குற்றிய ஊசியானதா சி.பி.ஐ சர்ச்சை?(கட்டுரை)
இந்தியாவின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பான ‘சி.பி.ஐ’, அதாவது, மத்திய புலனாய்வுத் துறை, மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தப் புலனாய்வுத் துறை அமைப்பின் பணிப்பாளர் அலோக் வர்மா, திடீரென்று, நள்ளிரவில் மாற்றப்பட்டது, நாட்டின் பல்வேறு விசாரணை அமைப்புகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
“சி.பி.ஐ பணிப்பாளர் மாற்றப்படவில்லை; விடுமுறையில் செல்லத்தான் பணிக்கப்பட்டுள்ளார்” என்று மத்திய அரசாங்கம் கூறினாலும், இந்த மாற்றம், நள்ளிரவில் நடந்தது ஏன் என்று, எதிர்க்கட்சிகள் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.
சுதந்திர இந்தியாவில், நள்ளிரவில் ஒரு சி.பி.ஐ பணிப்பாளரை மாற்றியது, இதுதான் முதல் நிகழ்வாக இருக்கும்.
“சி.பி.ஐ கூண்டுக்கிளி போல் இருக்கிறது” என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, உச்சநீதிமன்றமே கண்டித்தது. அப்போது இருந்த சி.பி.ஐ பணிப்பாளர் ரஞ்சித் சின்கா, விசாரணை வலயத்துக்குள் வர நேரிட்டது.
இப்போது, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சி.பி.ஐ பணிப்பாளரே உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, “என்னைப் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டதை, இரத்துச் செய்ய வேண்டும்” என்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டில் உள்ள பல அதிகாரிகள் மீது, இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டிய சி.பி.ஐ பணிப்பாளர் அலோக் வர்மா மீது, அதே பணியகத்தில் சிறப்பு பணிப்பாளராகப் பணிபுரியும் ராகேஸ் அஸ்தானா புகார் கொடுத்திருக்கிறார். சி.பி.ஐ பணிப்பாளரோ, சிறப்புப் பணிப்பாளர் ராகேஸ் அஸ்தானா மீது, வேறோர் ஊழல் வழக்கில் ‘எப்.ஐ.ஆர்’ போட்டிருக்கிறார்.
இப்படியோர் இக்கட்டான சூழ்நிலையில்தான், பிரதமர் அலுவலகம் தலையிட்டது. சி.பி.ஐ பணிப்பாளரை அழைத்துப் பேசியது. “நிலைமை எல்லை மீறிப் போய் விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள். சி.பி.ஐ என்ற அமைப்பின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது” என்று எச்சரித்ததாக அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனாலும், சிறப்பு பணிப்பாளர் ராகேஸ் அஸ்தானாவுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கில், முதலில் ‘டி.எஸ்.பி’ ஒருவரைக் கைது செய்தது சி.பி.ஐ. அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு தடை கேட்டு, அவரே டெல்லி உயர்நீதிமன்றம் போனார். ஆனால், டெல்லி உயர்நீதிமன்றமோ, ‘விசாரணைக்குத் தடையில்லை’ என்று கூறி விட்டது.
அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட ‘டி.எஸ்.பி’க்கு, ஒரு வாரகாலம் சி.பி.ஐ பாதுகாப்பில் வைத்து, விசாரணைக்கான அனுமதியையும் கொடுத்தது விசாரணை நீதிமன்றம். இந்த சி.பி.ஐ பாதுகாப்பில் வைத்து விசாரணை, பல சர்ச்சைகளுக்கு கொடியசைத்து விடும் என்ற கருத்து எங்கும் பரவியது.
அந்தச் சந்தர்ப்பத்தில்தான், நள்ளிரவில் சி.பி.ஐ பணிப்பாளரும், சிறப்பு பணிப்பாளரும் அதிரடியாக விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது மிகப்பெரிய சூறாவளியை இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது.
“நள்ளிரவில் மாற்றம் ஏன்”? என்ற கேள்வியை எழுப்பி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும் ரகளையில் ஈடுபட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள சி.பி.ஐ அலுவலகங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. சி.பி.ஐ சிறப்பு பணிப்பாளர் ராகேஸ் அஸ்தனாவைக் காப்பாற்ற, மத்திய அரசாங்கம் முனைவது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆனால், இந்த மாற்றத்துக்கான வேறு பின்னணியும் இல்லாமல் இல்லை. முதலில், ‘குஜராத் கேடர்’ அதிகாரியான ராகேஸ் அஸ்தனாவை, சி.பி.ஐ சிறப்பு பணிப்பாளராகக் கொண்டு வந்திருந்தமை அலோக் வர்மாவுக்குப் பிடிக்கவில்லை. இதற்குத் தொடர்ந்து அவர், எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
சி.பி.ஐயின் வழக்கு விசாரணைகளை மேற்பார்வையிடும் மத்திய விழிப்புணர்வு ஆணையக் கூட்டங்களில் சி.பி.ஐ சார்பாக ராகேஸ் அஸ்தனா கலந்து கொள்வதையும் அலோக் வர்மா எதிர்த்தார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம், ராகேஸ் அஸ்தனாவுக்கு இருந்த நெருக்கம், அலோக் வர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது முதற்காரணமாகும்.
இரண்டவதாக, “ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு” என்று, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் போர்க்கொடி தூக்கினர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இது தேர்தல் பிரசாரமாக மாறியிருக்கிறது. பா.ஜ.கவின் முன்னாள் தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, அருண்சோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் உள்ளிட்டோர் ரபேல் ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ இடம் புகார் கொடுக்கச் சென்றார்கள்.வழக்கமாகப் புகாரை, அங்குள்ள யாராவது ஓர் அதிகாரி பெற்றுக் கொள்வார்.
ஆனால், ரபேல் புகாரை சி.பி.ஐ பணிப்பாளர் அலோக் வர்மாவே நேரடியாகப் பெற்றார். அது மத்திய அரசாங்கத்துக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொடுக்கும் புகாரை, எப்படி சி.பி.ஐ பணிப்பாளர் நேரில் வாங்கலாம் என்ற கோபம் பிறந்தது.
மூன்றாவதாகத்தான், மாட்டிறைச்சி ஏற்றுமதி தொடர்பான ஊழல் புகாரில், ராகேஸ் அஸ்தனா மீதே வந்த ஊழல் புகாராகும். இந்த மூன்று காரணங்களும் இன்றைக்கு சி.பி.ஐ அமைப்புக்குள் சுனாமியை ஏற்படுத்தி, அதன் நன்மதிப்புக்கு உலை வைத்திருக்கிறது.
சி.பி.ஐ அமைப்பின் பணிப்பாளரான அலோக் வர்மா, உண்மையிலேயே சுயாதீனமாக இயங்குகிறார் என்பது, மத்திய அரசாங்கத்துக்குத் திருகுவலியாக மாறி விடுமோ என்ற சந்தேகம் முளைத்தது. ரபேல் ஊழல் புகார் சி.பி.ஐ யிடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக, அந்தப் புகாரை, சி.பி.ஐ பணிப்பாளரே நேரில் பெற்றதால், மத்திய அரசாங்கத்துக்குச் சந்தேகம் மேலும் வலுத்தது.
அதனால், ராகேஸ் அஸ்தனா விவகாரத்தை முன்வைத்து சி.பி.ஐ பணிப்பாளரை மாற்றி விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாகும்.
“ரபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே, பிரதமர் இந்த மாற்றத்தை செய்திருக்கிறார்” என்று, ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் முக்கியமாக, அரசமைப்பு மீறப்பட்டுள்ளது என்று, அனைவரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏனென்றால், சி.பி.ஐ பணிப்பாளர் பதவி, இரண்டு வருடங்களுக்கான பணி பாதுகாப்பு உள்ள பதவி. “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு மூலம் பரிந்துரைக்கப்பட்டு, அவர் நியமிக்கப்படுகிறார். ஆகவே, இவரை மாற்றுவதற்கு முன்பு, இந்த மூவரடங்கிய குழுவின் அனுமதி பெற வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் வாதம்; சட்டமும் கூட இதுவே!
ஆனால், மத்திய அரசாங்கமோ, ‘டெல்லி ஸ்பெஷல் பொலிஸ் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டம்’ என்ற சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் படி, செயற்பட்டு, இரண்டு அதிகாரிகளும் விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியிருக்கிறது.
இவர்களை மாற்ற, மத்திய அரசாங்கத்துக்கு தன்னிச்சையான அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு புறமிருக்க, சி.பி.ஐ பணிப்பாளரை மாற்றுவதற்கு, மத்திய விழிப்புணர்வு ஆணைக்குழு கொடுத்த பரிந்துரை, அதன் அதிகார வரம்பில் இல்லை.
ஏனென்றால், இந்த ஆணைக்குழுவுக்கு, வழக்கு விசாரணைகளின்போது, சி.பி.ஐக்கு அறிவுரைகள் வழங்க அதிகாரம் இருக்கிறதே தவிர, சி.பி.ஐ பணிப்பாளரை விடுமுறையில் செல்லப் பரிந்துரைக்கும் அதிகாரம் சி.பி.ஐ அமைப்பைத் தோற்றுவித்துள்ள சட்டத்தில் இல்லை.
சி.பி.ஐயில் பணி புரியும் அதிகாரிகளின் நிர்வாக அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்திடம் மட்டும் உண்டு என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அதிகாரமும் சி.பி.ஐ பணிப்பாளர் விடயத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில்தான், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது.
ஆகவே, மத்திய விழிப்புணர்வு ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், சி.பி.ஐ பணிப்பாளரை விடுமுறையில் செல்ல, மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக உத்தரவிட்டது, சட்டத்தின் முன்பு சர்ச்சையாகி நிற்கிறது.
‘சி.பி.ஐ பணிப்பாளர் மாற்றல் சர்ச்சை’, மிக உயர்ந்த விசாரணை அமைப்பின் நம்பகத்தன்மையில், மிக மோசமான தாக்குதலை நடத்தியிருக்கிறது. குறிப்பாக, சிரேஷ்ட ‘டி.ஜி.பி’ ஒருவர் தலைமையில் இயங்க வேண்டிய சி.பி.ஐ, இப்போது ‘ஐ.ஜி’ தலைமையில் தற்காலிகமாக இயங்குகிறது.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு தேர்தல் நேரத்தில், ஊழல் வழக்குகள் உபத்திரவமாக வந்து நிற்கும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், ரபேல் விவகாரத்தை விட, சி.பி.ஐ பணிப்பாளர் மாற்றம் பெரிய தலைவலியாக வந்து நிற்கிறது. ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தோம்’ என்று பா.ஜ.க பறக்க விட்ட பலூனில், குற்றிய ஊசியாக மாறிவிட்டது, சி.பி.ஐ சர்ச்சை.
Average Rating