நோயின் அழகு பல்லில் தெரியும்!!(மருத்துவம்)
நோய்களை நாம்தான் தவறான உணவுமுறை மூலம் வரவேற்று அவதியுறுகிறோம். பசியெடுக்கும்போது சாப்பிடாமல் இருந்தால் கை, கால், உடல் அனைத்தும் சக்தியற்று, தலைவலி வரும். உடனே உணவு எடுத்துக் கொண்டால் சக்தி கிடைக்கும். இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், அதுவரைக்கும் பசியால் காதடைந்து, கண் மங்கி, சக்தியில்லாது துவண்ட மனிதன் ஒரு வாய் சோறு உள்ளே போனதும், போன சக்தியெல்லாம் கிடைத்தது போல் தெளிவாகி விடுவார். இதுதான் இயற்கை.
இந்த அதிசயத்துக்குக் காரணம், நம் நாக்கில் இருக்கும் சுவை மொட்டுகள். உணவுப்பொருள் எப்போது வாய்க்குள் செல்கிறதோ அப்போது அது நாக்கில் உள்ள மொட்டுகளில் பட்டு சுவையை உணர்ந்து, உடலின் பிராண சக்தியை அதிகப்படுத்தும். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுவைகளை நிச்சயம் உணர முடியும். அப்படியும் உணர முடியாத சுவைகளை நம் சுவை மொட்டுகள் உணர்ந்து சக்தியாக்கி, ஆற்றலாக்கி, ஆரோக்கிய சத்துக்களைக் கொடுக்கும்.
இப்படிப்பட்ட சுவைமொட்டுக்களை அழித்தொழிப்பதுதான் நம்மவர்கள் கண்டுபிடித்த ‘க்ளீனிங் ப்ராசஸ்.’ ஓர் இரும்பு அல்லது பிளாஸ்டிக் தகட்டை வைத்து நாக்கை அழுத்தும்போது பல சுவை மொட்டுகள் அழிந்துவிடும். ஒரு கட்டத்துக்குப் பிறகு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற ருசி தெரியாமலேயே போய்விடும். ஆரோக்கியத்துக்கு முதல் அடி சுவை இழப்புதான்.
பெரும்பாலானோர் சுவை இழப்பை கண்டு கொள்வதே இல்லை. வெறும் கையால் நாக்கைத் தேய்த்தாலே நாக்கு சுத்தமாகி விடும். வாரம் இரண்டுமுறை நல்ல சுத்தமான நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் போதுமானது. ஆனால், நம் மக்கள் பல் தேய்ப்பதை ஒரு கடமையாகத்தான் செய்கிறார்கள்.
பல்லில் இருக்கும் அழுக்கையும், கிருமிகளையும் நீக்குவதுதான் பல் தேய்ப்பதின் நோக்கம். அதற்கு உப்பு மட்டுமே போதும். நொனி (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) பழத்தினை வெயிலில் காயவைத்து ஒரு பங்கு இந்துப்பு சேர்த்து இடித்துப் பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்திக் கொள்வது சிறப்பு. இது பல் வலியை முழுதாக நீக்கும். நாம் உணவு உண்ட உடனேயே வாய் கொப்பளிப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது 15 முதல் 20 நிமிடம் கழித்துதான் கொப்பளிக்க வேண்டும். குழம்ப வேண்டாம்.
சாப்பிட்ட உடனேயே உணவின் சுவை நம் நாக்கை விட்டு அகல்வதில்லை. சற்று நேரம் இருக்கும். அப்படி இருக்கும்போது எச்சில் உருவாகும். அந்த எச்சில் உணவை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். சாப்பிட்ட உடனேயே வாய் கொப்பளிக்கும்போது உமிழ் நீருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் சொத்தைப்பல் தாங்க முடியாத வலியைத் தரும். சொத்தைப்பல் வலியை நீக்க கிராம்பை நன்கு பொடித்து அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை கலந்து வலிக்கும் பல்லில் வைத்தால் வலி போய்விடும்.
பல்லில் உள்ள கழிவுகளும் வெளியேறி சுத்தமாகிவிடும். சொத்தைப்பல் வருவதை தடுக்க முறையாக பல பொடியைத் தேய்க்கும் யுக்தியைக் கையாள வேண்டும். பல்லின் வேர் நரம்புகள் நேரடியாக மூளையுடனும், நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொண்டுள்ளதால் வலி அதிகமாக உணரப்படுகிறது. ஆலம் விழுது, வேலங்குச்சி, நாயுருவி வேர், கரும்பூலாங்குச்சி, வேப்பங்குச்சி, துவரங்குச்சி என நம்மைச் சுற்றியுள்ள மரத்தின் குச்சிகளை பயன்படுத்தி முன்னோர்கள் பல்லை சுத்தம் செய்திருக்கிறார்கள்.
குச்சியைக் கொண்டு பல் தேய்க்கும்போது உருவாகும் சுவையை சுவை மொட்டுகள் உணர்ந்து அதற்கேற்ப உள் உறுப்புகளைச் சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது. உதாரணத்துக்கு கசப்பு சுவை கணையத்தை இயக்குகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும். ஆலம் விழுதின் துவர்ப்பு ரத்த உற்பத்தியை தூண்டுகிறது. இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய உடல் இயக்கம் நடைபெறுகிறது.
சிறு குழந்தையிலிருந்து பல்லை கவனத்துடன் பாதுகாத்து வந்தால் ஆரோக்கியம் நிலையாகும். குழந்தை வளரும்போதே சுண்ணாம்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான புளிச்ச கீரை, கேழ்வரகு, கம்பை உணவாக கொடுக்க வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் இயற்கையான சுண்ணாம்புச் சத்து உடலில் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அது எலும்புக்கு ஆற்றலைக் கொடுத்து, பல் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பாக இருக்கும். எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது!
Average Rating