இந்திய ரிசர்வ் வங்கி எதிர் மத்திய அரசாங்கம்: இருபதுக்கு-20 போட்டியா, டெஸ்ட் போட்டியா?(கட்டுரை)
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் அந்நாட்டு மத்திய அரசாங்கத்துக்கும் நடைபெறும் பனிப்போர், நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் “நாட்டின் மத்திய வங்கியின் சுயாட்சி உரிமையில் மத்திய அரசாங்கம் தலையிடுகிறது” என்று, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.
நாட்டின் பணக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு வங்கிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி, 1934ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைந்த இந்த வங்கிக்கு, தன்னாட்சி அதிகாரம் உண்டு என்றாலும், முழுவதுமாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இல்லை.
அவ்வப்போது பல்வேறு திருத்தங்கள் இந்தச் சட்டத்துக்கு வந்தாலும், 1949இல் கொண்டு வரப்பட்ட முக்கியமான திருத்தம், இச்சட்டத்தில் உள்ள ஏழாவது பிரிவு. இத்தனை ஆண்டுகளாக, யாருக்கும் தெரியாமல் இருந்த இந்தப் பிரிவு, இப்போது நாட்டில் உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. குக்கிராமங்களுக்குக் கூட, “ஏழாவது பிரிவு” என்பது, ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் மத்திய அரசாங்கம் தலையிடும் அதிகாரம் என்பது வெளிப்பட்டுவிட்டது.
அந்த ஏழாவது பிரிவு என்ன சொல்கிறது? ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்துக்குத் தேவையான கட்டளைகளை, மத்திய அரசாங்கம் பிறப்பிக்கலாம்; அதாவது, ரிசர்வ் வங்கிக்கு நிர்வாகம் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று, அப்பிரிவு கூறுகிறது.
இதுவரை இருந்த மத்திய அரசாங்கங்கள், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்கள், பெரும்பாலும், “அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் ரிசர்வ் வங்கி இருக்கிறது” என்பதைப் புரிந்து கொண்டார்கள். மத்திய அரசாங்கத்துடன் உரிய ஆலோசனை நடத்தி, அரசாங்கத்தின் கொள்கைகளையும் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றால் போல் வங்கிப் பணிகளை ஒழுங்குபடுத்த, கொள்கைகளை அறிவிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் முன்வந்தனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் கூட, “ரிசர்வ் வங்கிக்குக் கட்டளைகள் பிறப்பிக்க மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது” என்றே கூறி வந்தார். இப்போதுள்ள ஆளுநர் உர்ஜித் பட்டேல், மத்திய அரசாங்கத்துக்கு இணக்கமானவர்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரகுராம் ராஜன் மறுத்தாலும், உர்ஜித் பட்டேல் அதற்கு ஆதரவாகவே இருந்தார். அதே நேரத்தில், வங்கியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளிலும் மத்திய அரசாங்கம் தலையிடுவது, அவருக்குப் பிடிக்கவில்லை.
அதனால்தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, “வங்கியின் நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் தலையிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்” என்று ஒரு கூட்டத்தில் பேசி, “அரசாங்கம், இருபதுக்கு-20 கிரிக்கெட் விளையாட விரும்புகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியோ, டெஸ்ட் போட்டி விளையாட விரும்புகிறது” என்றார். மத்திய அரசாங்கத்தின் குறுக்கீட்டை முதலில் போட்டு உடைத்தவர் வைரல் ஆச்சர்யாதான் என்பதால், அவருக்கு எதிரான பிரசாரங்களும் தொடங்கி விட்டன.
துணை ஆளுநர் ஒருவர், எப்படி இப்படி வெளிப்படையாகப் பேட்டியளிக்கலாம் என்று எதிர்ப்புக் குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அலுவல் சாராத பணிப்பாளராக இருக்கும் எஸ். குருமூர்த்தி, இது தொடர்பாக முறைப்பாடே கொடுத்திருக்கிறார். இது தொடர்பில் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கி விட்டன; விவாதங்களுக்கும் பஞ்சமில்லை.
ஆனால், ஏழாவது பிரிவில் உள்ள முக்கிய விடயத்தை யாரும் தெரிவிக்க மறுக்கிறார்கள். அந்தப் பிரிவில், மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி மத்திய அரசாங்கம் செய்யவேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது, “ரிசர்வ் வங்கியின் ஆளுநரைக் கலந்தாலோசித்த பிறகே (after consultation), மத்திய அரசாங்கம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறுகிறது.
ஆகவே, மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் “கலந்தாலோசனைக்கு” பிறகு என்று இருப்பதால், தன்னிச்சையாகக் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை, மத்திய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றம் அளித்து விடவில்லை என்பதைத்தான் அறிய முடிகிறது. ஆகவே, மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் அளித்துள்ள பிரிவில் கூட, ரிசர்வ் வங்கி ஆளுநரின் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, ரிசர்வ் வங்கியை வழிநடத்தும் 21 உறுப்பினர்கள் கொண்ட “மத்திய நிர்வாகக் குழு”, முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தால் தான் நியமிக்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரம், ரிசர்வ் வங்கியைப் பொறுத்தமட்டில் “ஆளுநரின் ஆலோசனைக்குப் பிறகு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடக்கும் பனிப்போரைப் பொறுத்தமட்டில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு வரி சேவைச் சட்டம் (ஜி.எஸ்.டி) ஆகியவற்றை அமுல்படுத்தி விட்டு, தேர்தலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில், மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் இருக்கிறது. இந்த முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறும் கருத்தை முறியடித்து, “புரட்சிகரமான இந்தத் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்பதை நிலைநாட்ட வேண்டிய அவசரம், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் இருக்கிறது.
குறிப்பாக பெற்றோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை, பா.ஜ.கவின் தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. பா.ஜ.க கூறுவது போல், காங்கிரஸ் காலத்தில் அளிக்கப்பட்ட கடன்களால் ஏற்பட்ட வராக்கடன் பிரச்சினையில், “கிங் பிஷர்” விஜய் மல்லையா, வைர வியாபாரி நீராவ் மோடி போன்றோர் நாட்டை விட்டு தப்பிச்சென்று விட்ட பழியை, பா.ஜ.க அரசாங்கம் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள், தேர்தல் அறிவிப்புகள், சிறு குறு தொழில்கள் வளர்ச்சி போன்றவற்றுக்காக ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி நினைப்பது இயற்கையே. ஆனால் அதற்கான களத்தை, மோதல் போக்கில் அமைத்துக் கொள்ளாமல் ரிசர்வ் வங்கியைத் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு செயற்பட வைப்பதில் மத்திய அரசாங்கம் தவறி விட்டது என்பதே, இப்போதைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
அதில் உண்மையும் இருக்கிறது. பா.ஜ.க அரசாங்கம் அமைந்தவுடன், மத்தியில் இருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடனும், இதே மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர் தன்னை விடுவித்துக் கொண்டு, ரிசர்வ் வங்கியிலிருந்து வெளியேறும் போது அளித்த பேட்டிகளில், அவர் எழுதிய “I do what I Do” என்ற புத்தகத்தில் கூட, “அரசாங்கம், தகுதி வரிசைப்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் எந்த இடத்தில் வருகிறார் என்பது வரையறுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரவைச் செயலாளரின் சம்பளத்துக்கு இணையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சம்பளம் வாங்குகிறார். ஆகவே பொதுவாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒருவர், தனது முடிவுகள் பற்றி பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றுதான் கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் போது, இந்தக் கூற்றை ஒப்புக் கொண்டது போலவும் ஒப்புக் கொள்ளாதது போலவும் மத்திய அரசாங்கம் நடந்து கொண்டது. அதனால் ஏற்பட்ட இறுக்கத்தில் அவர், ரிசர்வ் வங்கியை விட்டு வெளியேறினார்.
அதே நேரத்தில், அவருக்குப் பதில் நியமிக்கப்பட்ட ஆளுநர் உர்ஜித் பட்டேல், ரகுராம் ராஜன் போன்ற நினைப்பில் இருப்பார் என்று, மத்திய அரசாங்கம் தொடக்கத்தில் நம்பவில்லை என்றே தெரிகிறது. இவர், அரசாங்கத்துடன் ஒத்துப் போவார் என்று மத்திய அரசாங்கம் நம்பிக் கொண்டிருந்ததாகவே, இப்போது ஏற்பட்டுள்ள பனிப்போரின் பின்னணியில் தெரிகிறது.
பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்த ஆட்சியில், “தன்னாட்சி பெற்ற அமைப்புகள்” எல்லாம் தங்களின் சுயாதீனத்தை இழந்து வருகின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றன. இது போன்ற நேரத்தில் தான், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா அளித்த பேட்டி, மத்திய அரசாங்கத்துக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது.
“ரிசர்வ் வங்கி, மத்திய அரசாங்கத்துக்குள் தன்னாட்சி அதிகாரம் பெற்றதுதான்” என்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சார்பில் அறிக்கை வெளியிட்டு, “அந்தத் தன்னாட்சியை மத்திய அரசாங்கம் கெடுக்கவில்லை” என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களை சந்திக்க வேண்டிய நேரத்திலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையே நடக்கும் மோதல், தடுத்திருக்கப்பட வேண்டியது. நாட்டின் பொருளாதார முன்னேற்றம் கருதி, ரிசர்வ் வங்கி ஆளுநரும் மத்திய அரசாங்கமும் இணக்கமான ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது, பொது நலனில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இரு தரப்புகளும் உணருமா அல்லது ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் வெளியேறுவாரா என்பதுதான், அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.
Average Rating