தாக்குதல் நிறுத்தம்!!(கட்டுரை)
இராஜவரோதயம் சம்பந்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “சத்தியாக்கிரகம், அஹிம்சையைக் கடைப்பிடித்திருந்தால், ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிச்சயமாக ஆயுதவழியில் தனித்துப் பெறப்பட்டிருக்கவே முடியாது. அரசியல் என்பதும், பேச்சுவார்த்தை என்பதும், எந்தவோர் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில், மிக முக்கியமானவை; தவிர்க்கப்பட முடியாதவை.
ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை மேசைக்கு, அதிகாரத்தரப்பை அழைத்து வருவதற்கான அழுத்தம், ஏதாவதொரு போராட்ட வழியில்தான் தங்கியிருக்கிறது.
அது, அகிம்ஷை வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம், ஆயுத வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம்.
மஹாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள், அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டிருந்தார்கள்.
ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு ஆயுத வழி சென்ற சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோரே, காந்தியைவிட முக்கிய காரணகர்த்தாக்கள் என்று கருத்துரைப்போரும் உளர்.
எது எவ்வாறு இருப்பினும், ஆயுத வழியைத்தாண்டி, அஹிம்சை வழியை நாடுவதற்கான மிக முக்கிய நியாயங்களில் ஒன்று, ஆயுதவழியானது இரு தரப்புக்கும் அதிக உயிர்ச்சேதத்தையும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
சுருங்கக்கூறின், ‘கண்ணுக்குக் கண்’ என்பது, குருடான ஓர் உலகத்தையே உருவாக்கும் என்பதாகும். இதுவே நிதர்சனம்.
ஆனால், இதைக் குறிப்பிடும் போது, இன்னொரு கேள்வியும் தொடர்ந்து எழுகிறது. குறித்த, அஹிம்சை வழிப் போராட்டமானது, வெற்றியைத் தராது போனால், அஹிம்சை வழிப்போராட்டங்கள் மறுதரப்பால் உதாசீனப்படுத்தப்பட்டால், சத்தியாக்கிரகங்கள் போதிய அழுத்தத்தை ஏற்படுத்தாவிட்டால், அதன் பின்னர், என்ன செய்வது என்ற கேள்வி எழுவது, தவிர்க்க முடியாதது.
அதேவேளை, அஹிம்சைக்கு மாற்றாக, ஆயுதம் எடுத்துப் பேரழிவுப் பாதையில் தொடர்வதா என்று, மாற்றுக் கேள்வியையும் இங்கு, தவிர்த்துவிட முடியாது. இந்த எதிரிடைகளில், ஒரு சமநிலையைத் தேடுவதில்தான், அரசியல் சாணக்கியம் இருக்கிறது எனலாம்.
சம்மதித்த ஜே.ஆர்; சம்மதிக்காத போராளிகள்
“பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று, 1985 வரை சொல்லிவந்த ஜே.ஆர் அரசாங்கம், இந்திய அழுத்தத்தின் பேரில், ஆயுதந்தரித்த தமிழ் இளைஞர் இயக்கங்களோடு, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருந்தது.
இந்தத் தீர்மானத்தை நிச்சயமாக, தூய மனத்தோடு எடுத்த முடிவு என்று சொல்லமுடியாது. இது ஜே.ஆரின் சாணக்கியம். சில நிபந்தனைகளுடனேயே ஜே.ஆர், இதற்குச் சம்மதித்திருந்தார். அந்த நிபந்தனைகளூடாக, தனக்குச் சார்பாக இந்தியாவிடமிருந்து, சில உறுதிமொழிகளையும் நன்மைகளையும் அவர் பெற்றுக்கொண்டிருந்தார்.
மறுபுறத்தில், தமிழ்த்தரப்பின் நிலை வேறானதாக இருந்தது. ஜே.ஆரைப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைப்பதிலும் தமிழ்த் தரப்பை, குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியாவுக்குச் சற்றே அதிக சிரமமாய் இருந்தது.
இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் ஜே.ஆருடனான பேச்சுவார்த்தைகளின் மீது, நம்பிக்கையற்று இருந்தமையாகும். ராஜீவ் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடுதிரும்பியிருந்த ஜே.ஆர் இங்கு வந்ததும், “எந்தத் தீர்வும் மாவட்ட சபைகளின் அடிப்படையிலேயே அமையும்” என்று கருத்துரைத்திருந்தார்.
ராஜீவிடம், மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு, இலங்கை வந்ததும், மாவட்ட சபைகளே தீர்வு என்று சொன்னது சாணக்கியமா, நேர்மையீனமா என்பது தனித்த விவாதம்.
இது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பில், அமிர்தலிங்கம், ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், “மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டுதான், தீர்வு அமையும் என்று, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜே.ஆர், விமான நிலையத்தில் வைத்துத் தெரிவித்தமையானது, எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜே.ஆரின் விசேட தூதுவராகச் சென்று, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து பேசிய எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்திரா காந்தியிடம் தெரிவித்த போது, “மாவட்ட சபைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவையல்ல” என்று, இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்ததையும் அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார்.
இம்முறை, சற்றே நேரடியாக இலங்கை விவகாரத்தில், இந்தியா செயற்படத் தொடங்கியிருந்தது. ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றே ஆகவேண்டும் என்பதில், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் உறுதியாக இருந்தது.
அதற்கான தொடர் அழுத்தத்தை, இந்திய அரசாங்கம், ஜே.ஆர் மீது வழங்கிக் கொண்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்து சட்டம், நீதி சம்பந்தமான நிபுணர் குழுவொன்றை இந்தியாவுக்கு அழைத்து, அதிகாரப்பகிர்வு தொடர்பிலான, சட்டம், அரசமைப்பு விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை, இந்தியாவின் சட்டம், நீதியியல் நிபுணர்களுடன் நடத்தியது.
இலங்கை சார்பாக, ஜே.ஆரின் சகோதரரும், இலங்கையின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையில் குழுவொன்று, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தது.
இலங்கையிலிருந்து சென்ற சட்டம், நீதியியல் நிபுணர் குழுவானது, இலங்கை அரசமைப்பின் இரண்டாம், மூன்றாம் சரத்துகளுக்குட்பட்ட தீர்வொன்றே வழங்கப்பட முடியும்; அதாவது, ஒற்றையாட்சிக்குள், இலங்கையின் இறைமையைப் பாதிக்காத அரசியல் தீர்வொன்றைப் பற்றியே பேசமுடியும் என்பதில் உறுதியாக இருந்தது.
இந்த விடயத்தில், இந்திய நிபுணர் குழுவும் தன்னுடைய இணக்கத்தை வௌிப்படுத்தி இருந்தது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதுதான், தீர்வுத்திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையானது. இலங்கை தொடர்பிலான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையுடனும் இது ஒத்துப்போனது.
இருதரப்புத் தாக்குதல் நிறுத்தம்
மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியா பெரும் சவாலைச் சந்தித்தது.
1985 மே – ஜூன் மாதங்களில் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே தொடர் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இலங்கையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என்று, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் ஒற்றுபட்ட முன்னணியான, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’ அறிவித்திருந்தது.
ஆகவே, இருதரப்புத் தாக்குதல்களை, ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டியது, இந்தியாவின் முதற்கடமையாக இருந்தது. இருதரப்புத் தாக்குதல் நிறுத்தத்தை இந்தியா, தனது முழு அழுத்தத்தையும் பிரயோகித்து ஏற்படுத்தியது.
அதன்படி, 1985 ஜூன் 18ஆம் திகதி, இலங்கை அரசாங்கமும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இருதரப்புத் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்திருந்தன.
ஆனால், இந்தத் தாக்குதல் நிறுத்தம் தொடர்பில், விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் திருப்தி கொண்டிருக்கவில்லை என்று, தன்னுடைய நூலொன்றில் நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார்.
இதுபற்றி, மேலும் விவரிக்கும் நாராயண் சுவாமி, இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வாரகாலத்தின் பின்னர், இந்தத் தாக்குதல் நிறுத்தத்தை முதலில் தான் எதிர்த்ததாகவும் பின்னர் இந்தியாவின் அதீத அழுத்தத்தின் காரணமாகவே, தன்னுடைய மனது மாற்றப்பட்டதாகவும் இது பற்றித்தான் மகிழ்ச்சிகொள்ளவில்லை என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், பொதுவில் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
மேலும், தமிழ்ப் போராளிகளும் தமிழ் அரசியல்வாதிகளைப் போலவே, திடீரென்று கொழும்போடு சமரசத்துக்கு வந்து விடுவார்கள் என்ற அச்சம், தமிழ் மக்களிடம் இருப்பதை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் புரிந்துகொண்டிருந்தாரெனவும் நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார்.
அதன்படி, “எமது மக்களின் விடுதலையையும் பெருமையையும் வென்றெடுக்கவே, நாம் ஆயுதம் ஏந்தினோம். அந்த விடுதலையையும் பெருமையையும் வென்றெடுக்கும் வரை, ஆயுதங்களைக் கீழே வைக்கப்போவதில்லை” என்று, விடுதலைப் புலிகளின் தலைவர் கூறினாரெனவும் நாராயண் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் ஒன்றைத் தௌிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்; சுதந்திர தமிழீழம் கிடைக்கும்வரை, எமது போராட்டம் தொடரும்” என்று, புலிகளின் தலைவர் கூறினாரெனவும் நாராயண் சுவாமி பதிவு செய்கிறார்.
இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி, நிச்சயமாகத் தோல்வி அடையும் என்பதற்கு, இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இருதரப்பும் அழைக்கப்பட்ட விதமே சான்று பகர்கிறது.
ஜே.ஆர் அரசாங்கத்துக்கோ, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கோ பேச்சுவார்த்தையில் நம்பிக்கையோ, விருப்பமோ இருக்கவில்லை.
மாறாக, ஜே.ஆர் மீது, இந்தியா பிரயோகித்த அழுத்தம் காரணமாகவும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, கிட்டத்தட்ட மிரட்டி வற்புறுத்தியதன் காரணமாகவும்தான் இந்தப் பேச்சுவார்த்தைக்கான அவர்களது சம்மதம் கிட்டியது.
ஒரு தரப்பு, ஒற்றையாட்சிக்குள்ளான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வு என்பதிலும், மறுதரப்பு, சுதந்திரமான தனி நாடு என்பதிலும் உறுதியாக இருக்கும் போது, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்பது, நிச்சயம் சாத்தியமில்லை.
இங்கு இருதரப்பையும் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், செய்யப்பட்டிருக்க வேண்டும். காலத்தால் பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியா இத்தனை அவசரமின்றி, இன்னும் கொஞ்சம் இலாவகமாகக் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
அதேவேளை, ஓடிக்கொண்டிருந்த இரத்த ஆற்றை, உடனடியாக நிறுத்த வேண்டிய காலத்தின் அவசரத் தேவையும் இந்த அவசர முடிவுக்கு, முக்கிய உந்துசக்தியாக இருந்திருக்கும் என்ற நிதர்சனத்தையும் மறந்துவிட முடியாது.
திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்
1985 ஜூன் 18ஆம் திகதி, இருதரப்புகளின் தாக்குதல் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் கூட, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை.
பேச்சுவார்த்தைகளானது கொழும்பில் நடத்தப்படுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தன. ஜே.ஆர் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகள், மூன்றாவது நாடொன்றில் நடத்தப்படுவது பொருத்தமானது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது.
இவற்றைச் செவிமடுத்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி, பேச்சுவார்த்தைகளை பூட்டானில் நடத்தும் முன்மொழிவை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பூட்டானின் மன்னரும், இந்தப் பேச்சுவார்த்தையை பூட்டானின் தலைநகரான திம்புவில் நடத்துவதற்கான அழைப்பை, இந்தப் பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தர் என்ற வகையில், இந்தியாவிடம் விடுத்திருந்தார்.
தாக்குதல் நிறுத்தமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது; பேச்சுவார்த்தைக்கான இடமும் முடிவாகியிருந்தது. விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சில மாதங்களுக்குள் தீர்வொன்றை எட்டுவதே, ரொமேஷ் பண்டாரியின் எண்ணமாக இருந்தது.
இதற்காக முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரும் பணி, இந்திய உளவுத்துறையான ‘றோ’ அமைப்பிடம் வழங்கப்பட்டிருந்ததாக, நாராயண் சுவாமி உள்ளிட்ட பலர் பதிவு செய்கிறார்கள். சாம, பேத, தான, தண்டம் என்ற எதையும் பயன்படுத்தி, இதைச் சாத்தியமாக்க, இந்தியா தலைப்பட்டிருந்தது.
Average Rating