ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை!!(கட்டுரை)
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும், #MeToo இயக்கம் மூலமாக, பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலிலும், அக்குரல்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகியிருக்கின்றனர். இது, அந்நாட்டு வரலாற்றில், முதன்முறையாக நடந்துள்ளது. தற்போதைய பிரதிநிதிகள் சபையில், 84 பெண்கள் தான் காணப்படுகின்றனர்.
இதில், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமை மாத்திரமன்றி, பல்வகையான பெண்களும், பல்வகையான பின்னணிகளுடன் தேர்ந்தெடுக்கப் -பட்டிருக்கிறார்கள் என்பது தான், மிகப்பெரிய நம்பிக்கையை வழங்குகிறது. ஏனெனில், மேற்கத்தேய நாடுகளில் முன்னெடுக்கப்படும் பெண்ணியம், வெள்ளையினப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருக்கிறது, சிறுபான்மையினப் பெண்களை அது தவிர்க்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில், பல்வகைமையான பின்னணிகளுடன் பெண்கள் தெரிவாகியிருக்கின்றமை முக்கியமானது.
இம்முறை இடம்பெற்ற மத்தியகாலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் நிறமான நீலத்தை அடிப்படையாகக் கொண்டு, “நீல அலை” எழும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அதற்குப் பதிலாக, “மென்சிவப்பு அலை” (Pink wave) தான் எழுந்திருக்கிறது என, பெண்களின் வெற்றியைத் தொடர்ந்து, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
முஸ்லிம் பெண்கள்
ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு, அந்நாட்டில் அதிகரித்துள்ளது எனக் கருதப்படுகிறது. தரவுகளும், அதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு, முதலாவது முஸ்லிம் பெண் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். முதலாவதாக, ஒருவரல்ல, இருவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
றஷீடா தலைப்
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த றஷீடா தலைப், மிச்சிக்கன் மாநிலத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். நாற்பத்து இரண்டு வயதான றஷீடா, பலஸ்தீனத்திலிருந்து ஐ.அமெரிக்காவுக்கு வந்த குடியேற்றவாசிகளின் மகளாவர். ஒரு பக்கமாக முஸ்லிம், இன்னொரு பக்கமாக குடியேற்றவாசிகளின் மகள் என, ஐ.அமெரிக்காவின் ஒரு பகுதியினரால் வெறுக்கப்படும் சமூகத்திலிருந்து வந்து தான், அவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
அவரது குடும்பப் பின்புலம் காரணமாக, ஐ.அமெரிக்காவின் காங்கிரஸுக்குத் தெரிவுசெய்யப்பட்ட, பலஸ்தீனப் பின்னணியைக் கொண்ட முதலாவது பெண்ணாகவும் அவர் மாறியிருக்கிறார்.
இதில், இன்னொரு விடயமும் முக்கியமானது. முஸ்லிம் பெண்கள் என்று வரும் போது, அவர்களுக்கெதிரான பாகுபாடுகள், அவர்களது சமூகத்துக்குள்ளேயே காணப்படும் நிலையும் உள்ள போதிலும், அவர்களையும் தாண்டித் தான், இவ்வெற்றியை அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார். றஷீடா, தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு, தனித்த தாயாக, தனது இரண்டு பிள்ளைகளுடன் தான் வாழ்ந்துவருகிறார். அத்தோடு, முஸ்லிம் பெண்களை அடையாளப்படுத்தப் பயன்படும் ஹிஜாப், நிகாப், தலையை மூடும் போர்வைகள் போன்றவற்றையும் அவர் அணிவதில்லை.
பொதுவாக, பெண்கள் தெரிவுசெய்யப்படும் போது, “பெண்ணென்பதால் தெரிவுசெய்யப்பட்டார்” என்ற, விதண்டாவாதமான கருத்துகளும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், சிறிய வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், அப்போது வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பின் கூட்டமொன்றில் கலந்துகொண்ட குழுவில் இடம்பிடித்திருந்தார். சுமார் 20 பெண்கள் கலந்துகொண்டு, பெண்கள் தொடர்பாகக் கடந்த காலங்களில் டொனால்ட் ட்ரம்ப் நடந்துகொண்ட விதத்துக்கெதிராக உரத்துக் குரல்கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அக்கூட்டத்திலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இப்படி, எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும், தடைகளைத் தாண்டி, அவற்றை உடைத்துக்கொண்டு முன்னேறும் ஒருவராகத் தான் அவர் இருக்கிறார்.
இல்ஹாம் ஓமர்
பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் பெண்களில் அடுத்தவராக, இல்ஹாம் ஓமர் காணப்படுகிறார். மினிசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த, ஜனநாயகக் கட்சி உறுப்பினராவார். முப்பத்து ஏழு வயதான இல்ஹான் ஓமர், சோமாலியாவில் பிறந்தவராவார். சோமாலியாவின் மொகடிஷுவில் பிறந்த இவர், அங்கு தான் வளர்ந்திருந்தார். பின்னர், அங்கு ஏற்பட்ட போர் காரணமாக, அவரது 10ஆவது வயதில் அங்கிருந்து வெளியேறி, கென்யாவிலுள்ள அகதி முகமொன்றில் நான்கு ஆண்டுகள் இருந்தனர். இல்ஹாமின் 14ஆவது வயதில், 1995ஆம் ஆண்டில், ஐ.அமெரிக்காவுக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது.
ஆங்கில மொழியை அறிந்திருக்காத இல்ஹாம், வெறுமனே 3 மாதங்களில் ஆங்கிலத்தைக் கற்று, அதன் பின்னர் பாடசாலைகளில் கற்றார். தொடர்ந்து கற்ற அவர், 2011ஆம் ஆண்டில், தனது 30ஆவது வயதில், அரசியல் விஞ்ஞானமும் சர்வதேசக் கற்கைகளும் பாடத்தில், இளமாணிப் பட்டம் பெற்றார்.
அரசியலில் ஈடுபாடு கொண்ட இல்ஹாம், அரசியல் பிரசாரக் குழுக்களில் பணியாற்றியிருக்கிறார்.
பிரதிநிதிகள் சபைக்குத் தற்போது தெரிவுசெய்யப்பட்டிருப்பதன் மூலம், சோமலாலியப் பின்னணியைக் கொண்ட ஒருவர், பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவான முதற்தடவை என்ற பெருமையும் ஏற்பட்டிருக்கிறது.
தொல்குடிப் பெண்கள்
ஐ.அமெரிக்காவில் அதிகம் ஒடுக்கப்படும் பிரிவினரில் ஒரு பிரிவாக, அந்நாட்டின் தொல்குடிப் பிரிவினர் கருதப்படுகின்றனர். ஒடுக்கப்படும் ஏனைய பிரிவுகளான சிறுபான்மையினங்கள், கறுப்பின மக்கள், இலத்தீனோ மக்கள் போன்றோருக்கு, அந்நாட்டில் பிரதிநிதிகள் இருந்தாலும், தொல்குடியினருக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. அதிலும், தொல்குடிப் பெண்கள் எவருமே, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகித்ததில்லை. ஆனால், முஸ்லிம் பெண்களைப் போலவே, இங்கும் இரண்டு பெண்கள், அதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
டெப் ஹாலன்ட்
நியூ மெக்ஸிக்கோ மாநிலத்தைச் சேர்ந்த டெப் ஹாலன்ட், பிரதிநிதிகள் சபைக்கு முதலில் தெரிவான தொல்குடிப் பெண்களில் ஒருவராக உள்ளார். தொல்குடிப் பிரிவினரில் லகுனா புவேப்லோ என்ற பிரிவினரைச் சேர்ந்த இவர், அனுபவமிக்க அரசியல் செயற்பாட்டாளராவார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், ஆங்கிலத்தில் இளமாணிப் பட்டம் பெற்றதோடு, அதன் பின்னர் சட்டவியலில் கலாநிதிப் பட்டமும் பெற்றவராவார்.
ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருந்தபோது, 2012ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலை எதிர்கொண்ட ஒபாமாவின் தேர்தல் பிரசாரக் குழுவில், தொல்குடி அமெரிக்கர்களுக்காக, நியூ மெக்ஸிக்கோ மாநிலத்துக்கான பணிப்பாளராக இவர் பணியாற்றினார்.
சமூகத்துக்கான செயற்பாட்டாளராகப் பெரிதும் அறியப்பட்ட இவர், தனது கணவனைப் பிரிந்து, தனது மகளைத் தனியாக வளர்த்த தனது அனுபவம், மக்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று தெரிவிக்கிறார். வறுமை காரணமாக, அரச உதவிகளில் தங்கியிருந்தே, இவர் வாழ்ந்திருந்தார்.
ஷாரீஸ் டேவிட்ஸ்
கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஷாரீஸ் டேவிட்ஸ் தான், பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவான முதல் தொல்குடிப் பெண்களில் அடுத்தவர். தொல்குடியினரில் ஹோ-சங்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவராவார். தனித்த தாயாக இருந்த இராணுவ அதிகாரியால் வளர்க்கப்பட்ட இவர், வணிக முகாமைத்துவத்தில் இளமாணிப் பட்டமும், சட்டத்துறைக் கலாநிதிப் பட்டமும் பெற்றவராவார். இவற்றுக்கு மேலதிகமாக, தற்காப்புக் கலைகளில் நிபுணத்துவமும் கொண்டவர்.
இவை ஒரு பக்கமாகவிருக்க, பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட கன்சாஸ் மாநிலத்தில், தான் சமபாலுறாவளர் என்பதை வெளிப்படையாகவே கூறி வாழ்ந்து வருபவர். இதன்மூலமாக, முதலாவது தொல்குடிப் பெண் என்பதையும் தாண்டி, வெளிப்படையாக சமபாலுறவாளராக வாழ்ந்து, பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவான முதலாவது தொல்குடி அமெரிக்கர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
இளைய பெண்
பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவான இளைய பெண் என்ற பெருமையை, அலெக்ஸான்ட்ரியா ஒக்காஸியோ கோர்ட்டெஸ் பெற்றிருக்கிறார். வெறுமனே 29 வயதான இவர், நியூயோர்க் மாநிலத்திலிருந்து தெரிவாகியிருக்கிறார். இவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் தான். இளம்பெண் என்பதோடு, புவேர்ட்டோ றிக்கோ பின்னணியைக் கொண்டவராக அவர் இருக்கிறார்.
ஒக்காஸியோ கோர்ட்டெஸின் தந்தை இறந்த பின்னர், குடும்பத்தை நடத்துவதற்கு, அவரின் தாயார் தடுமாறியிருந்தார். வீடுகளைச் சுத்தப்படுத்தியும் பாடசாலை பஸ்களை ஓட்டியுமே, குடும்பத்தை அவர் பார்த்துக்கொண்டார். மறுபக்கமாக, கல்லூரியில் கற்ற ஒக்காஸியோ கோர்ட்டெஸ், மதுபானம் கலக்குபவராகவும் உணவகங்களில் உணவு பரிமாறுபவராகவும் பணியாற்றினார்.
நியூயோர்க்கில் 2016ஆம் ஆண்டுக்கான உள்ளகத் தேர்தலொன்றில், தான் உள்ளடக்கப்படாததால், தன்னால் வாக்களிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த அவர், அதன் பின்னர், பேர்ணி சான்டர்ஸின் ஜனாதிபதிப் பதவியை நோக்கிய பிரசாரத்தில் பங்கெடுத்திருந்தார். அப்பிரசாரத்தின் பின்னர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, மக்களின் பிரச்சினைகளை அவர் அறிந்துகொண்டார்.
அதன் பின், ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில், அம்மாவட்டத்திலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு 10 தடவைகள் தெரிவான, அனுபவமிக்க அரசியல்வாதியான ஜோ குறௌலியை, ஒக்காஸியோ கோர்ட்டெஸ் தோற்கடித்தார். ஜோ குறௌலி, சாதாரணமானவர் கிடையாது. ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டவராகக் கருதப்பட்டார்; நியூயோர்க்கின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பு, அவரிடம் தான் காணப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக, ஜனநாயகக் கட்சித் தேர்தலில் தோற்றிருந்தாலும், சிறிய கட்சியொன்றின் வேட்பாளராக, குறௌலியின் பெயர், வாக்குச்சீட்டில் காணப்பட்டது.
இவற்றையும் தாண்டி, 78 சதவீதமான வாக்குகளை, ஒக்காஸியோ கோர்ட்டெஸ் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு 13.8 சதவீத வாக்குகளும், மூன்றாவது கட்சியாகப் போட்டியிட்ட ஜோ குறௌலிக்கு 6.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
ஏனையோர்
மேலே குறிப்பிடப்பட்டோரைத் தவிர, பல மாநிலங்களில், முதலாவது பெண்கள் அல்லது வெள்ளையினப் பெண்கள் அல்லாத பெண்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு மேலதிகமாக, ஆளுநர் பதவியிலும் இம்மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
Average Rating