Breaking News Hospital!!(மருத்துவம்)
தமிழகத்தை உலுக்கிய பல சம்பவங்களின்போது ராயப்பேட்டை மருத்துவமனையும் கூடவே செய்திகளில் அடிபடும். மகாகவி பாரதியை யானை மிதித்தபோதும், துப்பாக்கியால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போதும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைதானபோதும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
அரசு ரீதியிலான கைதுகள், விபத்துகள் போன்ற பரபரப்பு சம்பவங்களின்போது ராயப்பேட்டை மருத்துவமனைதான் பிரேக்கிங் நியூஸாக இடம்பெறும்.
இதுபோல் எண்ணற்ற முக்கியத்துவங்களும், மிகப்பழமையான பெருமையும் கொண்ட ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை பற்றி உள்ளுறை மருத்துவ அதிகாரியான ஆனந்த் பிரதாப் நம்மிடம் பேசினார்.
‘‘ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 1912-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. அப்போது, தென்சென்னையைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருத்துவமனை பல வகையிலும் உதவிகரமாக இருந்தது. பொது மருத்துவம், குழந்தைகள் நலம், எலும்பு முறிவு சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, பால்வினை நோய்களுக்கான சிகிச்சை,
தோல், பல், நீரிழிவு நோய், இதயம், கதிரியக்க சிகிச்சை, புற்று நோய் அறுவை சிகிச்சை, சிறுநீரகத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, ரத்த வங்கி, நோய் குறியியல், மயக்கவியல், நுண்ணுயிரியல், உடல் இயக்கவியல், குடலியல் மற்றும் இரைப்பை, சித்த மருத்துவம் என இங்கு சுமார் 29 துறைகள் அனைத்து நவீன வசதிகளுடன் 834 படுக்கைகளுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, எங்களுடைய மருத்துவமனை, குழந்தைகள் நலம் (நவீனமயமாக்கப்பட்ட 3 மாடி கட்டடம்), எலும்பு முறிவு, புற்றுநோய் மற்றும் ரத்தக்காயம் சிகிச்சை போன்றவற்றில் உலக தரத்துடன் தலைசிறந்து விளங்குகிறது. பொது அறுவை சிகிச்சைப் பிரிவு 5 மாடி கட்டடத்திலும், புற்றுநோய்த்துறை 7 மாடி கட்டடத்திலும் தனித்தனியே அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இயங்கி வருகின்றன.
இதில், புற்றுநோய்க்கான மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க பிரிவு என மூன்று துறைகள் உள்ளன. மேலும், 11 நவீன அறுவை சிகிச்சைகள், நவீன வசதி கொண்ட செமினார் ஹால் ஒன்றும் இங்கு உள்ளது. இவை தவிர, தலை மற்றும் உடல் காய சிகிச்சைப்பிரிவு 6 மாடி கட்டடத்தில் இயங்கி வருகிறது.
எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் 24 மணி நேரமும் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்காக, குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் ரசீது தரப்படும். கடந்த 2012-ம் ஆண்டில், நூற்றாண்டை நிறைவு செய்த இம்மருத்துவமனையில் முதுநிலை மருத்துவர்கள் 38 பேர் உதவி மருத்துவர்கள் 190 பேர், செவிலியர்கள் 179, செவிலியர் கண்காணிப்பாளர் 17 பேர், அடிப்படை ஊழியர்கள் 150 பேர் என ஏராளமானோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குச் சேவை செய்வதற்காக இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்குத் தரமான உணவு வழங்குவதற்காக சமையலறை செயல்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ செவிலியர் கண்காணிப்பில், 7 சமையல்காரர்களும், 11 சமையல் உதவியாளர்களும் பணியில் உள்ளனர். நோயாளிகள் உபயோகப்படுத்துகிற படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை உறை முதலானவற்றைத் துவைத்துக் கொடுப்பதற்காக சலவைக்கூடம் இந்த மருத்துவமனையில் உள்ளது.
இதற்காக, நோயாளிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. தினசரி 1,800 முதல் 2,000 பேர் புறநோயாளியாக தரமான சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாக 600-லிருந்து 700 பேர் அனுமதிக்கப்பட்டு 500 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக, 2 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளன.
நூற்றாண்டை நிறைவு செய்த இந்த மருத்துவமனைக்குப் பல வரலாற்றுப் பின்புலங்கள் உண்டு. 1910-12-ம் ஆண்டில் காலா ஆசர்(Kala Azar) என்ற கொடிய நோய் பரவி இருந்தது. இந்நோயால் பாதிக்கப்பட்டவரின் தோல் ஆப்பிரிக்காவில் இருப்பவரைப்போன்று கன்னங்கரேல் என்று மாறிவிடும். லெய்ஷ்மேன் டோனாவான்(Leishman Donovan) முதல் மெடிக்கல் சூப்ரிடென்ட்) இந்நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தார்.
தற்போது, இந்நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இது ஓர் உதாரணம். அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம், சுகாதாரம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ குடிநீர் தவிர, இங்கு வருபவர்களின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக, 2 பெரிய கிணறுகள், 4 இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் தொடர்ந்து கிடைத்திடும் வகையில் 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. சுகாதாரத்தைச் சுற்றுப்புற தூய்மையைப் பேணும் வகையில், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை அடிப்படை ஊழியர்களால் மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. தென்சென்னையைச் சேர்ந்த சாமானியர்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது.
முக்கியமாக, கிழக்கு கடற்கரை சாலையில், விபத்துக்களில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படுபவர்களை நாங்கள் முழுவதும் குணப்படுத்தி அனுப்பி வைக்கிறோம். 2015-ம் ஆண்டில், சென்னை மாநகரை உலுக்கிய பெரு வெள்ளம், மெளலிவாக்கம் பல மாடி கட்டட விபத்து போன்றவற்றில் சிக்கி குற்றுயிரும், குலையுயிருமாக வந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சைகள் அளித்தோம்.
அந்தச் சமயத்தில், உயிரற்ற நிலையில் ஏராளமான சடலங்கள் கொண்டு வரப்பட்டன. டாக்டர் தொடங்கி, அடிப்படை ஊழியர்கள் வரை யாரும் வீட்டிற்குச் செல்லாமல், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுப்பது, சடலங்களை அகற்றுவது எனப் பணியாற்றியதை என்றைக்கும் மறக்கமுடியாது.
கடந்த ஆண்டு மனநோயாளி ஒருவர் வயிறு தொடர்பான பிரச்னைக்காக, குடல் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஆணி மற்றும் இரும்பு தகடுகளை விழுங்கி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டவரைப் பரிசோதித்தபோதுதான் இது தெரிய வந்தது’’ என்கிறார். குழந்தைகள் நல மருத்துவர் லதாவிடம் பேசினோம்…‘‘குழந்தைகள் வார்டில் பணியாற்றுவது மனதுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு முதலான பாதிப்புகளுக்குத்தான் அதிகளவில் குழந்தைகள் இங்கு சேர்கின்றனர். 30 படுக்கை வசதி கொண்ட இந்த வார்டில் ஒரு நாளில் 10 முதல் 20 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். 6 அல்லது 7 குழந்தைகள் முழுவதும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அனைத்து நோய்களுக்கான தடுப்பு ஊசி போடப்படுகிறது.
இளம்பிள்ளை வாதத்தைத் தடுப்பதற்கான போலியோ சொட்டு மருந்தையும் நாங்கள் இலவசமாக போடுகிறோம்.’’ ‘‘கடந்த 27 வருடங்களாக, இந்த மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றுகிறேன். நான் விருப்பத்துடன்தான் இவ்வேலையில் சேர்ந்தேன். நைட் ஷிஃப்ட், டே ஷிஃப்ட் என மாறிமாறி Duty வரும். ரத்த வங்கியில் 8 வருடங்களும், ஆர்த்தோ வார்டில் 5 வருடங்களும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவங்கள்.
ரத்த வங்கியில் பணியாற்றியபோது, ரத்தம் சேகரிப்பதற்காக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகள் போன்ற இடங்களுக்குச் செல்வேன். அவ்வாறு நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் தானாகவே முன்வந்து ரத்த தானம் செய்வார்கள். அவர்களிடம் ரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கவுன்சிலிங் செய்ததெல்லாம் மறக்க முடியாத அனுபவங்களாக இருக்கும்.
ஆர்த்தோ வார்டில் சிகிச்சை பெற வருபவர்கள் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவார்கள். அதனால், எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே நோயாளி, மருத்துவர் என்பது தாண்டியும் ஓர் அன்பான உறவு ஏற்படும். ஒரு சமயம் செளந்திரபாண்டியன் என்பவர் 2 கால்களும் உடைந்த நிலையில் அட்மிட் ஆனார். டாக்டர்கள், நர்ஸ் அவரை நன்றாக கவனித்துக் கொண்டோம்.
குணமாகிச் சென்ற பிறகு அந்த ஆட்டோ டிரைவர் எங்களை வந்து பார்த்தார். இதுமாதிரி நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது’’ என்கிறார் செவிலியர் கண்காணிப்பாளர் தனலஷ்மி. அவசர சிகிச்சை பிரிவு பற்றிப் பேசுகிறார் மருத்துவர் ரேகா. ‘‘இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தினமும் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள்.
விபத்து, தீக்காயம் , நெஞ்சுவலி போன்ற தீவிர நிலையில் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். அவர்களுக்கு முதல் உதவி மற்றும் முதல் கட்ட சிகிச்சை அளித்து அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கிறோம்’’ என்கிறார். ‘தற்போது எண்டோஸ்கோப்பி மூலம் இரைப்பை சம்பந்தமான மற்றும் மலக்குடல் கல்லீரல் ,பித்தப்பை போன்ற பரிசோதனைகள் நடைபெறுகிறது.
இது ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்படுகிறது. பாதிப்பைப் பொறுத்து அவர்களுக்கு மருந்துகள் மூலமும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து அவர்களுடைய வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்’’ என்கிறார் இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் கரோலின்.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் சிவச்சந்தர், ‘‘மாதத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரக பிரச்னைக்காக இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சாதாரண சிகிச்சையிலிருந்து அறுவைச்சிகிச்சைகள் வரை செய்யப்படுகிறது. சாதாரண சிறுநீரகக் கோளாறு முதல் சிறுநீரகப் புற்றுநோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை இங்கு நடைபெறுகிறது.
உள்நோயாளிகள் 40-கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுக்கு லேசர் அறுவைசிகிச்சை, கல் உடைப்பு அறுவை சிகிச்சை, பைப்லோர் அறுவைசிகிச்சை என அனைத்து நவீன சிகிச்சைகளும் அவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக செய்கிறோம். தனியார் மருத்துவமனையில் உள்ள நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் இந்த மருத்துவனையில் அளிக்கப்படுகிறது’’ என்கிறார்.
‘‘இங்கு புற்றுநோயை பொறுத்தளவு புற்றுநோய் மருத்துவத்துறை, கதிர் வீச்சு துறை, அறுவை சிகிச்சை துறை என மூன்றும் ஒரே இடத்தில் இயங்குகிறது. தமிழகத்திலேயே மூன்று துறையும் சேர்ந்து ஒரே இடத்தில் இங்கு இருப்பது சிறப்புக்குரியது என்றே சொல்லலாம். நோயின் தாக்கத்தை பொறுத்து இங்கு வரும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆரம்ப நிலை புற்றுநோய், நடுநிலையான புற்றுநோய், தீவிர புற்றுநோய் போன்றவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வெளிநோயாளிகள் 150க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். நோயாளிகளுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கு எந்தவித செலவும் இன்றி முதலமைச்சர் காப்பீடு மூலமாக இலவசமாக அளிக்கப்படுகிறது. காப்பீட்டு திட்டம் இல்லாதவர்களுக்க வருமானம் பொறுத்து அவர்களிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு புற்றுநோய் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது’’ என்று புற்றுநோய் மருத்துவத்துறை பற்றி விளக்குகிறார் கங்காதரன்.
நோயாளியின் சதை மூலம் நோய் கண்டறியும் முறை பற்றி லேப் டெக்னீஷியன் சசிகலா கூறும்போது, ‘‘நோயாளியின் பாதிப்படைந்த சதையை வெட்டி அதை ஸ்கேன் செய்து பரிசோதித்து நோய் கண்டறியும் முறையாகும். இதனுடைய முடிவுகள் மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நோயாளியின் சதை யை எடுத்து பரிசோதனையின் மூலம் கட்டிகள், புற்றுநோய்க்கட்டிகள், சரும நோய்கள் போன்ற அனைத்து நோய்களையும் கண்டறிய முடியும்’’ என்பதைக் குறிப்பிட்டார்.
நோயாளிகளுக்கு உணவு தயாராகும் இடத்திற்கு நேரடியாக வந்து உணவு தயாரிக்கும் முறை பற்றி டாக்டர் அனந்த பிரதாப் விளக்கினார்.
‘‘இங்கு 543 நோயாளிகளுக்கு உணவு தயாராகிறது. தற்போது இரவு உணவு தயாராகிறது. இங்கு உள்நோயாளிகளுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் உணவு தயாராகிறது.
சிறுநீரக நோயாளிகளுக்கான உணவு, நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு, ரத்த அழுத்த நோயாளிகளுக்கான உணவு என நோயாளியின் உடல்நிலைக்கேற்ப சிறந்த முறையில் தயாராகிறது. உணவு தயாரான பின் பணியாளர்கள் மூலம் நோயாளிகளின் படுக்கைக்கே எடுத்து சென்றும் கொடுக்கப்படுகிறது. உணவு தயார் செய்யும் பணியில் மொத்தம் கண்காணிப்பாளரை சேர்த்து 7 பேர் பணியாற்றுகிறார்கள்.’’
புறநோயாளி நந்தகுமாரிடம் மருத்துவமனை பற்றிக் கேட்டோம். ‘‘நான் தையல் கடை நடத்தி வருகிறேன். மோட்டார் சைக்கிளில் போகும்போது விபத்து ஏற்பட்டு என்னுடைய இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். தற்போது 500 ரூபாய் செலுத்தி சி.டி ஸ்கேன் எடுத்துள்ளேன்.
இங்குள்ள மருத்துவர்கள் என்னை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு போவதற்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட் தராமல் இன்னும் 2 நாட்கள் ஆகும் என்கிறார்கள். இதுபோல (சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்) தர கால தாமதம் ஆக்கினால் என்ன செய்வது’’ என கோபத்துடன் கூறுகிறார்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த உள்நோயாளி காந்தியின் மனைவி அமுல் கூறும்போது, ‘‘என்னுடைய கணவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக கூறுகிறார்கள்.
அரசு காப்பீட்டு திட்டம் மூலம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளார்கள். அம்மா காப்பீட்டு திட்டத்தில் 80 சதவீதம் வரை அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். என்னுடைய கணவர் இருக்கும் வார்டில் கழிப்பறை சுத்தமாக இல்லை, ஒழுங்காக தண்ணீர் வருவதில்லை ஒரே துர்நாற்றம் வீசுகிறது.
என்னுடைய கணவருக்கு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கவில்லை. வீட்டிலிருந்து சமைத்து வந்து தருகிறோம். இங்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நிலையமும் சுத்தமாக இல்லை. நான் வெளியில் சென்று லிட்டருக்கு 7 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குகிறேன்.
அதுபோல மருத்துவமனையில் லிஃப்ட் ஒழுங்காக வேலை செய்யவில்லை. 4 மாடியில் இருந்து இறங்கி இறங்கி ஏற வேண்டியிருக்கிறது.
இதனாலும் பெரும் மன உளைச்சலாக இருக்கிறது’’ என்கிறார். பல சிறப்புகளும் பெருமைகளும் கொண்ட இந்த மருத்துவமனையில், இதுபோன்ற சின்னச்சின்னக் குறைகளையும் சரி செய்தால் இன்னும் சிறப்பான மருத்துவமனையாக பிரேக்கிங் நியூஸில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை!
சுகாதார அச்சுறுத்தல்
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும், இதர பணிகளில் (ஹவுஸ் கீப்பிங்) தொழிலாளர்களையும் நிரந்தரமான பணியாளர்களாக மாற்றுவது இல்லை அல்லது அவர்களை பணி நிரந்தரம் செய்வதில்லை. அவர்களை ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் அவர்களை பணிக்கு சேர்த்து குறைந்த ஊதியமான அதிகபட்சம் 8,500 வரை ஊதியம் கொடுத்து நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்ட் முறையில் வேலை வாங்குகிறார்கள்.
அதேபோலதான் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் துப்புரவு பணிக்கு தனியார் கான்ட்ராக்ட் மூலம் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் சுகாதாரக் குறைவுக்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம். இது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பொதுவான சவாலாக உள்ளதை கவனித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Average Rating