சபரிமலை செல்ல தடை நீக்கம்!!(மகளிர் பக்கம்)
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் 2016ம் ஆண்டு ஆளும் இடது முன்னணி அரசு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
“இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய நாடு இருக்கிறது” என்கிறார் செயற் பாட்டாளர் ஓவியா. “கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் வரலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பு என்பது வரலாற்று சிறப்பு மிக்கது. 1957 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அரசியல் சாசன சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்தினார். அதற்கு என்ன காரணம் என்றால் பழக்கவழக்கங்களை தடை செய்ய முடியாது என்று இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்தப் பழக்கவழக்கங்களை வைத்து இந்த சமூகத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்திவிடுவார்கள். சாதியும் பழக்கவழக்கம்தான், பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதும் பழக்கவழக்கம்தான். இப்படி எல்லா அநியாயங்களையும் காப்பாற்றி வைத்துக்கொள்ள முடியும் என்பதால் பெரியார் அன்று சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். வளர்ந்த நாகரிக சமூகத்திற்கு ஏற்றவகையில் இத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த வழக்கில் பிற்போக்குத் தனமான தீர்ப்பை நீதிபதிகள் கொடுத்திருந்தால் இந்தியா மீது உலக நாடுகள் காறி உமிழ்ந்திருக்கும். இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் வருகின்ற தீர்ப்புகள் உள்நாட்டு செய்திகளில் வருவதற்கு முன்பே உலக நாடுகள் அதை செய்தியாக்குகின்றன. இப்படி உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, “நாங்கள் இன்னும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. பெண்கள் கோயிலுக்கு சென்றால் தீட்டாகிவிடும்” என்று சொன்னால் இந்தியாவின் மதிப்பு இறங்கிவிடும்.
இந்தியா இன்று சர்வதேச நாடுகளில், உலக வங்கிகளை நம்பியே களம் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பாலின சமத்துவத்திற்காக சட்டங்கள் இயற்றுவதும், தீர்ப்புகள் வழங்குவதும் உலகளாவிய அழுத்தமாகவும் நெருக்கடியாகவும் மாறியிருக்கிறது. பாலின சமத்துவத்தில் வளர்ந்த நாடு என்று சொல்லக்கூடிய இடத்தில் அரசும், சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டு மக்கள் இன்னும் அதற்குத் தகுதியாகவில்லை என்பதை இந்தத் தீர்ப்புக்கு வருகின்ற எதிர்ப்புகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
அரசும், சட்டமும் முன்னோக்கி நடந்தாலும்கூட பின்னால் வருவதற்கு தயாராக இல்லாத மக்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த மக்களை நாம் பண்படுத்த வேண்டி இருக்கிறது. இந்தத் தீர்ப்பை யார் பயன் படுத்த வேண்டும்? ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள பெண்கள், இந்தத் தீர்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பினை எதிர்ப்பவர்கள் ‘நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வரமாட்டார்கள்’ என்கிறார்கள். இதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் மதவாதிகள்? வராத பெண்களைப்பற்றி இந்தத் தீர்ப்பை எதிர்க்கிறவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
பெண்களை வரவிடாமல் தடுப்பதற்காகவே இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அய்யப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று ஆளும் கேரள இடது முன்னணி அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஆண்களுக்கு எப்படி ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைய அதிகாரமும், உரிமையும் இருக்கிறதோ அதே அதிகாரமும், உரிமையும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
இன்றைக்கு காலம் மாறியிருக்கிறது அதற்கேற்றவாறு மக்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஓவியா. “பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்கிற தீர்ப்பு வந்ததும் சபரிமலைக்கு வர விருப்பப்படும் பெண்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்” என்று சமூக வலைத்தளங்களில் மனிதி மகளிர் அமைப்பு அறிவித்திருந்தது. இது குறித்து மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வி கூறுகையில்…
“கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதே மனிதி அமைப்பில் உள்ள பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் தேவசம் போர்டு மேல் முறையீடு செய்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டோம். இந்த ஆண்டு பெண்களை அய்யப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்கிற தீர்ப்பு வரவில்லை என்றால் மதுரையில் பெண்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம், ஆனால் இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வந்த உடனே பெண்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டோம். அதை சமூகவலைத்தளத்தில் பதிவும் செய்தோம். இந்தத் தீர்ப்பை நாங்கள் பெண்களின் உரிமையாக பார்க்கிறோம். மனிதி பெண்கள் அமைப்பில் கடவுள் நம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள், முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். மனிதி அமைப்பு கடவுள் நம்பிக்கை சார்ந்து கோயிலுக்குச் செல்ல போகிறோம் என்று அறிவிக்கவில்லை. சட்டப்படி நமக்கு கிடைத்திருக்கக்கூடிய உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது என்பதே எங்களின் நோக்கம்.
பெண்களின் மீதான அடிமைத்தனம் புரையோடிக் கிடக்கின்ற நம் நாட்டில் இந்த தீர்ப்பை எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஒரு தொடக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அரசு பெண்களின் பயணத்துக்கான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும். காவல் துறை அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். பெண்களை பாலின பாகுபாட்டோடுதான் மதவாதிகள் இன்றும் நடத்துகிறார்கள் என்பதை இந்தச் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும் என்பதே இந்த பயணத்தின் நோக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இது போன்ற தீர்ப்புகள் வந்ததால்தான் இந்த பேரிடர் நடந்தது என்று மீண்டும் பெண்கள் மீது மதவாதிகள் பிற்போக்குத்தனமாக கூறினர். இது பெண்கள் மீது தொடுக்கப்படுகிற கருத்தியல் ரீதியான தாக்குதல். இப்படியான எதிர்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பை மதவாதிகள் நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள் என்பதற்காக சட்டரீதியாக பெறப்பட்டிருக்கக்கூடிய உரிமையை நடைமுறை வாயிலாக பெண்களுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
மத நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்பது மனிதியுடைய திட்டம் கிடையாது. ஆனால் மூட நம்பிக்கையை உடைக்க வேண்டும். மதம், பாலின பாகுபாட்டை புகுத்தினால் அந்த பாகுபாட்டை அறவே ஒழிக்கவேண்டும். கடவுள் என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமையாக மாற்றப்பட வேண்டும். சபரி மலைக்கு பயணிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பு கருதி கேரள அரசு பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்த பின்பு அடுத்த நவம்பர் 16ஆம் நாள் முதல் பெண்கள் செல்லலாம் என்று அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட பின்பு பயணத்தை தொடங்கலாம் என்று இருக்கிறோம். எங்களுடைய பயணம் எதிர்ப்பின் குறியீடு அல்ல… சட்டப்பூர்வமாக கிடைத்திருக்கக்கூடிய உரிமையை நிலைநாட்டுவதற்கான வழிமுறையாகப் பார்க்கிறோம். இதன் மூலம் இந்தத் தீர்ப்பை எதிர்க்கின்ற மக்கள் புரிந்து தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறோம். இந்தப் பயணம் அவர்களோடு ஓர் உரையாடலை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்” என்கிறார் செல்வி.
Average Rating