிறேன். சாப்பிடுவதால் என் உடல் எடை அதிகமானாலும் சரி, எடை இழப்பால் ஒல்லியானாலும் சரி, எனது செயற்கை காலுக்குத்தான் ஆபத்து.
செயற்கை கால் எனது முட்டியோடு சரியாகப் பொருந்தாமல் கழன்று விழத் தொடங்கி பாதிப்படைந்தால், அதை சரி செய்ய குறைந்தது நாற்பதாயிரம் வரை ஆகும். என்னிடம் அதற்கெல்லாம் பணமில்லை. என் வாழ்வாதாரத்திற்காக ஒரு நிலையான வேலை கிடைத்தால் நானும் இந்த உலகத்தில் நம்பிக்கையோடு வாழ முடியும்” என முடித்தார். நாம் தவற விட்ட நிமிடங்கள்தான் காலம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்திச் செல்லும். நிதானத்தை இழந்த அவசரம் சுபஜாவின் வாழ்க்கையை எந்த அளவு புரட்டிப் போட்டுள்ளது…சிறு வயதில் கொலுசு அணிந்த கால்களோடு, குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தன் கால்களை ஏக்கத்தோடு தடவிப் பார்க்கிறார் இந்த நம்பிக்கை தேவதை.
Average Rating