பேச்சுவார்த்தை முஸ்தீபுகள்!!(கட்டுரை)
ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில், திம்புவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த பேச்சுவார்த்தைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைச் சம்மதிக்க வைக்க, பகீரதப் பிரயத்தனத்தில் இந்தியா ஈடுபட்டிருந்தது.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியாவின் ஆதரவென்பது மிக முக்கியமானது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மிகச் சுதந்திரமாகத் தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டமிது.
இந்தியாவின் அந்த ஆதரவு என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இன்றியமையாததாக இருந்த நிலையில், அந்த இன்றியமையாத ஆதரவையே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவதற்கான துருப்புச் சீட்டாக இந்தியா பயன்படுத்தியது.
இந்த அழுத்தத்தின் வாயிலாக, முக்கிய ஆயுதக் குழுக்களில் அநேகமானவற்றை, அவற்றின் அதிருப்திக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர இந்தியாவால் முடிந்திருந்தாலும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சம்மதிக்க வைப்பது, அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பேச்சுவார்த்தைகளில் சுத்தமாக நம்பிக்கையற்றிருந்ததுடன், ஆயுத வழியில் சுதந்திர தனித்தேசத்தை வென்றெடுப்பதில் உறுதியாக இருந்தார். பிரபாகரனின் இந்த மனநிலையை, ஆரம்பத்திலிருந்தே இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தாலும், காலவோட்டத்தில் அதைத் தம்மால் மாற்றவிட முடியும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என, தனது நூலொன்றில் நாராயண் ஸ்வாமி குறிப்பிடுகிறார்.
ஆனால் தற்போது இந்த விடயத்தை ஆறுதலாக அணுகுவதற்கான நேரம் இருக்கவில்லை. ஒரு மாதகாலத்துக்குள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டியிருந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு எவ்வாறெனினும் அழைத்து வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்தது.
ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்துவிட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவராவிட்டால், அது இந்தியாவுக்குப் பெரும் தோல்வியாக அமையும். பிராந்தியத்தின் பெரியண்ணனாகச் செயற்பட்ட இந்தியாவுக்கு, அது ஏற்புடையதொன்றாக இருக்காது, ஆகவே, தன்னுடைய ஒட்டுமொத்தப் பலத்தையும் பிரயோகிக்க இந்தியா தயாரானது.
விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்தித்த இந்தியாவின் உளவுத்துறையான “றோ”வின் அதிகாரிகள், திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதைத் தவிர பிரபாகரனுக்கு வேறு வழியில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறினரெனவும், அவ்வாறு பிரபாகரன் சம்மதிக்காவிட்டால், இந்தியாவின் நிலமும் கடலும், இனி அவர்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்காது என்று கூறினரெனவும், நாராயண் ஸ்வாமி பதிவுசெய்கிறார். அதாவது, திம்புவுக்கு விடுதலைப் புலிகள் வராவிட்டால், இந்தியாவில் விடுதலைப் புலிகள் செயற்படமுடியாது என்ற அச்சுறுத்தலை அவர்கள் வௌியிட்டிருந்தார்கள்.
அன்றைய சூழலில், இந்தியாவின் ஆதரவின்றித் தனித்துச் செயற்படத்தக்க வகையில் எந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவும் இருக்கவில்லை. ஆகவே, விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இது அவர்களது இருப்பு, நிலைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக, தற்போது மாறியிருந்தது. இந்தியாவின் இந்த மிரட்டல், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வேறு தெரிவுகளை வழங்கவில்லை.
மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதையும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சில விரும்பியிருக்கவில்லை. தமிழர் பிரச்சினை தொடர்பில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எந்தத் தொடர்புமில்லை என்று, றோ அதிகாரிகளிடம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டாரெனவும், அதற்குப் பதிலளித்த றோ அதிகாரிகள், “உங்களை நாம், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லவில்லை, பேச்சுவார்த்தை மேசைக்கு வரத்தான் சொல்கிறோம்” என்று கூறினரெனவும், நாராயண் ஸ்வாமி குறிப்பிடுகிறார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பேசுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவருடைய அடையாளமாகவே மாறியிருந்த மீசையை மழித்துவிட்டு வந்திருந்தாரெனவும், அது ஏன் என்று வினவியவர்களிடம், “போராடும் போதுதான் மீசை தேவை; பேச்சுவார்த்தைக்குப் போவதென்றால் நாம் மீசையை மழித்துவிட வேண்டும்” என்று குறிப்பிட்டாரென, நாராயண் ஸ்வாமி பதிவுசெய்கிறார்.
இது, பேச்சுவார்த்தை தொடர்பிலான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகப் பார்க்கப்பட வேண்டியதொன்று. வேண்டாவெறுப்பாக, பிராந்திய வல்லாதிக்க சக்தியின் மிரட்டலின் காரணமாகப் பேச்சுவார்த்தை மேசைக்கு ஒரு தரப்பு செல்லும் போது, அந்தப் பேச்சுவார்த்தை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குரியதே.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் முடிவு
இதனிடையே, “சில நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தைக்கு நாம் வருவோம்” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் குறிப்பிட்ட போது, இந்திய அதிகாரிகள் அதனையும் மறுத்திருந்தனரென, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்திய இந்திய உளவுத்துறையான றோவின் தலைவராக இருந்த கிறீஷ் சக்ஸேனா, பேச்சுவார்த்தைகள், எதுவித நிபந்தனைகளுமின்றியே இடம்பெறும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்ததோடு, ஆயுதக்குழுக்கள் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்காவிட்டால், இந்திய எல்லைக்குள் அவை செயற்பட முடியாது என்ற அச்சுறுத்தலையும் உறுதிபடத் தெரிவித்ததுடன், மறுநாள் அவர்களது முடிவை அறிவிக்க வேண்டுமென்றும் ஆணித்தரமாக அறிவித்திருந்தார்.
இது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இன்னும் அழுத்தத்தினுள் தள்ளியிருந்தது.
இது பற்றி ஏனைய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பிரபாகரன், “இந்த நிலையில் நாம், இந்தியாவை விரோதித்துக் கொள்ள முடியாது. இந்தியாவோடு நாம் பயணிப்பது அவசியம். திம்புவுக்கு நாம், நிபந்தனையின்றியே செல்ல வேண்டும். எமக்கும் இந்தியாவுக்குமிடையில் பிரச்சினையை ஜே.ஆர் உருவாக்க, நாம் அனுமதிக்கக் கூடாது. ராஜிவும் பண்டாரியும், ஜே.ஆரை நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையை நாம் தகர்க்க வேண்டும்” என, தந்திரோபாய ரீதியாக அறிவுறுத்தினாரென, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.
மேலும், இதனை தந்திரோபாயமாகக் கையாள வேண்டும் என்ற வகையில், நிபந்தனையின்றி அங்கு சென்றுவிட்டு, அங்கு சென்று, “தமிழ் மக்களின் உரிமைகளில் உறுதியாக இருப்போம்” என்ற திட்டத்தையும் முன்வைத்தார்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளைச் சந்தித்துப் பேசிய இந்திய வௌியுறவுத்துறைச் செயலாளர் றொமேஷ் பண்டாரி, திம்புவில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பண்டாரி கூறிய முழுவதையும் ஆறுதலாகக் கேட்ட பிரபாகரன், “நான் மரியாதையின்றி மூர்க்கமாக இருக்க விரும்பவில்லை, ஆனால் இலங்கை அரசாங்கத்தை நான் நம்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினாரெனவும், “ஆயினும், நீங்கள் இதற்காக அதீத முயற்சிகள் எடுத்துள்ளமையாலும், ‘அம்மா’ (இந்திரா காந்தி) எங்களுக்காக நிறையவே செய்துள்ளதாலும், நாங்கள் திம்புவுக்கு வருகிறோம்” என்று குறிப்பிட்டாரெனவும், நாராயண் ஸ்வாமி கோடிட்டுக்காட்டுகிறார்.
இறுதியாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியா வெற்றி கண்டிருந்தது. ஆனால் அது, முழுமையான வெற்றியா என்பதும் சந்தேகமே.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது யார்?
திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாகச் சம்மதித்திருந்தாலும், அதன் தலைவரான பிரபாகரனோ, அல்லது அவரின் மதியுரைஞரான அன்ரன் பாலசிங்கமோ, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக இருக்கவில்லை, மாறாக தம்முடைய அமைப்புச் சார்ந்து ஃபிரான்ஸிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த திலகர் என்ற பொறுப்பாளர் கலந்துகொள்வார் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் கலந்துகொள்வதே போதும் என்ற மனநிலையில் இந்தியா இருந்திருக்க வேண்டும் போலும், அவர்கள், இது தொடர்பில் விடுதலைப் புலிகளை மேலும் வற்புறுத்தவில்லை. இதுபோலவே, மற்றைய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சார்பாகவும், அவர்களது இராணுவத் தலைமைகளின்றி, அரசியல் தலைமைகளே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவிருந்தனர்.
ஜே.ஆரும், இலங்கை அரசாங்கம் சார்பாக தன்னுடைய சகோதரரும் இலங்கையின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவையே பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பிவைக்கவிருந்தார். எந்தவித அரச பதவிகளிலுமில்லாத, அரசாங்கத்தோடு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒருவரை ஜே.ஆர் அனுப்பிவைப்பது தொடர்பில் கேள்விகள் எழுந்தன.
இந்தியாவும் இது தொடர்பில் கரிசனம் கொண்டதாக, தன்னுடைய நூலொன்றில், இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகராக அப்போது இருந்த ஜே.என்.டிக்ஷிட் பதிவு செய்கிறார். அமைச்சர் அல்லது அரசமைப்பு ரீதியில் வலுவுள்ளவர் அல்லாத ஒருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதானது, இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்பது, இந்தியாவின் கவலையாக இருந்தது. இந்தக் கவலையை ஜே.என். டிக்ஷிட், ஜே.ஆரிடம் பகிர்ந்துகொண்ட போது, அதற்குப் பதிலளித்த ஜே.ஆர், எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன தனக்கு மிக நம்பிக்கையானவர் என்றும், அரசமைப்புத் தொடர்பில் அவர் தேர்ந்த நிபுணர் ஒருவர் என்றும், மேலும் அவர் ஜனாதிபதியின் விசேட தூதுவராக அனுப்பப்படுதால், அவருடைய தகுதி, வலு பற்றிய கேள்விகள் அவசியமில்லாதன என்றும் பதிலளித்திருந்தாரென, ஜே.என்.டிக்ஷிட் பதிவுசெய்கிறார்.
ஆகவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களினதும் சரி, இலங்கை அரசாங்கத்தினதும் சரி, வலுவுள்ள தலைமைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. நேரடியாக அரச பதவியேதும் வகிக்காத ஒருவரின் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவொன்றையே ஜே.ஆர் அனுப்பவிருந்தமையே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதைத் தவிர்க்க முக்கிய காரணம் என்று, ரீ.சபாரட்ணம், தன்னுடைய நூலொன்றில் கோடிட்டுக் காட்டுகிறார்.
இது, இருதரப்பும் இந்தப் பேச்சுவார்த்தைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வௌிப்படுத்தி நிற்பதாகவே நாம் கருதவேண்டியதாக இருக்கிறது.
விவாகரத்து வேண்டும் இருதரப்பை, மூன்றாந்தரப்பொன்று நிர்ப்பந்தித்து, வற்புறுத்திக் கலந்துரையாடச் செய்வதைப் போலத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையவிருந்தன என்றால், அது மிகையாகாது.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில், அதன் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதில் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட அமைப்பாக, தமிழர“ ஐக்கிய விடுதலைக் கூட்டணியே இருந்தது எனலாம்.
ஆனால் இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், பேச்சுவார்த்தைகள் மட்டுமே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இருக்கின்ற ஒரே வழி என்றும், மேலும் இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த அவர்கள், இதில் முழு அக்கறை காட்டியதில் எந்த வியப்புமில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
Average Rating