சிதைக்கப்படும் தமிழரின் பலம்!!(கட்டுரை)
தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது.
வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்று எட்டப்பட்டு விட்டால், இன்றுள்ள எல்லாத் தமிழ்க் கட்சிகளுமே, காலாவதியாகி விடும் என்று தான் தோன்றுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற, உரிமைகளை வென்றெடுப்பதற்கான இலக்குகளை முன்னிறுத்தியே, பெரும்பாலான கட்சிகள் இயங்குகின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு விட்டால், இந்தக் கட்சிகள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகவே, மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கப் போவது, உறுதியான பின்னர், இந்திய தேசிய காங்கிரஸைக் கலைத்து விடவே காந்தி விரும்பினார். ஆனால், அவருடன் கூட இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திய தேசிய காங்கிரஸை அரசியல் கட்சியாக வைத்திருக்க விரும்பினார். அதை வைத்து, அவர்கள் அரசியல் செய்தனர்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸ், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், எப்படி ஒரு கட்சியாக நிலைத்திருக்கிறதோ அதுபோன்றே, தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வு ஒன்று கிடைத்த பின்னரும், தமிழ்க் கட்சிகள் இயங்கக்கூடாது என்றில்லை. ஆனால், அவை தமது இலட்சியத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
எனினும், அப்படியான நிலை தமிழ்க் கட்சிகளுக்கு வந்து விடும் போலத் தெரியவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும், வாய்ப்போ சூழலோ, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் செய்து வரும் கட்சிகள், தாராளமாகவே தமது நீண்டகாலப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
1980களின் தொடக்கத்தில், தமிழீழக் கோரிக்கைகளை முன்வைத்து, எப்படி புற்றீசல்களைப் போன்று ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றினவோ, அதுபோலத் தான், 2009 இற்குப் பிந்திய அரசியல் சூழலில், புதிது புதிதாகக் கட்சிகளும் கூட்டமைப்புகளும் உருவாகி வருகின்றன.
ஆயுதமேந்திப் போராடும் கடுமையான முயற்சிகளில் பல இயக்கங்கள் ஈடுபட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவ்வாறான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், வெறுமனே நான்கைந்து சுவர்களின்மேல், சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுத் தம்மையும் ‘இயக்கம்’ என்று கூறித் திரிந்தவர்களே, அப்போது அதிகமாக இருந்தார்கள்.
அவர்கள் எல்லோருமே, 1986 இற்குப் பின்னர், போன இடம் தெரியவில்லை. அவர்களின் இயக்கங்களுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியாது.
கிட்டத்தட்ட அதேபாணியில் தான், ‘நாங்களும் அரசியல் செய்ய வருகிறோம்; அரசியல் கட்சிகளை உருவாக்குகிறோம்’ என்று பலர் கிளம்பி இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அதை அடைவதற்கான வழிகள் என்ன? போன்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது.
வடக்கு மாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசிதரன், கடந்தவாரம், ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
ஏற்கெனவே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரத்தினம் 1969இல் ஆரம்பித்த, தமிழர் சுயாட்சிக் கழகத்தைப் பின்பற்றியே, இந்தக் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அப்போது, ஐ.தே.க அரசாங்கத்துடன் இணைந்து, அடையாள அட்டை சட்டமூலத்துக்கு ஆதரவாக, தமிழரசுக் கட்சி வாக்களித்திருந்தது. வி.நவரத்தினம் அதை எதிர்த்து வாக்களித்தார். அதனால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே, அவர் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தார்.
அதேவழியில்தான், தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு, அந்தக் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த அனந்தியும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழரசுக் கட்சியில் இருந்து அதிருப்தி கொண்டவர்கள் சிலர், அதிலிருந்து வெளியேறி, ‘ஜனநாயகத் தமிழரசுக் கட்சி’ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.
இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் வெளியேற விரும்புபவர்களையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதற்காக, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாக, காரணமொன்றை அனந்தி முன்வைத்திருக்கிறார்.
2013 மாகாணசபைத் தேர்தலில், 87 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அவர், தனக்குப் பின்னால், மிகப்பெரியதோர் அரசியல் பலம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும், அவரது கட்சியின் ஆரம்ப நிகழ்வில், 50 பேர் கூடப் பங்கேற்காமல் போனது தான் துயரம். அனந்தியை உசுப்பேற்றி விட்டு, அவரைப் புதிய கட்சியை ஆரம்பிக்கத் தூண்டிய அரசியல்வாதிகள் பலரும் கூட, அந்த நிகழ்வுக்கு வரவில்லை. இதுதான் அரசியல் என்பதை, அவர் புரிந்து கொள்ள நீண்ட காலம் செல்லும்.
தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான வி.நவரத்தினத்துக்கே ‘அந்த அரசியல்’ புரியாத போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த அனந்தி போன்றவர்களுக்கு, அந்த அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவை. இதுபோல இன்னும் பலர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் இலக்குகளுடன் கட்சிகளை உருவாக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இடம்பெற்றிருக்கிறார்.
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கட்சியை, உருவாக்கும் நோக்கில், தனது கட்சிக்குத் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்று பெயரிட்டிருக்கிறார்.
இதனால் தமிழ் அரசியல் பரப்பில், கட்சிகள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றவே தவிர, தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும், பணிகளை யாரும் முன்னெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய நிலையில் கட்சிகளோ சின்னங்களோ தமிழ் மக்களுக்கு அவசியமோ முக்கியமோ அல்ல. எல்லாத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளினதும் கொள்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பது தான்; சமஸ்டித் தீர்வை மய்யப்படுத்தியது தான்.
ஆனாலும், கல்லில் நார் உரிக்கின்ற அந்த முயற்சியைச் சாத்தியப்படுத்துவதற்காக, தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தும், பணிகளை, எந்த அரசியல் கட்சியுமே முன்னெடுக்கவில்லை. வெறும் அறிக்கை அரசியலுக்குள் தான், இன்னமும் உழன்று கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களுக்காக, சில ஆயிரம் பேரைக் கூட, அணி திரட்ட முடியாத வங்குரோத்து நிலையில் தான், தமிழ்க் கட்சிகள் எல்லாமே இருக்கின்றன. இப்படியான நிலையில், புற்றீசல்களைப் போல புதிதாக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பெருகுவது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகத் தெரியவில்லை.
தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமது கொள்கையின் வழி நடப்பதாகக் கூற முடியாது. அதற்காக, எல்லாக் கட்சிகளுமே, உதவாதவை என்று ஒதுக்கி விடவும் முடியாது. புதிய கட்சிகளை ஆரம்பிப்பதால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்று விடலாம் என்ற கற்பனை ஆபத்தானது. அது, கட்சிகளைப் பெருக்குமே தவிர, தமிழ்த் தேசிய அரசியலின் பலத்தைச் சிதைத்து விடும்.
ஏற்கெனவே தமிழ்க் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, பேரினவாதக் கட்சிகள் வடக்கில் தலையெடுக்கத் தொடங்கி விட்டன. மேலும் மேலும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிளவுபடும் போதும், பிரிந்து செல்லும் போதும், இந்த நிலை இன்னும் மோசமாகும். இது ஒரு கட்டத்தில் பேரினவாதக் கட்சிகளே வடக்கு மாகாணசபையை பங்கு போட்டுக் கொள்ளும் நிலைக்கும் வித்திடலாம்.
அரசியல் ரீதியாப் பொது இலக்கில் ஒன்றுபட்டுச் செயற்படத் தமிழ்த் தலைமைகளும், அரசியல்வாதிகளும் முன்வராத போது, அவரவர் தமது கொள்கையை முன்னிறுத்திக் கட்சிகளைத் தொடங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசிய பலம் சிதைந்து கொண்டே செல்லும். அதுதான் வரும் நாள்களில் நடக்கப் போகிறதேயன்றி, புதிய கட்சிகளின் பெருக்கம், தமிழ் மக்களுக்கான அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் தென்படவில்லை.
இந்தத் தருணத்தில், “தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்ற தந்தை செல்வாவின் கருத்தே, நினைவுக்கு வருகிறது.
Average Rating