இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு?(கட்டுரை)

Read Time:13 Minute, 33 Second

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

“அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது.

அதுபோல, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதிக்கும், அந்தக் கவலையும் அதிர்ச்சியும் இருக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன இந்த முடிவைத் திடீரென அறிவிக்கவில்லை. அது, நீண்டதொரு செயல்முறையின் விளைவாகவே நடந்திருக்கிறது. ஆனால், அதை யாரும் சரியாக ஊகித்துக் கொள்ளவில்லை; இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று கணிக்கவில்லை.

“மஹிந்தவுடன் மீண்டும் இணையப் போகிறார்” என்றும், “மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்துப் பேசினார்” என்றும், “சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன” என்றும், பலவகையான செய்திகள், அவ்வப்போது வெளியாவதும், பின்னர் அவை மறைந்து போவதும், வழக்கமான ஒன்றாகவே இருந்தது.

இந்தச் செய்திகளின் பின்னணியில் இருந்தே, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு அரங்கேறியது. ஒவ்வொரு சந்திப்பும் பேச்சும், இதற்கான அடித்தளத்தை வலுப்படுத்தி வந்திருக்கின்றன. சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து, காத்திருந்து, காயை நகர்த்தி இருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமக்கும் இடையிலான அரசியல் உறவுகளை அவர், ‘பொருந்தாத திருமணம்’ என வர்ணித்திருக்கிறார். பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே, தமக்குள் ஒத்துப்போகாத நிலை ஏற்பட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலாசார வேறுபாடுகளும் இருந்தன என்ற சொல்லையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். இது, நாட்டின் அரசியலில், இரு பெரும் கலாசாரங்கள் கோலோச்சுகின்றனவோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன. இதன் மூலம், அவர் சொல்ல வருகின்ற செய்தியும் மிகவும் வித்தியாசமானது.

எனவே, மைத்திரிபால சிறிசேன சொல்வது போன்று, இது ஒன்றும், மைத்திரிபால சிறிசேனவையும் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கொலை செய்யும் சதித்திட்டம் என்று சொல்லப்படும் விடயம் அம்பலமானதால் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல! அந்தக் கொலைச் சதித்திட்டம் கூட, ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தின், ஓர் அங்கமாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம், இப்போது வலுத்திருக்கிறது. இப்போது எல்லாமே, தலைகீழாக மாறியிருக்கின்றன.

2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் அதற்கான உழைப்பும் அசாதாரணமானவை. அன்றைய சூழலில் அது, தற்கொலைக்கு ஒப்பானதாகவே வர்ணிக்கப்பட்டது.

அதையும் தாண்டி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகத் துணை நின்றவரான மைத்திரிபால சிறிசேன, அப்படியே தலைகீழ் நிலையை அடைந்திருக்கிறார் என்றால், அரசியலில் முக்கியமாகக் கற்க வேண்டிய பாடம் இது. தவறுகளில் இருந்தே பாடங்கள் கற்கப்படுகின்றன.

அந்தவகையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவில், தாக்கம் செலுத்திய தவறுகளைக் கண்டறிய வேண்டியது, ஐ.தே.க போன்ற உள்ளூர் கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஆட்சிக் கவிழ்ப்புக்காகத் துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கும் அவசியமானது.

பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெற்று ஜனாதிபதியானதும், அவரைச் சுற்றிக் கையாளப்பட்ட அரசியல் தான், இந்த நிலைக்கு, அவரை இட்டுச் சென்றதாகத் தோன்றுகிறது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், நாடாளுமன்றத்தில் வெறும் 47 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ஆக்கப்பட்டார். பெரும்பான்மை பலமில்லாத ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காக, சர்வதேச நிகழ்ச்சி நிரலுடனும், சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களின் ஆசியுடனும் அரங்கேற்றப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மீள் வருகை, எதிர்பார்க்கப்படாத தருணம் அது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, அந்தத் தருணத்தில், தமது கட்சியைச் சேர்ந்தவர் தான் ஜனாதிபதி என்ற பெருமை தேவைப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குப் பதவிகளும் வசதிகளும் தேவைப்பட்டன. அதனால், சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி, மஹிந்தவிடம் இருந்து பிடுங்கப்பட்டு, மைத்திரிபால சிறிசேனவிடம் கொடுக்கப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தும் கூட, அரசாங்கத்தில், பெரும் பங்கை எடுத்துக் கொண்டு, ஐ.தே.க தன்னைப் பலப்படுத்திக் கொள்ளத் தொடங்கியபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களால், அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள், மைத்திரிபாலவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர் இணங்கத் தயாராக இல்லாதபோது, பலர் மஹிந்தவின் பக்கம் திரும்பினர். அவர்கள் மஹிந்தவை உசுப்பேற்றி உசுப்பேற்றி, மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வந்தனர்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த வந்து, அதைப் பலப்படுத்துவது, சவாலானதாக இருந்தது. அது, ஐ.தே.கவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதினார். அதனால், மைத்திரியை வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உடைவை ஏற்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்கவின் சொற்படி ஆடும் பொம்மையாகவே, மைத்திரிபால சிறிசேன நடந்து கொண்டார். அதற்கு மஹிந்தவின் மீதான அச்சமும் ஒரு காரணம். சுதந்திரக் கட்சியை உடைத்து, அதைப் பயன்படுத்தியே, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொண்டார்.

சுதந்திரக் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பது பாதுகாப்பானது என்றும், அதன் மூலம், புதிய அரசமைப்பை நிறைவேற்றலாம் என்று போடப்பட்ட அடுத்த கணக்கும் இப்போது பிசகி விட்டது.
ஒரு வகையில், இணைய முடியாத துருவங்களாகக் கருதப்பட்ட ஐ.தே.கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அரசியல் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்ட போதும், அது வெறும் கற்பனையாக முடிந்துள்ளது. இந்த முயற்சி, மோசமான விளைவுகளையே தரும் என்ற பாடம், இப்போது கற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

2015 ஓகஸ்டில் இந்தக் கூட்டு அரசாங்கம் அமைக்கப்படாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை அல்லது ஜே.வி.பியின் ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைத்திருந்தால், இந்தநிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.

மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சிக்குத் தலைமையேற்க வைக்கப்பட்டதும், அவருடன் கூட்டணி அமைக்க, ஐ.தே.க முடிவு செய்ததும் தான், பெரும் பிரச்சினைக்குக் காரணமாகி இருக்கின்றன.

பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, பொதுவானவராகச் செயற்பட வேண்டும்; கட்சி சார்புடையவராக இருக்கக் கூடாது என்று, அப்போதே தீர்மானிக்கப்பட்டிருந்தால், மைத்திரிபால சிறிசேன, இந்தளவுக்குப் பலத்தைப் பெற்றிருக்க முடியாது,

அப்படியே, மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் கூட, “கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஒரு கட்சி விலகியதால், அமைச்சரவை கலைந்து விட்டது”, “பிரதமர் வலுவிழந்து போனார்” என்று காரணங்களை, அவரால் அடுக்கியிருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி போன்ற கொள்கை சார் நிலைப்பாடுகளில் உறுதியான தரப்புகளுடன், ஐ.தே.க கூட்டணி சேர விரும்பவில்லை. அது கடினமானதும் நிறைவேற்ற முடியாததுமான பல வாக்குறுதிகளுடன் போராட வேண்டியதுமாக இருக்கும் என்பது, அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் அந்தத் தெரிவை விட, சுதந்திரக் கட்சியை அதிகம் நம்ப முற்பட்டார் ரணில். அது, சுதந்திரக் கட்சியையும் பலவீனப்படுத்தும் என்றும் கருதினார். ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தும் அந்தத் திட்டம் தான், அவரை இப்போது நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

சிங்களத் தேசியவாத அரசியல் கட்சிகள், என்ன தான் தமக்கிடையில், ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டாலும், அது நிரந்தரமானதாக இருக்க முடியாது என்ற உண்மையை, இப்போதாவது விளங்கிக் கொள்வது முக்கியம். அதாவது, இருபெரும் பேரினவாதக் கட்சிகளுமே, ஒன்றை ஒன்று விழுங்கும் பாரம்பரியத்தில் ஊறி வந்தவை; அவற்றின் அடிப்படைக் குணாம்சங்களை மாற்ற முடியாது.

அந்த அடிப்படைக் குணாம்சங்கள் மாற்றப்படாத சூழலில் உருவாக்கப்படும் எந்தத் தேசிய அரசாங்கமும், வெற்றிகரமான இலக்குகளை அடைய முடியாது என்ற பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது இந்த நிகழ்வு.

மைத்திரிபால சிறிசேனவை, அவருக்குப் பொருத்தமான இடத்தில் அமர வைக்கத் தவறியது தான், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த விதத்தில், ரணிலும் சந்திரிகாவும் மாத்திரமன்றி, அவர்களுக்குத் துணை நின்ற புறத்தரப்புகளும் கூட, இந்த நிலைமைக்கான பொறுப்பில் இருந்து, விலக முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ் கட்டிகளை அவாய்ட் பண்ணுங்க..!!(மருத்துவம்)
Next post செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா?(அவ்வப்போது கிளாமர்)