ரணிலின் பதவி நீக்கப்பட்டதா, இரத்தாகி விட்டதா?(கட்டுரை)

Read Time:19 Minute, 9 Second

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகிய மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக சத்தியப் பிரமானம் செய்து கொண்ட அடுத்த கணமே, அப்போது நாடாளுமன்றத்தில் வெறும் 47 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார்.

அப்போது, அது சட்டவிரோதமானது என்றும் நாகரிகமற்ற செயலென்றும், மஹிந்த ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கூறினர்.

ஏனெனில், ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின், அதாவது 113 எம்.பிக்களின் ஆதரவை அந்த நபர் பெற்றிருக்க வேண்டும்.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டுக் கொண்டு, இப்போது அதே மைத்திரிபால, நாடாளுமன்றத்தில் 95 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்துள்ளார்.

மஹிந்தவுக்கு 113 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அவ்வாறு 113 எம்.பிக்களின் ஆதரவு அவருக்கு இருக்குமாயின், நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை, நவம்பர் 16 ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்திப் போடத் தேவையில்லை.

அவ்வாறு இருக்க, அன்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தமை சரி என்று கூறியவர்கள், இன்று அதே அடிப்படையில், மஹிந்தவைப் பிரதமராக நியமித்தமை, ஜனநாயகத்துக்கு முரணான செயல் என்கிறார்கள்.

இவ்வாறு, நாம் கூறுவதை, ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் விரும்பாதிருக்கலாம். எனவே நாம், அதைச் சற்று வேறு விதமாகக் கூறலாம். அதாவது, இன்று நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாது, மஹிந்தவைப் பிரதமராக நியமித்தமை சரி என்று கூறுபவர்கள், அன்று இதேபோல், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்த போது, “அது பிழை, ஜனநாயகத்துக்கு முரணான செயல்” என்றனர்.
அரசியல்வாதிகள் இவ்வாறு தமக்குச் சாதகமானதைச் சரியென்றும் பாதகமானதைப் பிழையென்றும் கூறலாம். அவர்களிடம் நேர்மையையோ மனசாட்சியையோ எதிர்ப்பார்க்க முடியாது.

ஆனால், சாதாரண மக்களும் குறிப்பாக நடுநிலையைப் பேணிச் செயற்பட வேண்டிய ஊடகவியலாளர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இவ்வாறு வாதிட்டுக் கொண்டு இருப்பதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது புரியவில்லை. இது அரசியல் அறிவின்மையா, மடமையா, அடிமை மனப்பான்மையா?

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தாம் தோல்வியடைந்து இருந்தால், ஆறடி நிலத்தடியில் தான் இருக்க வேண்டியிருக்கும் என மைத்திரிபால, ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுச் சில தினங்களுக்குப் பின்னர் கூறியிருந்தார்.

அதாவது, அந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால், அவர் தம்மைக் கொன்றிருப்பார் என்பதையே, அவர் வேறு விதமாக கூறினார்.

அதே மைத்திரிபால, தம்மை ஜனாதிபதியாக்கிய ஐ.தே.கவின் தலைவரை, இப்போது பதவியிலிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு, அன்று தம்மைக் கொன்றிருக்கக் கூடும் என்று, அவரே கூறிய மஹிந்தவுடன், கூட்டரசாங்கமொன்றை உருவாக்கி இருக்கிறார்.

அவ்வாறாயின், அவருக்கு மஹிந்த மீதிருந்த பயம் நீங்கிவிட்டதா? ஐ.தே.கவுடன் நடத்தும் இந்த அரசியல் வாழ்வு, அதையும்விடப் பயங்கரமானது என்று அவர் கருதுகிறாரா?

இந்த வினாக்களுக்கான பதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி ஆற்றிய உரையில், இருக்கிறது. தம்மைக் கொலை செய்வதற்கு ஒரு சதி நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்திருந்தும், ஐ.தே.க அரசாங்கம் அதைப் பாரதூரமாகக் கருதவில்லை என்றும், அது தொடர்பான விசாரணையை இழுத்தடித்ததாகவும், அந்த நிலையில் தமக்கு மஹிந்தவுடன் புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதைத் தவிர மாற்று வழி இருக்கவில்லை என்றும், அவர் அந்த உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விசாரணையில், அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்பதற்குச் சில ஆதாரங்களையும் ஜனாதிபதி முன்வைக்கிறார்.

சதி தொடர்பான ஒலிப் பதிவுகள் கிடைத்த போது, அவற்றைப் பரீட்சிக்காமலேயே, பொலிஸ்மா அதிபர், “அவை நம்பத்தகுந்தவையல்ல” என்று கூறியிருந்தார் என்பது, அவற்றில் ஒன்றாகும்.

உண்மையிலேயே சதி நடந்திருக்கிறது என்பதற்கு, ஜனாதிபதியிடம் ஆதாரங்கள் இருக்குமாயின் அவர், ஐ.தே.கவுடன் நடத்தும் அரசியல் வாழ்வு, மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குவதை விடப் பயங்கரமானது தான்.

ஏனெனில், மஹிந்த அவருக்கு எதிராக எதையும் செய்வதாக இருந்தால், அதற்குக் காலம் எடுக்கும். ஆனால், தற்போது ஆபத்து, கழுத்தைத் திருகும் அளவுக்கு நெருங்கிவிட்டது. எனினும், சதி என்பது உண்மையா, இல்லையா என்பது, மிக விரைவில் வெளியே வரத்தான் போகிறது. அது பொய்யாக இருந்தால், ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்க்க, மைத்திரி அந்தச் சதி பற்றிய செய்தியைப் பாவித்துள்ளார் என்று தெரியவரும்.

சதி பற்றிய செய்தி உண்மையாக இருந்தால் தற்போது, நடந்து இருக்கும் ஆட்சி மாற்றத்துக்கு, ‘நாமல் குமாரவின் புரட்சி’ என்று பெயர் வைக்கலாம். ஏனென்றால், நாமல் குமார என்பவரே, இந்தச் சதி பற்றிய தகவலை வெளியிட்டார்.

அடுத்ததாக, ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமையும் மஹிந்த ராஜபக்‌ஷவை அதற்குப் பதிலாகப் பிரதமராக நியமித்தமையும் சட்டபூர்வமானதா, சரியானதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இரு தரப்பாரும், தத்தமக்கு வேண்டியவாறு சட்டத்தை வியாக்கியானம் செய்கிறார்கள்.

பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த போதிலும் அரசமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம், அந்த அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என, ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை வாதிட்டார்; அது உண்மை.

அதேவேளை, இது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட பதவி நீக்கம் அல்ல; தேசிய அரசாங்கம் இரத்தாகியதன் விளைவாகப் பிரதமரின் பதவியும் தாமாகவே இரத்தாகிவிட்டுள்ளது என, மஹிந்த அணியினர் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, தேசிய அரசாங்கம் ஒன்றே பதவியில் இருந்தது. தேசிய அரசாங்கம் என்றால் நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களை வைத்திருக்கும் கட்சி, ஏனைய கட்சிகளுடன் அமைக்கும் அரசாங்கமே என அரசமைப்பு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களை வைத்திருக்கும் கட்சி ஐ.தே.கவே. அக்கட்சி, ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து, 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கியிருந்தது.

“கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியது. எனவே, தேசிய அரசாங்கம் தாமாகக் காலாவதியாகி விட்டது. அதன் அமைச்சரவையும் காலாவதியாகி விட்டது. அமைச்சரவை செல்லுபடியாகும் வரை மட்டுமே பிரதமர் பதவியில் இருப்பார் என அரசமைப்பு கூறுகிறது. எனவே, ஐ.ம.சு.மு அரசாங்கத்திலிருந்து விலகியதோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியும் காலாவதியாகி விட்டது” என மஹிந்த தரப்பினர் கடந்த சனிக்கிழமை கூறினர்.

இந்த வாதம் சரியென்று ஏற்றுக் கொண்டாலும், கடந்த வெள்ளிக்கிழமை ரணிலைப் பதவிநீக்கம் செய்யும் போது, ஜனாதிபதியோ, மஹிந்த அணியினரோ இந்த வாதத்தை அறிந்திருந்தார்கள் என்று கூற முடியாது.

அன்று இரவு, மஹிந்த பிரதமராகப் பதவிப் பிரமானம் செய்து கொண்டதன் பின்னர், ஜனாதிபதி, ரணிலுக்கு அனுப்பிய கடிதத்தில், “எனக்கு அரசமைப்பின் மூலம், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, “உங்களை, நான் பதவி நீக்கம் செய்துள்ளேன்” என்றே கூறியிருந்தார்.

தேசிய அரசாங்கம் காலாவதியாகி விட்டதால், உங்கள் பதவியும் காலாவதியாகிவிட்டது என அவர் கூறவில்லை.

மறுநாள், அதாவது சனிக்கிழமை மஹிந்த அணி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அவ்வணியின் தலைவர்களில் ஒருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸும் அரசமைப்பில் மற்றொரு வாசகத்தைக் காட்டியே, பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.

‘பிரதமர் இராஜினாமாச் செய்து அல்லது உயிரிழந்து அல்லது வேறு விதமாக அப் பதவி வெற்றிடமானால்….’ என்ற ஒரு வாசகத்தைச் சுட்டிக் காட்டிய அவர், அந்த ‘வேறு விதம்’ என்றால், ஜனாதிபதியால், பிரதமர் பதவிநீக்கம் செய்யப்படுதலே என வாதிட்டார்.

அப்போது ‘அந்த வேறு விதம் தான் இது’ என அங்கிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் கூறினார்.

இந்த மாநாட்டின் ஒரு கட்டத்தில், உதய கம்மன்பிலவே, அமைச்சரவை காலாவதியாகி விட்டால், பிரதமர் பதவியும் காலாவதியாகி விடுகிறது என்பதைத் திடீரெனக் கண்டு பிடித்தார்.

அவரும், அதை முதலில் முன்வைக்கவில்லை. அதாவது, அவரும் அதை ஊடகவியலாளர் மாநாட்டின் ஆரம்பத்தில், அறிந்திருக்கவில்லை என ஊகிக்கலாம்.

அதாவது, இந்த வாதம் சரியென்றாலும் சட்டத்தை மதியாமலேயே ஆட்சியை மாற்றினார்கள். பின்னர், தமது செயலை நியாயப்படுத்தும் முயற்சியின் போது, அது சட்டபூர்வமானது என்று, நியாயப்படுத்தும் பிரிவொன்றைக் கூறுகின்றார்கள்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவும் மற்றொரு பலமான வாதத்தை முன்வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை அடுத்து, ஐ.தே.க பிரதமர் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களுடன், சிறுபான்மை அரசாங்கமொன்றை உருவாக்கியது. அதன் பின்னர், அதில் ஐ.மு.சு.மு சேர்ந்து கொண்டு, தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதற்காக ஏற்கெனவே சத்தியப் பிரமானம்செய்து கொண்ட ஐவரும் மீண்டும் சத்தியப் பிரமானம் செய்து கொள்ளவில்லை. எனவே, ஐ.ம.சு.மு இப்போது விலகினாலும் அரசாங்கம், ஐ.தே.கவின் பழைய சிறுபான்மை அரசாங்கத்தின் நிலைக்கு வருகிறதேயல்லாது, காலாவதியாகி விடுவதில்லை என அவர் வாதிடுகிறார்.

பலமான வாதங்களும் சிலவேளைகளில் அரசியல் சூழ்நிலை காரணமாக அடித்துச் செல்லப்படுகின்றன. அதேவேளை, பாதுகாப்பு படைகளும் பொலிஸாரும் எங்கு சாய்கிறார்களோ, அந்தப் பக்கத்தின் வாதங்கள் எடுபடுகின்றன.

எனவே, இப்போது நாடாளுமன்றத்தில் ரணிலும் மஹிந்தவும் தத்தமது பெரும்பான்மையை நிரூபிப்பதே, சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே வழியாகத் தெரிகிறது.

மஹிந்தவுக்கு அந்தப் பெரும்பான்மை இப்போதைக்கு இல்லைப் போல் தான் தெரிகிறது. அதனால் தான், மஹிந்த ஐ.தே.கவிலிருந்து ஆட்களைப் பிடுங்கி எடுத்து, அந்தப் பெரும்பான்மைப் பலத்தைச் சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக, ஜனாதிபதி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, நவம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார் என ஊகிக்கலாம்.

ஏற்கெனவே, நான்கு ஐ.தே.காரர்கள் மஹிந்தவுடன் இணைந்து, கடந்த திங்கட்கிழமை அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், பலரை ஈர்த்துக் கொள்வதற்காகவே, 30 அமைச்சர்களை நியமிக்க சட்டத்தில் இடமிருந்தும், திங்கட்கிழமை 12 அமைச்சர்கள் மட்டும் நியமிக்கப்பட்டார்கள்.

ஐ.தே.கவின் கீழ் போட்டியிட்ட சிறுபான்மையின கட்சிகளின் உறுப்பினர்களே, மஹிந்த அணியின் பிரதான குறியாக இருக்கிறது. அந்தச் சிறுபான்மையின உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை விரும்பலாம்.

ஆனால், தமது வாக்காளர்களான தமிழ், முஸ்லிம் சமூகங்கள், மஹிந்தவை விரும்பாமையே அவர்களைத் தடுக்கும் காரணியாக இருக்கிறது. இருப்பினும், பணம், பட்டம், பதவிகள், மிரட்டல்கள் ஆகியன அரசியலில், எதையும் சாதித்துவிடலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

16 ஆம் திகதியாகும் போது, ரணில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய நிலைமை உருவானால், ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திப் போடலாம்.

அவ்வாறு ஒத்திப் போடாமல் இருந்து, ரணில் பெரும்பான்மையை நிரூபித்தால், நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியும் குழப்பமும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான சதி என்ற செய்தி, நிரூபிக்கப்படாவிட்டால் இந்த ஆட்சி மாற்றத்தை, ஜனாதிபதி எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. ஆனால், அரசியலில் நாகரிகம் என்பதற்கு, அவ்வளவு பெறுமதி இல்லாததால் சிலவேளை அது அவ்வளவு பிரச்சினையாகாது.

மஹிந்த பெரும்பான்மையை நிரூபித்தால், அவரது அணியினர் இதுவரை கூக்குரலிட்டவற்றைச் செய்வார்களா? டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பலப்படுத்தப்படுமா?

அர்ஜுன மகேந்திரன், இலங்கைக்கு அழைத்து வரப்படுவாரா? சீனாவுக்கு கைத்தொழில் பேட்டைக்காக ஹம்பாந்தோட்டையில் வழங்கப்பட்ட காணிகள் மீளப்பெறப்படுமா? விலைவாசி குறையுமா?

அதிகரிக்கப்ட்ட வரிகள் குறைக்கப்படுமா? ஜனாதிபதி கொலைச் சதி பற்றிய விசாரணையாவது முறையாக நடைபெறுமா? அநேகமாக இவை எதுவும் நடைபெறாது. பதவிக்கு வரும் வரை தான் அரசியல்வாதிகளின் அத்தனை கோஷங்களும்; சுதந்திரத்துக்குப் பின்னரான 71 வருட கால வரலாறு அதற்கு சான்று பகர்கிறது.

1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.தே.க இரண்டு முறை பதவிக்கு வந்துள்ளது. ஆனால், இரண்டு முறையும் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. பதவியில் இருந்த ஜனாதிபதிகளுடனான மோதல்களே இதற்குக் காரணமாகின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Pakistan நாட்டின் அதிர வைக்கும் 20 தகவல்கள்!!(வீடியோ)
Next post வடிவேலுவை விட செமயா பண்றியேம்மா(Soniya)!!(வீடியோ)