11,950 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா!!(உலக செய்தி)
உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது.
ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில் உள்ள தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை பல முறை அமெரிக்கா வலியுறுத்தியும் கூட, அந்த நாடு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது.
இது பற்றி டிரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், “பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நமக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி அளிக்க முடியாது. அவர்கள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு எதுவும் செய்வதில்லை என்பதால்தான் நிதி உதவி அளிக்க முடியாது” என கூறினார்.
இது மட்டுமின்றி பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “சர்வதேச பயங்கரவாதியான பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரத்தில் உள்ள பங்களாவில் பதுங்கி இருந்ததை பாகிஸ்தான் மக்கள் அனைவரும் அறிந்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் எங்களுக்கு சொல்லவில்லை. மாறாக நாங்கள் வழங்கி வந்த நிதியை மட்டும் பெற்றுக்கொண்டனர். அதனால் தான் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியை நிறுத்திவிட வேண்டும் என்று நீண்ட காலத்துக்கு முன்பே முடிவு செய்தேன்” என குறிப்பிட்டார்.
ஆனால் டிரம்ப் கருத்தை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி நிராகரித்துள்ளார்.
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று டிரம்ப் கூறுவது சரியல்ல. அமெரிக்காவின் சில கொள்கை நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பாகிஸ்தான் உதவி இருக்கிறது” என கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான 1.66 பில்லியன் டொலர் நிதி உதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத்துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ராப் மேனிங், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இ-மெயில் வழியாக பதில் அளித்தார்.
அதில் அவர், “பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு நிதி உதவி 1.66 பில்லியன் டொலர் நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிதி உதவி எதுவும் திரும்ப அளிக்கப்படவில்லை” என கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசியா ஆகியவற்றுக்கான இராணுவத்துறை துணை மந்திரியாக இருந்த டேவிட் செத்னி, செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி கூறுகையில், “பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ராணுவ நிதி உதவியை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்தி இருப்பது, அந்த நாட்டின் மீது அமெரிக்கா அடைந்துள்ள ஏமாற்றத்தின் வலுவான அடையாளம் ஆகும்” என கூறினார்.
மேலும், “பாகிஸ்தானின் அண்டை நாடுகள் மீது பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபடுவதை, அந்த நாடு சகித்துக்கொள்வதோடு, ஊக்கமும் அளிக்கிறது என்பது அமெரிக்காவின் கவலை. ஆனால் அதை சரி செய்வதற்கு பாகிஸ்தான் எந்தவொரு தீவிர நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார்.
இப்போது 11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
Average Rating