ரோலர் பேபிஸ்!!(மகளிர் பக்கம்)
“காலில் சக்கரத்தைக் கட்டிக்கிட்டு தான் பறப்ப” என விளையாட்டாய் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். வயது வித்தியாசமில்லாமல் காலில் சக்கரத்தோடு சிலர் ரோலர் ஸ்கேட்டிங் செய்து அசத்திக் கொண்டிருந்தனர். ஸ்கேட்டிங் செய்வதன் சிறப்பைத் தெரிந்துகொள்ள, கடந்த 30 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்துவரும், அண்ணா நகர் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பின் தலைவர் உன்னிக் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தபோது அவர் நம்மிடையே பேசத் தொடங்கினார்.‘‘இதுவரை என்னிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார்கள்.
காலையில் நடைப்பயிற்சிக்கு வருபவர்களை ஸ்கேட்டிங் ஏதாவது ஒருவிதத்தில் கவர்ந்திழுக்கிறது. தொடர்ந்து கவனிப்பவர்கள் பயிற்சியில் இணைந்து விடுகிறார்கள். இதில் ஸ்பீடு ஸ்கேட்டிங் வீல்ஸ், இன்லைன் ஸ்கேட்டிங் வீல்ஸ், ரோலர்பிளேடு பயிற்சி என அடுத்தடுத்த கட்ட பயிற்சிகளைத் தருகிறோம். இன்லைன் பிளேடு ஸ்கேட்டிங்கில் மட்டும் பயிற்சி அதிகமாகத் தேவைப்படும். இதில் வீல்கள் மூன்றும் இருக்கும் சிலவற்றில் நான்கும் இருக்கும். ரோட் பிராக்டீஸ் இதில் உண்டு. ரோட் பிராக்டீஸ் எடுக்கும்போது எனர்ஜி லெவல் தானாக அதிகரிக்கும். ரோட் பிராக்டீஸ் எடுத்தால் ஸ்கேட்டிங் செய்வது மிகவும் சுலபம்.
ஸ்கேட்டிங் செய்வதால் மாணவர்களுக்கு கான்சன்டிரேஷன் லெவல் அதிகமாகும். வீல் வேகமெடுக்கத் தொடங்கும்போது, குழந்தைகள் வீலைத் தானாகவே கண்ட்ரோல் செய்ய முயலும்போது இயல்பாய் மைன்ட் ஷார்ப்பாகத் தொடங்கும். குழந்தைகள் எப்போதும் எனர்ஜிட்டிக்காக இருப்பார்கள். அவர்களின் ஸ்டாமினா லெவல் அதிகரிக்கிறது. காலையில் இவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பும் உண்டு. ஸ்கேட்டிங் பயிற்சி முடிந்ததும் ரிலாக்ஸேஷன் கொடுக்கிறோம். ஞாயிற்றுக் கிழமைகளில் யோகா கற்றுத் தருகிறோம். ஸ்பாஸ்டிக் சில்ரன் எனப்படும் ஹைபர் ஆக்டிவிட்டி குழந்தைகளின் கவனம் எப்போதும் ஒருநிலையில் இருக்காது.
அவர்களின் கவனம் சிதறிக்கொண்டே இருக்கும். அவர்களை ஒருநிலைப் படுத்த சில பெற்றோர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். மருத்துவர்களின் பரிந்துரையிலும் சிலர் பயிற்சி எடுக்க வருகிறார்கள். பயிற்சியில் குழந்தைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்போம். யாருக்கெல்லாம் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறதோ, அந்தக் குழந்தைகளைக் கவனத்தில் கொள்வோம். முக்கியமாக இதில் அவர்களின் ஹெல்த் டெவலப்மென்ட் கிடைக்கிறது. மூச்சுத் திணறல் பிரச்சனைகள் சரியாகிவிடுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’’ என முடித்தார்.‘‘இப்போது உள்ள குழந்தைகளை எப்போது பார்த்தாலும் டி.வி, செல்போன் என குழந்தைத்தனத்தை தொலைத்தவர்களாய் வளர்க்கிறார்கள். இந்தக் குழந்தைகளிடத்தில் பல பிரச்சனைகளும் சேர்ந்தே வளர்கிறது’’ என நம்மிடம் பேசத் தொடங்கினார் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் ரவிச்சந்திரன்.
‘‘எங்களிடம் மூன்றரை வயதில் தொடங்கி முப்பத்தைந்து வயதுவரை ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்கலாம். முதலில் கீழே விழாமல் இருப்பதற்காக அட்ஜஸ்டபிள் வீல் உள்ள ஸ்கேட்டிங் போட்டு டைட் செய்து நடக்க வைப்போம். கொஞ்சம் ஃப்ரீயாக அவர்கள் ஃபீல் பண்ணத் தொடங்கியதும் வீலை கொஞ்சம் லூஸ் செய்து மிகவும் மெதுவாக மூவ் பண்ண வைப்போம். பழக்கமாகி ஃப்ரீ மூவ்மென்ட்டிற்கு வந்த பிறகே வேகமாக ஸ்கேட்டிங் செய்ய பழக்கப்படுத்துவோம்.காலை 5 மணிக்குத் துவங்கி ஒரு நாளைக்கு நான்கு பேட்ச். ஒரு பேட்ச்சுக்கு 30 முதல் 40 பேர்வரை எங்களிடத்தில் பயிற்சி எடுக்கிறார்கள். பயிற்சி எடுக்கும் மாணவர்கள் டிஸ்டிக், ஸ்டேட், நேஷனல், இன்டர் நேஷனல் லெவல் வரை சென்று விளையாடி இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்கிறார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கிறார்கள். நேஷனல் அளவில் விளையாடும் மாணவர்களுக்கு கல்லூரியில் ஃப்ரீ கோட்டா மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையும் உண்டு.மாணவர்கள் எடுக்கும் பாயின்ட் வரிசைப்படி கம்ப்யூட்டரில் உடனே ஏற்றப்பட்டுவிடுகிறது. அதை வைத்து ஸ்டேட் லெவலுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து எடுக்கும் மதிப்பெண் மற்றும் மெடல்களைப் பொறுத்து நேஷனல் லெவலுக்கு தேர்வாகிறார்கள். நேஷனல் லெவலில் விளையாடுபவர்கள் ஒலிம்பிக் செல்லவும் தேர்வாகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வடநாட்டைச் சேர்ந்தவர்களே ஸ்கேட்டிங்கில் தேர்வாகி ஒலிம்பிக்வரை செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்டர்நேஷனல் லெவல்வரை மட்டுமே சென்று வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்கும்போது ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். வேர்வை நிறைய வெளியேறும். உடல் பருமன் இயல்பாகக் குறையும். உடல் எடை கட்டுக்குள் இருப்பதால் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அண்ணா நகர் டவர் பார்க்கில் உள்ள ரிங் கிரவுண்டில் காலை 5 மணிக்கு பெண்களுக்கென தனிப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஸ்கேட்டிங்கில் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய மாற்றம் கிடைக்கிறது. அவர்களின் பய உணர்வு குறைகிறது. ஒரே குழந்தையாக உள்ள வீட்டில் தனிமையில் வளரும் குழந்தை மற்ற குழந்தைகளோடு இணைந்து பழகும் கூட்டு மனப்பான்மை கிடைக்கிறது. தட்டையான பாதம் உள்ள சில குழந்தைகளுக்கு நடை நேராக இருக்காது. ஸ்கேட்டிங் செய்வதன் மூலம் இப்பிரச்சனையும் சரிசெய்யப்படுகிறது’’ என முடித்தார்.
Average Rating