உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்!!(மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட வெள்ளரிக்காயை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: வெள்ளரி, கொத்துமல்லி, பெருங்காயப்பொடி, உப்பு. செய்முறை: வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பெருங்காயப் பொடி, உப்பு, கொத்துமல்லி இலைகள், தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன் நீர் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். வெள்ளரிக்காய் நீர்ச்சத்தை மிகுதியாக கொண்டது. கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியதாக விளங்குகிறது. நோய் நீக்கியாக விளங்கும் இது பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டது.
பல்வேறு நன்மைகளை உடைய கொத்துமல்லி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. குடல் புண்களை ஆற்றக் கூடியது. கொப்புளங்கள் வராமல் தடுக்கும். நாவறட்சியை போக்க கூடியது. வெள்ளரி, கொத்துமல்லி சேர்ந்த இந்த பானம் நமக்கு மிகுந்த பலனை கொடுக்கிறது. மாங்காயை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், பனங்கற்கண்டு, ஏலக்காய்.
செய்முறை: மாங்காயை துண்டுகளாக்கி சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, சிறிது ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து குடித்துவர உடல் குளிர்ச்சி அடையும். வெயிலில் சென்று களைத்து வீடும் வரும்போது இதை குடித்தால் உற்சாகம் ஏற்படும். நெஞ்செரிச்சலை போக்கும். செரிமானத்தை சீர் செய்யும். உள் உறுப்புகளுக்கு தூண்டுதலை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மாங்காயை குறைவாக சாப்பிடும்போது உடலுக்கு குளிர்ந்த தன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிடும்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். வயிற்றுபோக்கு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி தரும் மாம்பழ கூழ் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மாம்பழம், ஏலக்காய், வெல்லம் சுக்குப்பொடி. செய்முறை: மாம்பழத்தின் சதை பகுதியை எடுத்து வெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி சேர்த்து அரைத்து எடுக்கவும். இதை சாப்பிட்டுவர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் தரக்கூடியதாக இது அமையும்.
சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் கனி மாம்பழம். இது, உடலுக்கு பலம் தரும் உன்னத சத்துக்களை உள்ளடக்கியது. வைட்டமின் சி, இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை கொண்டது. பசியை அடக்க கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்பான இந்த பானங்களை கோடைகாலத்தில் குடித்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோடை காலத்தில் வெயிலால் ஏற்படும் கட்டிகளுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். அதிக வெயிலால் உடல் உஷ்ணமாகி கட்டிகள் ஏற்படும். சந்தன கட்டையை இழைத்து, கடுக்காய் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து மேல்பற்றாக போடுவதன் மூலம் கட்டிகள் உடையும். வலி இல்லாமல் போகும்.
Average Rating